வெமுலா ரோஹித்தின் தற்கொலை தேசிய அளவில் செய்தியாகியிருக்கிறது. தேசத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் புரையோடிப்போயிருக்கிற ஜாதியின் கோர முகம் மீண்டும் வெளித்தெரிந்திருக்கிறது. ஊடகங்கள் அந்த மாணவனை ‘தலித் ஸ்காலர்’ என்று அடையாளப்படுத்துகின்றன. அவன் தூக்கை நெருங்குவதற்கு முன்னால், எழுதி வைத்தக் கடிதத்தில் ”வெறுமையாக உணர்கிறேன்; அதுதான் மிகவும் கொடுமையாக இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறான். அதில் அவ்வளவு உண்மை இருக்கிறது. இந்த சமூகம் ஒரு தலித்துக்கு எப்போதும் கையளிப்பது இந்த வெறுமையைத்தான். ஆனால் இது ஏன் ஒரு ஆராய்ச்சி மாணவனை தற்கொலையில் கொண்டு போய் நிறுத்துகிறது?
ஒடுக்கப்படும் சாதாரண தலித் இந்த வெறுமையை எதிர்கொள்வதற்கும், அறிவுஜீவி தலித் எதிர்கொள்வதற்கும் மிகுந்த வேறுபாடுகள் இருக்கின்றன.
கல்வி வாய்ப்பற்ற ஒரு தலித், இந்த ஜாதிய ஒடுக்குமுறைக்குப் பின்னால், தனது தகுதி குறித்த இயலாமையில் குமைந்து அதை மவுனமாகக் கடந்து போக நேர்கிறது. இருப்பினும், கல்வியின் மூலம் இதிலிருந்து தப்ப முடியும் என்று அவர் நம்புகிறார். இங்கு கல்வி என்பது தங்களை தற்காத்துக்கொள்ளும் குறைந்த பட்ச அதிகாரத்தை அடைவதற்கான கருவி என்று அவர் உணர்வதால், அதற்காக வாழ்வின் பெரும்பகுதியை பணயம் வைக்கிறார். ஒரு நம்பிக்கையை அவரால் கைகொள்ள முடிகிறது.
ஆனால் எதார்த்தத்தில் நன்றாகப் படிக்கிற ஒரு தலித், இத்தகைய உயர்கல்வி நிறுவனங்களை அடைகிறபோது, புற சமூகத்தில் எதிர்கொள்ளும் வெறுமையை விட, கூடுதலான வன்மத்தை எதிர்கொள்ள நேர்கிறது. அதுதான் நம்பிக்கைகள் சிதையும் இடம். ஒரு மாணவனால் பொறுத்துக்கொள்ள முடியாத வெறுமை. அதுதான் தற்கொலையை நோக்கி அவனைத் தள்ளுகிறது.
“பன்னியாண்டி” என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த செந்தில் என்கிற தமிழக மாணவர், 2008-ம் ஆண்டு ஐதராபாத் பல்கலையில் பி.ஹெச்.டி படித்தபோது, முனைவர் பட்டத்திற்கு பயின்று கொண்டிருந்த அத்தனை மாணவர்களுக்கும் வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். செந்தில் மட்டும், வழிகாட்டுவதற்கு யாருமில்லாமல், தனித்து விடப்பட்டார். வழிகாட்டி நியமிக்காததை கண்டுகொள்ளாத பல்கலை, எவ்வித உதவியும் இன்றி தேர்வு எழுதிய செந்தில், ஒரே ஒரு பாடத்தில் தோல்வியுற்றதை பெரிய பிரச்சினையாக்கியது. இதைக் காரணமாக வைத்து அவருடைய உதவி தொகை நிறுத்தப்பட்டது.
குடும்பத்தைக் காப்பாற்றும் வயதில் முனைவர் பட்டம் பயிலும், முதல் தலைமுறை தலித் மாணவனுக்கு வழங்கப்படும் உதவித்தொகை என்பது , அவனுடைய கல்விக்காக , எங்கோ ஒரு மூலையில் வறுமையின் கைகளில் தங்களை பணையம் வைத்திருக்கும் அவனுடைய குடும்பத்தின் ஒரு வேளை பசியை நிவர்த்தி செய்யக்கூடியது. அதுவும் மறுக்கப்படும் நேரத்தில்தான் அவன் இந்த உலகத்தின் மீது நம்பிக்கையற்று போகிறான். அந்த வெறுமையை உணர்ந்த நொடியில்தான் செந்தில் தற்கொலை செய்து கொண்டார். ரோஹித் வெமுலாவைப் போலவே.
