“கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” விசாரணை படத்தில் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல்.
வெற்றிமாறன், தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘விசாரணை’. இடைவேளை வரை கோவையில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றும் மு.சந்திரகுமார் அவர்களின் ‘லாக்அப்’ நாவலை அடிப்படையாக வைத்தும், அதற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்திலும் ‘விசாரணை’ நடக்கிறது.
தமிழ்சினிமாவின் அனைத்துக் கதாநாயகர்களும் ஏதாவது ஒரு திரைப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருப்பார்கள். கதாநாயகர்களே ஏற்று நடித்த வேடம் என்பதால், சாதாரண ரசிகனும் மக்களும் என்கவுண்டர் என்ற காவல்துறையின் திட்டமிட்டப்பட்ட கொலைகளுக்கு ஆதரவான மனநிலையிலேயே இருப்பார்கள். அந்தப் பொதுப்புத்தியை உடைத்தெறியும் வகையில் மிகச்சிறப்பான திரைமொழியில் வெளியாகி உள்ளது விசாரணை. நமக்கு இப்படத்தில் ஒரு நெருடல் உள்ளது.
அவசியமே இல்லாமல், இந்தப்படத்தில் ஒரு இடத்தில், நேர்மையான அதிகாரியான இன்ஸ்பெக்டர் (சத்திரக்கனி) முத்துவேலைப் பார்த்து, அஸிஸ்ட்டெண்ட் கமிஷனர் “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” என்று திட்டுகிறார்.
இயல்பாகவே, ஒவ்வொரு வார்த்தையைம் அளந்து அளந்து கவனமாகப் பேசும் பழக்கமுடையவர் இயக்குநர் வெற்றிமாறன். சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்த ஒரு திரைப்படத்தில் மிகவும் கவனமெடுத்துத்தான் வசனங்களை எழுதியிருப்பார். அப்படியானால் இந்த வசனம் வந்தது எப்படி? எதற்காக?
அந்த வசனத்தைப் பயன்படுத்தும் காட்சியைப் பொறுத்துப் பார்த்தால் தவறாக இருக்காது என்று விளக்கம் சொல்லப்படலாம்.
ஆனால் எதற்காக அப்படி வலிந்து அந்த வசனத்தை வைக்கவேண்டும்? ஒரு அதிகாரியைத் திட்டுவதற்கு வேறு வார்த்தைகளே இல்லையா? இடஒதுக்கீட்டால் அரசுப்பதவிகளுக்கு வருபவர்களுக்கு தகுதி – திறமை இருப்பதில்லை என்று பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொதுப்புத்திக்குத் தீனி போடும் இந்த வசனம் ‘விசாரணை’ படத்திலிருந்து நீக்கப்பட வேண்டியது மிகவும் அவசரமான, அவசியமான செயல். அந்த இடத்தில் ஒரு Beep போடுவது மிகவும் எளிது தானே?