முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி 6 முறை அறைந்த தகவல் தனக்கு எப்படி கிடைத்தது, அதைப்பற்றிய தன்னுடைய கட்டுரை வெளியான பின் , ராஜீவ்காந்தி, சோனியா காந்தியுடனான சந்திப்பு எப்படி இருந்தது என்றெல்லாம் நினைவு கூறுகிறார் புலிட்சர் விருது பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபர் லீவிஸ் எம். சிமோன்ஸ்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975ம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப் படுத்திய காலகட்டத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் டெல்லி நிருபராக பணியாற்றியவர் லீவிஸ் எம்.சிமோன்ஸ். அப்போது அவரது பத்திரிகையில் வெளியான ஒரு தகவல் உலகை உலுக்கியது. அதாவது, இந்திராகாந்தியின் மகன் சஞ்சய்காந்தி, அவரை ஆறுமுறை கன்னத்தில் அறைந்தார் என்பதுதான் அந்த செய்தி. இதுகுறித்து Scroll.in இணையதளம், அவரிடம் இருந்து சில தகவல்களை இ-மெயில் மூலம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் Ajaz Ashraf
கடந்த வருடம் ஜூன் மாதம் இந்த கட்டுரை வெளியானது என்றாலும் தமிழில் இக்கட்டுரை இதுவரை மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதால், தற்போது கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறோம்.
இரவு விருந்து ஒன்றில் சஞ்சய் காந்தி அவருடைய தாய் இந்திரா காந்தியை ஆறு முறை அடித்தார் என்று விருந்தில் கொண்ட ஒருவர் அளித்த தகவலின்படி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் நீங்கள் கட்டுரை எழுதினீர்கள். எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு எத்தனை நாட்களுக்கு பின் இது நடைபெற்றது. எதனால் சஞ்சய் காந்தி, தன்னுடைய தாய் இந்திரா காந்தியை அடித்தார் ?
எமெர்ஜென்சி பிரகடனப்படுத்தும் முன்புதான், ஒருநாள் இரவு விருந்தின் போது, இந்திரா காந்தியை, சஞ்சய் காந்தி, கன்னத்தில் ஆறுமுறை அறைந்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் வழக்கமாக இருக்கும் பழக்கத்தை போல, நானும் இந்த தகவலை உடனடியாக எழுதவில்லை. பிறகு எப்போதாவது எழுதலாம் என்று சேமித்துகொண்டேன். ஆனால், சஞ்சய் காந்தி எந்த விஷயத்தினால் தூண்டப்பட்டு, இந்திரா காந்தியை அடித்தார் என்பது நினைவில் இல்லை. நாற்பது வருடங்களாகி விட்டது இல்லையா ???
இந்திரா காந்தியை அவரது மகன் சஞ்சய் அடித்த செய்தியை, சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த குறிப்பிட்ட Source உங்களை அணுகினாரா ? அல்லது இயல்பான ஒரு உரையாடலின் போது அது வெளிப்பட்டதா ?
அந்த விருந்தில் கலந்து கொண்ட இரண்டு பேர் மூலம் எனக்கு இந்த தகவல் கிடைத்தது. அந்த இருவருமே ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றாலும், என்னிடம் இந்த தகவலை ஒருவர் சொன்னது மற்றொருவருக்கு தெரியாது. ஒரு நாள் மாலை நேரத் தேநீரின் போது, இந்திரா காந்தி அவருடைய மகன் சஞ்சய்காந்தி இருவரிடையே நிலவும் சூழல் குறித்த உரையாடலின் போது, என்னுடைய மனைவியிடம் இந்த விவகாரத்தை ஒருவர் கூறி இருக்கிறார். இந்த செய்தி நம்பத்தகுந்ததுதானா என்று அந்த மற்றொருவரிடம், நான் உறுதி செய்துகொண்டேன்.