ஒரு புறம், தான் தலித்தாக இருப்பதால் தனது அறிவு எல்லைகள் இவ்வளவுதான் என்கிற இந்த சமூகத்தின் பொது உளவியல் செலுத்தும் தடைகளை எதிர்த்து அவர்கள் முன்னேற வேண்டியிருக்கிறது. அந்த கருத்துக்கு எந்தப் பெறுமதியும் இலையென்று தெரியும். இருந்தாலும் யாருக்கோ அதை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
ஒரு பார்ப்பனனின் தேர்வுத் தோல்வியும், ஒரு தலித்தின் தோல்வியும் ஒன்றல்ல எப்போதும். முன்னது சுட்டுவது அந்த மாணவனின் தோல்வியை. பின்னது சுட்டுவது ஒரு பிறப்பின் இயலாமையை. இது நமது கல்வி நிறுவனச் சூழலின் சகிக்க முடியாத அபத்தம்.
“உதாரணமாக, `தகுதி, திறமைகள் நிரம்பி வழியும்’.உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள், தலித் மாணவர்களை சராசரிக்கும் கீழாக நடத்துவதுடன், தலித் மாணவர்களுக்கு இது போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பதற்கு தகுதி இல்லை என்று கூறி பலரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியும் விடுகின்றன என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும். இட ஒதுக்கீட்டின் மூலம் இக்கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளப்படவேண்டிய தலித், பழங்குடியின மாணவர்களில் சரிபாதிப்பேர் சேர்த்துக்கொள்ளப்படுவதேயில்லை என்பதும், அவ்வாறு இடம் கிடைத்த மாணவர்களிலும் 25 சதவீதம் பேர் தொடர்ந்து கல்வி கற்கத் தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றப்படுவதும்” தலித்துகள் உயர்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கான வெளிப்படையான சாட்சி.
2014-ம் ஆண்டு மும்பை ஐ.ஐ.டி கல்லூரி வளாகத்தின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட பொறியியல் பட்டாதாரி மாணவனான அன்கித்தின் மரணத்திற்கு இன்று வரை, நிர்வாகத்தாலோ, போலீசாலோ, காரணம் கூற முடியவில்லை. வழக்கம் போல “நிறைய பாடங்களில் தோல்வியுற்றதன் காரணமாகவும்,ஐ.ஐ.டி –யின் பாடத்திட்டத்தைப் பயிலும் திறன் இல்லாததன் காரணமாகவும் அன்கித் தற்கொலை செய்து கொண்டதாக இன்று வரை அந்நிறுவனத்தின் பேராசிரியர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜாதியின் கொடூரங்கள் தெரியாமல் வளர்க்கப்பட்ட மத்திய தர தலித் குடும்பத்தை சேர்ந்த அன்கித்தால், ஐ.ஐ.டி.யில் வெளிப்படையாகப் புழங்கிய ஜாதி வன்மத்தை எதிர் கொள்ள முடியவில்லை என்றும் அதனால் தன்னுடைய மகன் வெறுமையாகவும், தனிமையாகவும் இருந்ததை, புரிந்து கொள்ள முடிந்ததாகவும், அவனை அந்நிறுவனத்தில் இருந்து அழைத்து வருவதற்கும் தான் தயாராக இருந்ததாகவும்” அன்கித்தின் தந்தை ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
மீண்டும் அதே வரிகளைத்தான் நினைவு கூற வேண்டி இருக்கிறது. இந்த சமூகம் ஒரு தலித்துக்கு எப்போதும் கையளிப்பது இந்த வெறுமையைத்தான். வெறுமையை மட்டும்தான்.
இந்திய சூழலில் ஜாதி என்பது ஒரு தகுதி. ஜாதி என்பது ஒரு உத்வேகம். ஜாதி என்பது இது என்னுடைய சமூகம் எனும் அறைகூவல். ஆனால் மேற்கண்ட பெருமிதங்களில் தலித்துக்கு எந்த பங்கும் இல்லை. மேலும் இந்தப் பெருமிதங்களுக்குப் பின்னால், தலித்தைக் கீழானவனாக நம்புகிற நடத்துகிற வன்முறை மனநிலை இருக்கிறது. அது எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது.
எந்தவொரு இடஒதுக்கீடிலும் அல்லாமல், பொதுப்பிரிவில் ஆராய்ச்சி மாணவனாக சேர்ந்த அறிவாற்றல் நிரம்பிய ரோஹித்தின் தற்கொலையைக் கூட , “தலித்தாக இருப்பதனால், இத்தகைய உயர்கல்வி நிறுவங்களின் கல்வி அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை, அதனால் தான் தற்கொலை செய்து கொண்டான்” என்று சொல்லும் குரல்களைக் கேட்க முடிகிறது. ஒரு வகையில் இந்த வாதம், பிரச்சினையை திசை திருப்பும் ஆபாசமான முயற்சி. அதே சமயம் இதன் உள்ளீடாக ஆதிக்க ஜாதி சமூகம், தலித்துகளைக் குறித்து என்ன மாதிரியான சிந்தனைச் சூழலில் இருக்கிறது என்பதும் தெளிவாகிறது.
