மு. கந்தசாமி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தோழருடன் பேசிக்கொண்டிருந்தேன். அந்தத் தோழர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
என்ன தோழர் இந்தக் காலத்துலயும் இப்படி மோசமா இருக்காய்ங்களே என்று ரொம்பவே ஆதங்கப்பட்டார்.
என்ன விஷயம் தோழர்? என்று கேட்டேன்.
நம்ம ஊர்ல அறுவடை நடந்துக்கிட்டு இருக்கு. அறுவடை மெசின் ஒன்று ஈரோடு பகுதியில இருந்து வந்திருக்கு. மேப்படியாய்ங்க (ஆதிக்க சாதியினர்) அந்த அறுவடை மெசினை பயன்படுத்த மாட்டேன்கிறாய்ங்க. என்ன விசயம்னு பார்த்தா, அந்த மெசின்ல பச்சை சிவப்பு கலர்ல பெயின்ட் அடிச்சிருக்கு. அதனால, அது நம்மளோட மெசின்னு நெனைச்சுக்கிட்டு…“அந்த சாதிப்பயலுகளுக்கு கதிரடிக்கிற மெசினை வச்சி, நம்ம கதிரடிக்கிறதா” என்று கேவலமா சொல்றாய்ங்க என்றார்.
அதைக்கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இதில் ஒரு நுட்பமான விசயம் இருக்கிறது. அந்த அறுவடை மெசின் ஈரோடு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. கொங்கு வேளாளர்களுக்குச் சொந்தமானது. கொங்கு வேளாள கவுண்டர்கள் தங்களின் கொடியில் பச்சை சிவப்பு நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, தேவேந்திர குல வேளாளர்களும் பச்சை, சிவப்பு நிறங்களை தங்கள் கொடியில் பயன்படுத்துகிறார்கள்.
புதிய தமிழகத்தின் கொடி மேலே சிவப்பு, கீழே பச்சை.கொங்கு வேளாளர்களின் கொடி மேலே பச்சை, கீழே சிவப்பு.
பச்சை, சிவப்பை பார்த்துவிட்டு இது தேவேந்திரகுல வேளாளர்களோட மெசின் என்று நினைத்துவிட்டார்களாம்.
இந்தக் காலத்துக்கு யாரு சார் சாதி பார்க்குறா?
மு. கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர். இவரை இங்கே பின் தொடரலாம்.