பிப்ரவரி 1, 2016 நடந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் முதல் நினைவுச் சொற்பொழிவில் அரசியல் அறிவியல் அறிஞர் யோகேந்திர யாதவ் ‘சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை’ என்கிற தலைப்பில் நிகழ்த்திய உரையின் மொழிபெயர்ப்பு இது.
தமிழாக்கம்: பூ.கொ. சரவணன்

எனக்கும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கும் இடையே இருந்த உறவு தனித்துவமானது. அவர் மார்க்சியராகவும் , நான் லோஹியாவாதியாகவும் இருவேறுபட்ட அணுகுமுறையில் இயங்கினோம். இன்றைக்கு இரண்டுக்கும் இந்தத் தாராளமயமாக்கப்பட்ட சூழலில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கா விட்டாலும் அப்பொழுது அவை தனித்த அணுகுமுறைகளாகவே இருந்தன. பின்னர் எங்களுக்குள் எப்படி ஒரு அற்புதமான பிணைப்பு உண்டானது என்றால் ஜாதியைக் குறித்துத் தொடர்ந்து நாங்கள் சிந்தித்து வந்தோம் என்பதனால் இருக்கலாம். ஜாதியை எதிர்கொள்வதில் அவர் எப்பொழுதும் விருப்பமுள்ளவராக இருந்தார். ஜாதி மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு அதனோடு இணைந்து பங்காற்றும் மற்ற கூறுகள் கவனம் பெறாத பொழுது அவற்றையும் கருத்தில் கொள்வதைப் பேராசிரியர். எம்.எஸ்.எஸ். பாண்டியன் தொடர்ந்து செய்தார். அவரின் எம்.ஜி.ஆர். குறித்த ‘The Image Trap’ நூல் எப்படிப் பிம்பம் உற்பத்தி செய்யப்பட்டு, அது உருமாற்றம் அடைகிறது என்பதைப் பிரமாதமாக விளக்கும் நூல். இப்பொழுது நரேந்திர மோடி வெற்றி பெற்றதையும் அந்த நூலைக் கொண்டு புரிந்து கொள்ள இயலும்.
NCERT பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் குறித்த கேலிச்சித்திரம் சார்ந்து எழுந்த சிக்கலை அடுத்து என்ன இறுதித் தீர்ப்பு எழுதுவது என முடிவு செய்துவிட்டு அமைக்கப்பட்ட குழுவில் பேராசிரியர். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களும் உறுப்பினராக இருந்தார். அந்த விசாரணைக் குழுவில் வளைந்து கொடுக்கும் தன்மையற்ற பாண்டியனை ஏன் சேர்த்தார்கள் என்று புரியவில்லை. முறையான கேள்விகளை எங்களை நோக்கி அடுக்கிய பாண்டியன் அவர்கள் இறுதியில் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து மாறுபட்டு ஒரு மறுதலிப்புக் குறிப்பை எழுதினார். இந்தியாவில் அரசியலுக்கும், அறிவுபுலத்துக்கும் இடையே உள்ள உறவை குறித்து வருங்காலத்தில் வரலாறு எழுதப்படும் பொழுது பாண்டியன் அவர்களின் அந்தக் குறிப்பு அறிவுப் புலத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கும் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும்.
சமூக நீதி என்பது உலகளவில் பரந்துப்பட்ட பொருளில் வழங்கப்படுகிறது என்றாலும் இந்தியாவில் பெரும்பாலும் அது ஜாதி சார்ந்த நீதியையே குறிக்கப் பயன்படுகின்றன. சமூக நீதிக்கான இயக்கங்கள் இட ஒதுக்கீட்டை குறிவைத்து இயங்கி இருக்கின்றன. சமூக நீதிக்கான செயல்திட்டங்கள் என்பதும் ஜாதி சார்ந்த ஒன்றாகவே இயங்குகின்றன. சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை என்கிற இந்தத் தலைப்பை ரோஹித் வெமுலாவின் மரணத்தை ஒட்டி காண்பதன் அவசியத்தை நான் பேச விரும்புகிறேன்.
