சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு முதல்முறையாக ஜாதி என்பது எண்ணற்ற மக்களால் விவாதிக்கப்படும் ஒன்றாக இப்பொழுது மாறியுள்ளது. ஜாதி, ஜாதி சார்ந்த அநீதிகள், சலுகைகள் குறித்துச் சூடான விவாதங்கள் Facebook, Twitter, Quora, Reddit, Instagram என்று எங்கும் நடக்கிறது. ஜாதி பற்றிய இந்த உரையாடல் ஒரு அறிவிற் சிறந்த ரோஹித் வெமுலா எனும் இளைஞனின் மரணத்துக்குப் பிறகே நடக்கிறது என்பது இதயத்தைப் பிசைகிறது. எனினும், இந்த உரையாடல் பல காலத்துக்கு முன்னரே நடைபெற்றிருக்க வேண்டும். நீங்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேராத ஒருவர் என்றால் ஐந்து நிமிடம் ஒதுக்கி இந்தப் பதிவை படித்துவிட்டு இந்த விவாதங்களில் ஆழமாக இறங்குங்கள். ரெடி?
1. ஜாதியே இல்லை என்கிறீர்களா?:
நீங்கள் ஜாதி சார்ந்த பாகுபாட்டை, வன்முறையை, தீண்டாமையைச் சந்திக்காவிட்டால் அப்படி எதுவும் சமூகத்தில் இல்லை என்று எளிமையாக எண்ணிக்கொள்ளக்கூடும். ஆனால், பல லட்சம் தலித்துகளுக்கு அது அன்றாடம் நடக்கின்ற ஒன்றாகும். எனவே. ‘ஜாதி எல்லாம் போன தலைமுறையோடு போச்சு!’ என்றோ, ‘இப்பலாம் யாருங்க ஜாதி பாக்குறா’ என்றோ குரல் எழுப்புவதற்கு முன்னால் கொஞ்சம் அந்தப் பாகுபாட்டைச் சந்தித்த தலித்துகளின் கதைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள்.
2. ஜாதியை புரிந்து கொள்ளுங்கள்:
ஜாதி சார்ந்த ஒடுக்குமுறைகள் குறித்து அறிய நீங்கள் முயலுங்கள்/ நம்முடைய பாடப்புத்தகங்கள் இவை குறித்துப் போதுமான அளவுக்குபேசுவதில்லை. ஏன் இடஒதுக்கீடு, கோட்டாமுறை தேவைப்படுகிறது என்று புரிந்துகொள்ள முயலுங்கள். ஏன் சில ஜாதிகளின் பெயர்கள் இப்பொழுதும் வசைச்சொல்லாக உபயோகிக்கப்படுகிறது என்றும், இந்த ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் எப்படிப்பட்ட உளவியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்று அறிந்துகொள்ளுங்கள். அண்ணல்அம்பேத்கரின் Annihilation of Caste, சமீபத்தில் வெளிவந்த Hatred in the Belly நூல் ஆகியவற்றில் துவங்கலாம். dalitdiscrimination.tumblr.com தளத்தை அவசியம் அவ்வப்பொழுது பாருங்கள்.
3. உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்:
ஜாதி அமைப்புகள் தனிக்காட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக மட்டும் இயங்கவில்லை. ஒருவர் அநியாயமாக ஒடுக்கப்படுகிறார் என்றால், அது உங்களைப் போன்ற தலித் அல்லாதவேறொருவருக்குப் பயனைத் தருகிறது என்று உணருங்கள். கல்வி, சொத்துஆகியவற்றைத் தொடர்ந்து பெற்ற உங்களின் முன்னோர்களின் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல் வந்து சேர்ந்திருக்கின்றது, வரலாறு நெடுக நீங்கள் அனுபவித்த இந்த அம்சங்கள் இன்றும் மிகக்கடுமையாகத் தலித்துகளுக்கு மறுக்கப்படுகின்றது. உங்களுக்கான வாய்ப்புகள் நீங்கள் ஒன்றை செய்ததாலோ, செய்யாததலோ வந்துவிடவில்லை. உங்களுக்குப் பரம்பரையாகத் தொடரும் வாய்ப்புகளும், தலித்துகளுக்கு வெகுகாலமாகத் தொடரும் ஒடுக்குமுறையும் தொடர்ந்து வந்து சேர்ந்திருக்கின்றன. நீங்கள் அதன் இருப்பை மாற்றமுடியாது என்றாலும், அப்படியொரு அநீதி இருப்பதை ஏற்றுக்கொள்ள நிச்சயம் முடியும்.
4. உங்களைப் பற்றித் தனிப்பட்ட தாக்குதல் இல்லை:
உங்களை யாரும் தனிப்பட்ட முறையில் குறைசொள்ளவோல்லை. நீங்கள் ஜாதிய மனப்பான்மை கொண்டவர் இல்லையென்றால், ஜாதி சார்ந்த முன்முடிவுகள் உங்களுக்கு இல்லையெனின், ஜாதியின் சிக்கலான செயல்பாட்டை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் விதிவிலக்கு, பொதுவிதி அல்ல. #NotAllUpperCastes என்று சொல்லிக்கொள்வது இந்தபிரச்சனையில் இருந்து தேவையற்று திசைதிருப்பும் போக்காகும். ஒரு கார் ஒரு நபரை இடித்துக் கொல்கிறது என்கிற பொழுதுநீங்களோ, மற்ற எல்லா ஓட்டுனர்களும் கொல்வதில்லை என்று நீங்கள் கதறுகிறீர்கள். காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய ஒரு உயிரை உங்களுக்கு அனுதாபம் தேடும் மும்முரமான பணியில் சாகடித்து விட்டீர்கள் எனச் சொல்லலாம்
5. தலித் அடையாளம் உங்களைக் காயப்படுத்த அல்ல:
தலித் அடையாளம் வெகுகாலமாக அவமானகரமாகப் பார்க்கப்பட்டு, படிப்படியாகப் பெருமையான ஒன்றாக மாறிவருகிறது. தலித் பெருமை உங்களைக் காயப்படுத்த பேசப்படவில்லை, அது எங்களின் நிலையை அடிக்கடிநினைவுபடுத்திக்கொள்ளப் பயன்படுகிறது மீண்டும் சொல்கிறேன், இது உங்களைப் பற்றி அல்ல, எங்களைப் பற்றியது.