மூத்த பத்திரிக்கையாளரான கூமி கபூர் தன்னுடைய புத்தகமான The Emergency: A Personal History -யில், இந்திராவை, சஞ்சய் அறைந்த விவகாரம் இந்திய பத்திரிக்கைகளில் எதிலும் எழுதப்படவில்லை என்றாலும், குறிப்பிட்ட விஷயம் தீ போல பரவியது என்று கூறுகிறார். தணிக்கை காரணமாக இந்திய பத்திரிக்கைகள் எதிலும், உங்களுடைய கட்டுரை வெளிவரவில்லை என்றாலும், அது பரவிய வேகம் குறித்து ஆச்சர்யப்பட்டீர்களா ??
இல்லை. கிசுகிசுக்களின் மீதுள்ள இந்தியர்களின் ஆர்வம் எனக்கு தெரியும் என்பதால், இந்த செய்தி பரவியதில் எனக்கு ஆச்சர்யம் எதுவும் இல்லை. நான் எழுதிய அந்த செய்தி , இந்தியாவை தவிர, மற்ற நாடுகளின் பத்திரிக்கைகளில் அதிகம் பகிரப்பட்டது. New Yorker பத்திரிகையில் கூட, இது பற்றி மதிப்பிற்குரிய பத்திரிக்கையாளர் வேத் மேத்தா ஒரு கட்டுரை எழுதினார்.
இருந்தாலும், நீங்கள் எழுதிய செய்தியின் உண்மைத்தன்மை சந்தேகத்துக்குறிய ஒன்றுதான் என்றும் கூமி கபூர் தன்னுடைய புத்தகத்தில் கூறி இருக்கிறார். உங்களுக்கு தகவல் அளித்தவர்களின் பெயர்கள் வெளிப்படையாக அறிவிக்காததுதான் இதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். அந்த விருந்தில் கலந்து கொண்ட வேறு யாரிடமாவது இது குறித்து விசாரித்தீர்களா ? இந்த செய்தியை எழுதியதற்காக எப்போதாவது வருத்தப்பட்டீர்களா
எனக்கு தகவல் அளித்தவர்களின் நம்பகத்தன்மை என்பது அப்போதும் இப்போதும் அப்பழுக்கற்றது. அதனாலேயே விருந்திற்கு வந்த வேறு யாரிடமும் நான் அது குறித்து விசாரிக்கவில்லை. இந்த செய்தியை எழுதியதற்காக நான் எப்போதும் வருந்தியதில்ல்லை. ஒரு தாய்க்கும் மகனுக்கு இடையே இருந்த மிக விசித்திரமான உறவு, இந்திய மக்களின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், என்னுடைய கட்டுரை அந்த உறவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது என்றுதான் நான் நினைக்கிறேன்.
உங்களுக்கு தகவல் அளித்தவர்கள் பற்றிய விவரங்களை எப்போதாவது வெளியிடுவீர்களா ?
என்னுடைய Source- பற்றிய தகவல்களை வெளியிடும் எண்ணம் இல்லை. அப்படி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அப்படி செய்யாமல் இருப்பதுதான் ஒரு பத்திரிகையாளனாகவும், ஒரு மனிதனாகவும் என் மீதான நம்பகத்தன்மையை காப்பாற்றும் செயல் என்று நான் நினைக்கிறேன்.
உங்களுக்கு தகவல் அளித்தவர்கள் இப்போதும் இங்கு இருக்கிறார்களா ?
ஆமாம்
சஞ்சய் காந்தி தன்னுடைய தாய் இந்திரா காந்தியை அடித்தது பற்றிய செய்தியை நீங்கள் வெளியிட்டதால்தான், உங்களை இந்தியாவை விட்டு வெளியேற சொன்னார்களா ?
என்னை யாரும் வெளியேற சொல்லி கேட்கவில்லை. வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். வெளியேற்றப்பட்டேன். சஞ்சய்-இந்திரா செய்தியை நான் அப்போது எழுதியிருக்கவே இல்லை.