இத்தகைய இயல்பான ஒடுக்குமுறைச் சூழலில் ஹிந்துத்துவத்தை தத்துவார்த்த அடிப்படையாகக் கொண்ட, ஹிந்து தேசியம் கட்டமைப்பதை குறிக்கோளாக் கொண்ட ஒரு வலது சாரி அமைப்பு ஆட்சியில் இருப்பது சீரழிவை மேலும் கூட்டுகிறது. ஏனெனில் இந்து தேசியம் என்பது முஸ்லிம்களை மற்றைமைகளாக கட்டமைக்கும் அரசியலைக் கொண்டிருக்கிறது. ஆனால் தலித்துகளின் கோரிக்கைகளும் அவர்களது உரிமைக்கான போராட்டங்களும் இந்த முயற்சியில் உடைப்பை ஏற்படுத்துகின்றன.
ஹைதராபாத் போன்ற ஹிந்து முஸ்லிம் எதிர் முரண்கள் கூர்மையாக வளர்த்தெடுக்கப்படும் நகரத்தில், ஒரு தலித் செயல்பாட்டாளனின் அரசியல் என்பது ஹிந்துத்துவ நலன்களுக்கு எதிரானது. ஏனெனில் அவன் ஹிந்து தேசியத்திற்குள் அடங்குவதில்லை . அதனால் தான் ரோஹித் போன்றவர்கள் இந்து மதத்திற்கு எதிராகத் தோற்றமளிக்கிறார்கள்.
அம்பேத்கர் படத்தையும், பெரியார் படத்தையும் தூக்கிப் பிடிக்கும் மாணவனது சித்திரம் என்பது மிக வெளிப்படையாக இந்துத்துவத்துக்கு எதிரானது. இஸ்லாமியத்துக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கும் வர்க்கத்துக்கு அது ஒரு சவாலை ஏற்படுத்துகிறது. யாகூப் மேமனின் தூக்கிற்கு எதிராக ரோஹித் எழுப்பிய குரலும், முஸாபர் நகர் கலவரம் குறித்த திரையிடல்களும் சாதரணமானது அல்ல. அது தான் தத்தாத்ரேயாவை பதட்டத்துக்கு உள்ளாக்குகிறது. பலகலைக்கழகத்துக்கு அழுத்தம் கொடுக்கிறார்.. என்ன விலை கொடுத்தாவது உள்ளிருந்து எழும் கலகக் குரல்களை அடக்கிவிட விரும்புகிறார்.
ரோஹித் போன்ற அறிவு ஜீவிகள் அடங்குவதில்லை. ஒன்று தங்களது அடிப்படையான அரசியலை உத்வேகத்துடன் முன்னெடுக்கிறார்கள். அல்லது ஆழ்ந்த சோர்வுடன் நட்சத்திரங்களை நோக்கி பயணிக்கிறார்கள்.
இது ஒரு மாணவனின் தோல்வி மாத்திரமல்ல. மத வெறுப்புக்கு எதிரான சமூகத்தின் தோல்வி. இந்த வலது சாரி அரசாங்கம் கோருவது ஒடுக்கப்பட்டவனின் பணிவை. இந்த வன்முறையான சட்டகத்துக்குள் ஒடுக்கப்பட்டவன் தன்னைப் பொருத்திக்கொண்டு ஹிந்து தேசியத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஆனால் ஒரு அறிவுஜீவி அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு தலித் செயல்பாட்டாளனுக்கு, தான் அதைச் செய்வது என்பது தனது சமூகத்தை படுகுழியில் தள்ளும் செயல் என்று தெரியும். அதனால் தான் தலித் அறிவு ஜீவிகள் வேறு திசையில் பயணிக்கிறார்கள். பொது சமூகத்தில் இருந்தும், அரசின் உறுப்புகளில் இருந்தும் அவர்கள் அன்னியப்படுகிறார்கள்.
இந்த சமூக விலக்கம் தான் ரோஹித் போன்றவர்களை மிகவும் வெறுமையாக உணரச் செய்கிறது. சாவில் சந்தோசமாக இருப்பேன் என்று சொல்ல வைக்கிறது. தொடர்ந்து மரணத்தை நோக்கி நகரும் படிப்பாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதன் பின்னுள்ள எளிய காரணம் இது தான். நம்பிக்கையின் தோல்வி. ஒரு பண்பட்ட மானுட சமூகமாக நமது மதிப்பீடுகளின் வீழ்ச்சி அது.