6. நீங்கள் ஜாதியற்றவர் இல்லை:
எரியும் நெருப்பில் பிறர் நடக்க, நீங்கள் மலர்மெத்தையின் மீது நடப்பதைப் போலதான் நான் ஜாதியே பார்ப்பதில்லை என்பதும். உங்களுடைய முன்னோர்களுக்குக் கல்வி மறுக்கப்படவில்லை, பல்கலைக்கழகங்கள் அவர்களின் கடைசிப் பெயருக்காகவோ, அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்காகவோ கல்வி நிலையங்களை விட்டு தூக்கிஎறியப்படவில்லை. பலலட்சம் தலித்துகள் இன்னமும் இப்படிப்பட்ட கொடிய யதார்த்தத்தோடு தான் வாழ்கிறார்கள். ஜாதியில்லை என்று நீங்கள் சொல்கிற அதே தருணத்தில் எண்ணற்றோர் அதே ஜாதி அடையாளத்துக்காகக் கொடும் அடக்குமுறை, வன்முறைகளைச் சந்திக்கிறார்கள். அந்த அடையாளத்தை அவர்கள் விட விரும்பினாலும் சமூகம் அனுமதிப்பதில்லை. முன்முடிவுகள் அவர்களைத் தொடர்ந்துவேட்டையாடி, வன்முறையால் மண்டியிட வைக்கிறது. உங்களின் ஜாதியும், எங்களின் ஜாதியும் உயிரோடுதான் இருக்கின்றன. அப்படியொன்று இல்லவே இல்லை என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருள்வதைப் போலத்தான்.
7. கருணையுள்ளவர் இல்லை நீங்கள் என உணருங்கள்:
உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள், தலித்துகள் மீதான அடக்குமுறைகளை அங்கீகரிப்பது என்பதால் நீங்கள் யாருக்கும் எந்த அனுகூலமும் செய்யவில்லை, ஜாதி பற்றிய உரையாடலில் நீங்கள் பங்கெடுக்கிறீர்கள் அவ்வளவுதான். பொதுநலனில் அக்கறையுள்ள., தேசபக்தரான ஒரு குடிமகனாக இந்தவரலாற்றைத் தெரிந்து கொள்வது உங்களுடைய கடமை. நீங்கள் தலித்துகளோடு ஜாதி சார்ந்த உரையாடல் நிகழ்த்துவதால் மட்டுமே அவர்கள் உங்களுக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஜாதி பற்றிய சிக்கலான உரையாடலை புரிந்துகொள்வதால் நீங்கள் மேலானவர் என்று எண்ணுவதே ‘ஜாதியப்பார்வை’ தான். உங்களின் கருணையான அணுகுமுறையை விட எங்களைச் சமமாக நடத்துவதையே நாங்கள் விரும்புகிறோம்.
ஒரு செழிப்பான சூழலில் இருந்துகொண்டு ‘ஐயோ பாவம்’ என்று உச் கொட்டுவதும் உங்களுக்கான வாய்ப்புகளுக்கு ஒரு எடுத்துகாட்டு தான்/
8. உங்கள் பிறப்பை குறை சொல்லவில்லை:
ஆதிக்க ஜாதியினர் பெற்றிருக்கும் வாய்ப்புகள் குறித்துப் பேசுவது நிகழும் பொழுது, ‘நான் முடிவு செய்யமுடியாதஎன் பிறப்பை வைத்துக் குறை சொல்லாதீர்கள்.’ எனச் சொல்லாதீர்கள். உங்களின் பிறப்பை யாரும் குறை சொல்லவில்லை, எங்களுக்குக் கிடைக்காத பல கிடைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி நீங்கள் என்று சுட்டிக்காட்டுகிறோம். தற்போதைய உரையாடல் வாய்ப்புகள், முன்முடிவுகள் பற்றிய ஒன்று மட்டுமே அன்றி அது தனிப்பட்ட நபர்களைப் பற்றியது அல்ல
9. கோபத்தைக் கேள்வி கேட்கவும்:
பகுத்தறிவான ஒரு கருத்து உங்கள் முன் வைக்கப்படுகின்ற பொழுது நீங்கள் தொடர்ந்து கொதித்துப் போகிறீர்கள் என்றால், இப்பொழுதாவது ‘ஏன்?’ எனக் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களைவிடக் கீழானவர் என்று நினைத்த ஒருவர் உங்களுக்குச் சமமாகப் பேசுவதால் அப்படி அருவருப்பு தோன்றுகிறதோ. குறிப்பு: இப்படித்தான் முன்முடிவும் காட்சியளிக்கும்.
எனினும், இந்த அர்த்தமுள்ள விவாதத்துக்கு நீங்கள் தயாராக இல்லை என்றால் மேற்சொன்ன எதுவும் உங்களுக்குப் பொருந்தாது. மேலும், உங்களை யாரும் பொருட்படுத்தவும் இல்லை.
மூலம்: Yashica Dutt http://www.huffingtonpost.in/…/so-you-want-to-meaningful_b_…
தமிழில்: பூ.கொ. சரவணன்
முகப்புப் படம்: Dalit Diva