இந்திராகாந்தி, எமெர்ஜென்சியை பிறப்பித்தது ராணுவத்தினர் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று எழுதிய மற்றொரு செய்திக்காகவே, நான் நாடு கடத்தப்பட்டேன்.
எவ்வித நோட்டீசும் இல்லாமல் கைது செய்யப்பட்டேன். துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் துணையுடன், குடியேற்றத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டேன். அதிலிருந்து ஐந்து மணி நேரம்தான். அமெரிக்க தூதரக அதிகாரியின் துணையுடன் நான் விமான நிலையத்திலிருந்தேன். அங்கிருந்த அதிகாரி ஒருவர் என்னிடமிருந்த, செய்திக்குறிப்புகள் அடங்கிய பல நோட்டுகளை பறித்து கொண்டனர். அந்த நோட்டில், நான் சிவப்பு மையினால் அடிகோடிட்டிருந்த பெயர்களை கவனித்து, அந்த பெயர்களுக்குரியவர்களை எல்லாம் கைது செய்தார்கள் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.
இந்தியாவில் இருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு, அந்த நாடு சென்றடைந்தேன். அங்கு ஒரு ஹோட்டல் அறையில் தங்கியபடியே எழுதியதுதான் “இரவு விருந்தில் இந்திரா காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி ஆறு முறை அறைந்த” செய்தி.
அவசர நிலையை பிரகடனப்படுத்திய இந்திரா காந்தியின் முடிவு உங்களை ஆச்சர்யப்படுத்தியதா ? ?
ஆமாம். அவரச நிலை பிரகடனம் என்னை ஆச்சர்யப்படுதியதுதான். என்னை அதிர்ச்சிக்கும் உள்ளாகியது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் அவசர நிலை அமல்படுத்தபட்டால், அமெரிக்காவில் கூட அவரச நிலை கொண்டுவரப்படலாம். ஏன் எங்கு வேண்டுமானாலும் வரலாம் என்று என்னை யோசிக்க வைத்தது.
அதற்கு பின் எப்போதாவது இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி அல்லது காந்தி குடும்பத்தில் யாரேயேனும் எப்போதாவது சந்தித்தீர்களா ???
அவசர நிலைக்கு பின் இந்தியாவில் ஏற்பட்ட மொராஜி தேசாய் அரசாங்கம் என்னை மறுபடியும் இந்தியா வரவழைத்தது. அப்போதுதான், நான் இந்திரா காந்தியை சந்தித்தேன். என்னுடன் சேர்ந்து இந்தியாவை விட்டு வெளியற்றப்பட்ட இங்கிலாந்து பத்திரிக்கையாளர் ஒருவரும் அந்த சந்திப்பின்போது உடன் இருந்தார். ஏன் எங்களை நாடு கடத்தினீர்கள் என்று கேட்டோம். ஆனால், சஞ்சய்காந்தி அடித்தது பற்றி நான் எதுவும் கேட்கவில்லை. அதற்கான தைரியம் எனக்கு அப்போது இல்லை என்று தோன்றுகிறது.
அதன் பின் ஒரு விருந்தில் ராஜீவ் காந்தியையும், அவருடைய மனைவி சோனியா காந்தியையும் சந்தித்தேன். யாரோ என்னை ராஜிவ் காந்திக்கு அறிமுகப்படுத்தினார்கள். “சஞ்சய்-இந்திராவை அடித்த செய்தியை எழுதிய பத்திரிக்கையாளர் இவர்தான்” என்று. தலை நிமிர்ந்து பார்த்த ராஜீவ், என்னை பார்த்து புன்னகைத்தார். எதுவும் பேசவில்லை. சோனியாவும் மவுனமாக இருந்தார்.
சஞ்சய் காந்தியை எப்போதும் சந்தித்ததில்லை.