இதை ஒரு மாணவனின் எளிய மரணமாக கணக்கிடுவதும், மனிதாபிமான அடிப்படையில் மாத்திரம் அதற்காக கண்ணீர் சிந்துவதும் அவர்களை அவமதிக்கும் செயல். ஏனெனில் தெளிவான அரசியல் முன்னெடுப்புகள் இல்லாது இத்தகைய மரணங்களை நிறுத்தவே முடியாது. நம்மை விட அரசு மிகத் தெளிவாக அதைப் புரிந்துகொள்கிறது. அதனால் தான் இந்த மரணத்தை, தலித் மற்றும் தலித்தல்லாதோர் பிரச்சினையாகப் பார்க்கவேண்டாம் என்று அமைச்சர் ஸ்மிரிதி சூபின் இரானி சொல்கிறார். ஏனெனில் இந்த மரணத்தை அவ்வாறுப் பார்க்கவில்லை என்றால் அரசுக்கு இதைக் கையாள்வது எளிது. மரணத்தின் காரணங்களை ரோஹித்தின் எரியூட்டப்பட்ட சடலத்துடன் சேர்த்து மறைத்துவிட முடியும்.
இந்த விவாதங்களினூடாக மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை. அவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பது போன்ற கருத்துகளும் கசியவிடப் படுகின்றன. இதற்குப் பின்னுள்ளது மிகப்பெரிய மோசடி.
குழந்தை பருவத்திலேயே பண்பாட்டின் பெயரால் பிரார்த்தனையை அறிமுகப்படுத்துகிற, அதன் வழியே மதத்தை நிலை நிறுத்துகிற ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் ஒருவன் அதிலிருந்து வெளியேறும் அரசியலை கல்லூரியிலிருந்து தொடங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?
மாணவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது என்பது முதலாளித்துவ அரசுக்கு பிடித்தமானது. இந்த மதவாத அரசு, முதலாளித்துவத்தோடு கொண்டுள்ள அணுக்கமான உறவு என்பது வெளிப்படையானது. மதவாதமும், முதலாளித்துவமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. ஒன்றுக்கொன்று மிகத் தீவிரமாக உதவிக்கொள்பவை. அதனால்தான் பல்கலைக் கழகங்களுக்கு ஒதுக்கும் நிதியை அரசுகள் குறைத்துக்கொண்டே போகின்றன. தாழ்த்தப்பட்டோருக்கான உதவித்தொகையை தயக்கமின்றி வெட்டுகின்றன. அதன் மூலம், கீழிருந்து வருபவர்களின் மீது அரசின் பிடியை தக்கவைத்துக் கொள்கின்றன.
ரோஹித்தின் விவகாரத்தில் கூட அவனது உதவித் தொகை தரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அதனால் தான். அது ஒரு தனி மனிதன் மீது அரசு செலுத்திய வன்முறை. இந்த தற்கொலையில் அரசின் பங்கு என்பது மிக முக்கியமானது. சமூக ரீதியாக அவர்களது ஒடுக்குமுறையை ஊக்குவிக்கும் அரசு, நிர்வாக ரீதியாக உளவியல் அழுத்தத்தையும் கொடுக்கிறது.
உண்மையாகவே அரசு இந்த பிரச்சினைகளைக் களைய வேண்டும் என்று நினைத்தால், அதைப் பல்கலைக் கழகத்திலிருந்து அல்ல, தனது அரசியல் வழிமுறையில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஆனால் இந்த அரசு அத்தகைய ஒன்று அல்ல.
இதைப்புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இடுப்பில் துப்பாக்கியை செருகிக் கொண்டு, ஒரு மாநில அரசையே மிரட்டுகிற ஹர்திக் பட்டேல் போன்ற இளைஞர்களை இந்த அரசு எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதில் இருந்து புரிந்துகொள்ளலாம். ரோஹித்தின் பிணத்தை அவசரமாக எரிக்கிற அரசாங்கம், ஹர்திக் பட்டேல் பல லட்சம் படேல்களை ஒன்று திரட்டி மாநாடு நடத்துவதை ஊக்குவிக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அவன் பேசுவதை தேசிய செய்தியாக்கி பரப்புவதற்கு அரசேத் துணைபோகிறது.
ஆக இந்த அரசு என்பது மதத்தின் பாற்பட்டது. மதம் என்று சொன்னால் நமது சூழலில் சாதிய படிநிலையை அங்கீகரிக்கிற ஒன்றுதான். ஆக இது சாதியின் அரசும் கூட.
ஆக ரோஹித்துகளின் அரசியல் என்பது இதற்கு எதிராகவே இருக்க முடியும். அவர்களைக் கைகொள்வதும் அவனைப் போன்றவர்கள் மேலும் விளிம்பை நோக்கி நகராமல் பாதுகாப்பதும் தான் இங்கு மிகவும் முக்கியம்.
நன்றி: உயிர் எழுத்து.
முகப்புப் படம்: ரோஹித் வெமுலாவின் சிற்பம் Anil Xavier