’சுப்ரமணியம் சுவாமியின் சக்கர வியூகம்: திமுக வைக் காட்டி அதிமுகவுடன் கூட்டணி சேர்வதே!’

நரேன் ராஜகோபாலன்

நரேன் ராஜகோபாலன்
நரேன் ராஜகோபாலன்

மேலாண்மை புத்தகங்களில், கிழக்கில் முக்கியமான ஒரு புத்தகம் சுன் ட்சு(Sun Tsu) எழுதிய Art of War. சுன் ட்சு ஒரு ராணுவ ஸ்ட்ராடஜிஸ்ட், அவர் கிட்டத்திட்ட கி.முவில் எழுதிய புத்தகம் இன்றளவும் மேலாண்மை பைபிள்; குறிப்பாக எதிரிகளை வீழ்த்துகின்ற வியூகங்களையும், யுக்திகளையும் உள்ளடக்கிய மனித குல வரலாற்றின் முக்கியமான புத்தகம். அதன் ஐந்தாவது அத்தியாயம் – சக்தி (Energy). அதில் ஒரு முக்கியமான வாசகம் வரும்

“The whole secret lies in confusing the enemy, so that he cannot fathom our real intent”

எதிரியின் படையினை குழப்புவதன் மூலம், எதிரிக்கு நம்முடைய உண்மையான நோக்கம் தெரியாமல் இருக்கும். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்பது தான் அதன் அர்த்தம். அதை தான் தனக்கிட்டப் பணியாய் சு.சுவாமி தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார். ஸ்டாலின் பத்திரிக்கை வைக்கப் போன போதே, “I have a surprise visitor to my house this morning” என்று ட்வீட் போட்டவர் தான்.

முதலில் பாஜக தலைமைக்கும், சு.சுவாமிக்கும் ஏழாம் பொருத்தம். சு.சுவாமி முன் வைத்த எதையும் அமித் ஷா ஏற்றுக் கொள்ளவேயில்லை. பாஜக அரசில் மோடியே இட ஒதுக்கீடு தேவை என்று போலியாக சொன்னாலுமே கூட, சு.சுவாமி ஊரெங்கிலும் இருக்கின்ற கல்லூரிகளுக்கு போய் ஹிந்துத்துவக் கொள்கையைப் பரப்புவதை வேலையாய் வைத்திருக்கிறார். மோகன் பகவத்தின் unofficial லீக்கேஜ் தான் சு.சுவாமி. சங் பரிவாருக்கும், பாஜகவுக்கும் நிறைய முட்டிக் கொண்டு நிற்கிறது. அதில் சு.சுவாமியும் ஒருவர்.

அரசியல் ரீதியாக முதலில் யோசிப்போம்.

நியாயமாய் பார்த்தால் அவர் வழக்கமாக எழுதும் எலி, பொறுக்கி இன்னபிற அடைமொழிகளுக்கு பின்னே, மதிமுகவோ, பாமகவோ பாஜகவோடு கூட்டணி சேர்ந்திருக்கவே முடியாது. ஆனால் 2014 பாராளுமன்றக் கூட்டணியில் அவர்கள் இருந்தார்கள்.

Translation: பாஜக வேறு; சு.சுவாமி வேறு. சு.சுவாமி ‘அறிவாளியாய்’ நம்பிக் கொண்டிருக்கும் ஒரு ஜோக்கர். Nothing beyond that. அரசியல்ரீதியான பாஜகவின் கட்டமைப்பிற்குள் அவருக்கு influence கிடையாது. அது மோடி – அமித் ஷா இருவரிடத்தில் இருக்கிறது. அந்த இரும்புக் கோட்டைக்குள் சுவாமிக்கு No Entry.

TOI பாஜக+தேமுதிக+பாமக என்று ஹேஷ்யங்கள் சொன்னவுடனேயே பாமக மறுத்துவிட்டது. பாமக முகத்தில் அடித்தாற் போல சொன்னபின்பு பாஜகவிற்கு தாங்கள் தமிழ்நாட்டில் கிங் மேக்கர்கள் என்று சொல்வதற்கான தேவை இருக்கிறது. அந்த தேவை தான் புதிய ‘சாத்தியமாக’ முன்வைக்கப்படும் வதந்திகளை உருவாக்குகிறது.