ரோஹித் வெமுலாவின் மரணத்தைத் தொடர்ந்து ஜாதி சார்ந்த அநீதி என்பது எவ்வளவு தீவிரமாக இயங்குகிறது என்பதைக் கண்டோம். ஜாதிக் கொடுமைகள் இன்றும் தொடர்வதைப் பலர் ஏற்றுக்கொள்ளவும் ஹைதராபாத் பல்கலையில் நடந்த நியாயமற்ற நிகழ்வுகள் வழிகோலின. இந்த நிகழ்ச்சி நமக்கு எதை நினைவுபடுத்துகிறது என்று யோசியுங்கள். நவீன அமைப்புகளில் ஜாதி எவ்வளவு ஆழமாகத் தன்னுடைய கொடுங்கரங்களைப் பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் இந்த மரணம். ஜாதிக் கொடுமைகள் உச்சபட்சமாக உள்ள இடங்களில் பெரும்பாலும் ஜாதி சார்ந்த வன்முறைகள் குறித்த புகார்கள் பதியப்படுவதில்லை. எங்கு இந்த அணுகுமுறைக்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ, அங்கிருந்து தான் இந்த மாதிரியான விஷயங்கள் வெளிப்படுகின்றன. மற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்ட துடிப்பு மிகுந்த மாணவர்களை ஹைதரபாத் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. ஜாதி சார்ந்த அநீதி இழைப்பு குறித்த நுண்ணிய, அதிகளவிலான புரிதல் இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளது.
ரோஹித் வெமுலாவின் மரணமும், அதற்கடுத்து நடந்த நிகழ்வுகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பட்டியல் ஜாதியைச் சேர்ந்த ஒருவராக ரோஹித் வெமுலா இல்லை என நிறுவ முயன்றார்கள். அதனைச் சார்ந்து ஜாதி வன்முறைக்கான எல்லையாகப் பட்டியல் ஜாதி சான்றிதழை அவர்கள் நிர்ணயிக்கப் பார்த்தார்கள். ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரோ, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களோ ஜாதி வன்முறைக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் நம்பவைக்க முயன்றார்கள். முதலில் ரோஹித் வெமுலாவுக்கு நிகழ்ந்த அநியாயத்தை இல்லையென்று மறுத்தார்கள், அடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியா தன்னுடைய பெருமைமிகுந்த மகனை இழந்துவிட்டது’ என்று ஆழ்ந்த வருத்தம் தோன்ற கண்ணீர் வடித்தார். இவை இரண்டும் ஒரே சமயத்தில் நாடகம் போல இணைந்து நிகழ்த்தப்பட்டன. இப்படிப்பட்ட சம்பவங்கள் ஒரு வடிவத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். முதலில் ஜாதி சார்ந்த வன்முறையே இல்லை என்று மறுப்பது, பின்னர் அந்த நிகழ்வையே களமாக்கி போராடுவது, அதற்குப் பின்னர் ஜாதி சார்ந்த வன்முறைகள் குறித்த நீண்ட அம்னீசியாவுக்குள் போவது வழக்கமாக இருக்கிறது. அப்படி இந்தமுறை நடக்கக் கூடாது என்றே நான் விரும்புகிறேன். அப்படி அம்னீசியாவுக்குள் சென்று விடும் சமூகம் என்கிற சோகமான தீர்ப்பை நான் முன்முடிவோடு எழுத விரும்பவில்லை. இருந்தாலும், கடந்தகாலம் எப்படியிருந்தது என நினைவூட்ட விரும்புகிறேன்.

ஆதிக்க ஜாதியினர் இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால் இட ஒதுக்கீட்டை சீர்திருத்துவது, மேம்படுத்துவது என்பது அதன் பொருளல்ல, இட ஒதுக்கீட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். சமூக நீதி தற்போது அடைந்திருக்கும் இடம் சமூக நீதி அரசியலின் தோல்வியைக் காட்டுகிறது. அறுபதுகளில் தெற்கில் எழுந்த சமூக நீதி இயக்கங்கள் எண்பதுகள், தொன்னூறுகளில் வடக்கிலும் பரவியது. மத்திய பிரதேசம் போன்ற ஆதிக்கச் சாதியினரே முதல்வரான மாநிலங்களில் தற்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் முதல்வராக ஆகமுடிகிறது. நரேந்திர மோடி தன்னுடைய அடையாளங்களில் ஒன்றாகத் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதை முன்வைப்பதையும் காணலாம்.
பிற்படுத்தப்பட்டோர் அரசியல் இந்தியாவில் ஓடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் வெற்றியை அடைந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் ஆட்சி என்பது முந்தைய பத்ரோலக் எனும் ஆதிக்க ஜாதியினரின் ஆட்சியின் நீட்சியாகவே இருக்கின்றது. கேரளாவில் ஏற்கனவே இருந்த வலுவான பிற்படுத்தப்பட்டோர் அரசியலை இடதுசாரிகள் தொடரவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்கள். மற்றபடி சமூக நீதி அரசியலில் இடதுசாரிகளின் பங்களிப்பு வெகு, வெகு குறைவு.