வதந்திகளையும், திசை திருப்பல்களையும் செய்தல் அரசியல் கூட்டணி உருவாக்கல்களில் ஒரு யுக்தி. இதை செய்வதன் மூலம், நீங்கள் டார்கெட் செய்யும் கட்சிகளை வாக்குமூலம் கொடுக்க செய்யலாம் அல்லது சு.சுவாமி மாதிரியான ஆட்களேப் பேசுகிறார்கள் என்றால் நூல் விட்டுப் பார்ப்போமே என்று சபலப்பட வைக்கலாம். இதை தான் சு. சுவாமி செய்கிறார்.

விஜயகாந்த் சு.சுவாமியை நிறைய நம்புவது போல தான் தெரிகிறது. அவரோடும், அவர் குடும்பத்தோடும் (மனைவி, மச்சான், அவர் தானே மொத்த கட்சி. ஆனால் அது குடும்ப கட்சி அல்ல, திமுக மட்டுமே பிரபஞ்சத்திலிருக்கும் ஒரே கட்சி என்பார்கள் ந.நி.வாதிகள்) சு.சுவாமி நெருக்கமாக இருக்கிறார். அதனால் தேமுதிக தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவது போல பிரமையை சு.சுவாமி உருவாக்குகிறார்.

அதிமுக பாராளுமன்றத்தில் அசுரபலத்தோடு இருக்கிறது. மோடிக்கு அதிமுகவின் ஆதரவு அடுத்த மூன்று வருடங்கள் டெல்லியில் தேவை. சித்தாந்தரீதியாகவும் அதிமுகவும், பாஜகவும் natural allies. ஆனால், ஜெயலலிதாவோடு பாஜக பேரம் பேச முடியாது. ஐயாவிடத்தில் இதயத்திலாவது இடம் கிடைக்கும். அம்மாவிடத்தில் அந்த தயவு தாட்சண்யம் கூட கிடைக்காது. 13 மணி நேரம், 13 நாட்கள் என்று வாஜ்பாய்க்கு தண்ணிக்காட்டியதை இன்றளவும் பாஜக பெருசுகள் உள்ளே இருந்துக் கொண்டு மறைவாக எச்சரிப்பார்கள்.

ஆனால் தே.ஜ.கூ சேராத பட்சத்தில் அவர்களுக்கு பெட்டர் சாய்ஸ் அம்மா சொல்பேச்சு கேட்டு அடங்கி இருக்க வைக்கும் அதிமுக கூட்டணி தான். வெள்ளம், பொது தளத்தில் பேசப்படும் anti incumbency, பொதுக்குழுவில் பேசின “கூட்டணி” என கணக்குப் போட்டால், damage controlக்கும், பரப்பன அக்ரஹாரத்துக்கு திரும்ப போகாமல் இருக்கவும் ஒரு back-up தேவை. டெல்லிக்கு கார்டனும், கார்டனுக்கு டெல்லியுமாக அது ஒரு நல்ல mutually beneficial win – win deal.

பாஜகவைப் பொறுத்தவரை திமுக ஒரு பிரமாதமான கூட்டணிக் கட்சி. அதிமுக மாதிரி அராஜக பேரங்கள் நடக்காது. 2ஜி / உர ஊழல் / ராசா / கனிமொழி / தயாநிதி மாறன் என டெல்லியில் தீர்க்கவேண்டிய நிறைய ட்ரம்ப் கார்டுகள் கையில் இருக்கின்றன. கருணாநிதியும் இறங்கிப் பேசுவார். DMK is an amenable ally. ஆனால் அடிப்படை சிக்கல், வேறு யாருக்கு இல்லையென்றாலும் திமுகவிற்கு இந்த தேர்தல் கிட்டத்திட்ட வாழ்வா, சாவா பிரச்சனை. திமுகவின் கொள்கைகளுக்கும், மோடி அரசுக்கும் ஏழாம் பொருத்தம். பாஜகவோடு கூட்டணி வைத்தால் திமுகவின் அடிப்படை செக்யுலரிச வாக்கு வங்கி காணாமல் போகும்.

ஏற்கனவே வெவ்வேறு கூட்டணிகள், கட்சிகள், தனி நபர் இயக்கங்கள் முக்கிய வாக்கு வங்கியான இளைஞர்களை தன் பக்கம் இழுக்க திராவிட அரசியல் இயக்கங்களை பொத்தாம் பொதுவாக “ஊழல் கட்சிகள்” என்று முத்திரையிட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜகவோடு போவதென்பது ஊழல்+மதவாதம் என்கிற double whammy ஆக மாறுமென்பது தெரியாதா அரசியல் சாணக்கியனுக்கு…. ஆக பாஜகவோடு கூட்டணி சேர்வது இப்போதைய நிலையில் சாத்தியமில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, இப்போதைய தமிழக அரசை விட, டெல்லிக்கு மிக இணக்கமாக தமிழக அரசு இயங்கக் கூடும்.

இப்போதைய நிலையில் பாஜக தமிழகத்தில் தனித்து இருக்கிறது. கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் விளங்காது. ஆனால் கூட்டணியென்று அவர்கள் நம்புகின்ற கட்சிகள் எல்லாமே நவக்கிரகங்கள் போல ஆளுக்கொரு திசையில் திரும்பி நின்று கொண்டிருக்கிறார்கள். தே.ஜ. கூ கிடையாது. பாமக அதிகார தேர்வை தங்களிடத்தில் கேட்கிறது. தேமுதிக பாமக/அன்புமணி இருந்தால் வராது + கேப்டனுக்கு ஆளுங்கட்சி கூட்டணியிலிருந்தே இந்த ஐந்து வருடத்தில் “எதையும்” சாதிக்க முடியவில்லை. அவருக்கு தேவை வெல்லும் கூட்டணியில் தான் இருந்து, அதை வைத்துக் கொண்டு அடுத்த ஐந்து வருடங்களில் “சாதிப்பது”, அது தே.ஜ.கூவில் வாய்ப்பில்லை. ம.ந.கூவிற்கு போக முடியாது. போனால் வை.கோ மட்டும் தான் வருவார், மற்றவர்கள் கழண்டு போவார்கள். வை. கோவுமே கூட இப்போது சந்தேகமே. திமுகவிற்கு existential crisis, அங்கே இடம் கிடைக்காது. ஒரே சாய்ஸ் அதிமுக தான். அதை ஏதாவது ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு தான் இத்தனை நாடகங்களும். திமுகவை காட்டி, அதிமுகவோடு பேசுவது என்பது ஒரு டெக்னிக். அதனுடைய டிஜிட்டல் சேல்ஸ்மென் சு.சுவாமி.

நம்பத்தகுந்த உள் வட்டாரங்களிலிருந்து வந்த செய்தி: திமுகவின் கூட்டணி ஏறக்குறைய முடிவாகி விட்டது. நாம் நினைக்கும் அனைவரும் இருக்கிறார்கள். தேமுதிகவின் பிப் 20 கட்சி மாநாடு முடிந்தவுடன் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படும். காத்திருங்கள். இந்த கூட்டணியில் பாஜக இல்லை. தேமுதிக இருக்குமா, இல்லையா என்பது இனிமேல் தான் தெரியும்.

சு. சுவாமியை தொடர்ச்சியாக படியுங்கள். கடுமையான அரசியல் தர்க்கங்களில் இளைப்பாற நமக்கும் ஒரு சீரியஸான காமெடியன் தேவை தானே. தமிழ்நாட்டில் அந்த மாதிரி ஆட்கள் தமிழருவி மணியனை தாண்டி எவருமில்லை. தமிழுக்கு மணியனையும், ஆங்கிலத்துக்கு சுவாமியையும் நாம் வைத்துக் கொள்வோம்.

நரேன் ராஜகோபாலன், அரசியல்-பொருளாதார விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.