நாடாளுமன்றத்தில் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு என்று ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற, சட்டசபை இடங்களுக்கான இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எல்லாக் கட்சிகளும் செய்கின்றன. பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான வன்முறை தடுப்பு மசோதா துளி எதிர்ப்பும் இல்லாமல் சட்டமாக நிறைவேறியது. இவ்வாறு பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் பற்றி அரசியலில் எதிர்க்கருத்து வைக்கத் தயங்குகிற அளவுக்கு அவை புனிதப் பசுவாகச் சமூக நீதி அரசியலால் மாறியிருக்கின்றன. என்றாலும், சமூக நீதி அரசியல் என்பது ஒரு முட்டுச்சந்தை அடைந்து விட்டது என்று வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.
சமூகத்தில் பெருமளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுத்தர இந்த இயக்கங்கள் போராடி வெற்றி பெற்றன. அந்த வெற்றிக்கு அவர்களே பலியாகி விட்டார்கள். தெற்கில் மேல்தட்டினராக இருந்த பார்ப்பனர்களின் இடத்தைப் பார்ப்பனர் அல்லாதோர் கைப்பற்றினார்கள். வடக்கில் இப்படி ஆழமான வெற்றி பீகாரில் மட்டுமே ஓரளவுக்குச் சாத்தியமானது. தற்போது இந்தச் சமூக நீதி அரசியல் தேக்கமடைந்து விட்டது. இட ஒதுக்கீடு என்பது தற்போது விகிதாசாரத்தில் பெருமளவில் சுருங்கிவரும் அரசுத்துறையில் மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குகிறது.
கடந்த காலங்களில் ஜாதி பாகுபாடு இல்லவே இல்லை என்று நிராகரிக்கும் பாணி இருந்தது. தற்போது இருக்கிற ஒரே பாகுபாடு ஜாதி பாகுபாடு, அதனைத் தீர்க்கும் ஒரே வழிமுறை இட ஒதுக்கீடு என்று பெருமளவில் கருதப்படுகிறது. நாம் நான்கு முக்கியமான சமூகநீதி மறுக்கப்படும் தளங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும். ஜாதி, வர்க்கம், பாலினம், கிராம-நகரப் பாகுபாடு ஆகிய இந்நான்கும் இணைந்தே பாகுபாட்டை நிலைநிறுத்துகின்றன. இட ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாலே அதனைக் கண்மூடித்தனமாக எதிர்க்கிற செயலையே செய்கிறோம். நாம் பொருளாதார ரீதியாக மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்கிற அபத்தமான வாதத்தை நிராகரிக்கும் அதேசமயம், இட ஒதுக்கீட்டை மேலும் செம்மைப்படுத்த வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.
இந்தத் தைரியமான அரசியலை முதலில் முன்னெடுப்பவர்கள் ஓரளவுக்கு ஓட்டுக்களை இழந்தாலும், பின்னர்ச் செல்வாக்கை மீட்பார்கள். அனைவருக்காகவும் பேசுவதைச் சமூக நீதிக் காவலர்கள் செய்ய வேண்டும். இந்தியாவின் பிரதமராக ஆசைப்படும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாருக்குமான தலைவராக ஆசைப்படுவதேயில்லை. தெளிவான திட்டமிடல், பலதரப்பட்ட பிரிவினரையும் கருத்தில் கொண்டு தீர்வுகள் தருவது, உறுதியான நிலைப்பாடு ஆகியவை தேவைப்படுகின்றன. ஆதிக்க சக்திகள் என்று சொல்கிற கட்சிகளுக்கு மாற்று எனச் சொல்லிக்கொள்ளும் இவர்களின் தேர்தல் அறிக்கை, பொருளாதாரத் திட்டங்கள், கொள்கை முடிவுகள் எப்படி ஆதிக்க சக்திகளிடம் இருந்து மாறுபட்டு உள்ளன எனப் பார்த்தால் பெரிய வேறுபாடில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை.
முதலில் தன்னுடைய பிரிவினரின் முன்னேற்றத்துக்காக ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் தலைவர்கள் பாடுபடுவதன் நியாயம் நன்றாகப் புரிகிறது. அதேசமயம், நீடித்து மக்களின் மதிப்பை பெற அனைவருக்காகவும் இயங்கும் அரசியலை கைக்கொள்ள வேண்டும். ஜனநாயகமயமாக்கல் தங்களை வந்தடையவில்லை என்று சொல்லி களம் புகுந்த இக்கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். பலகாலமாக மாநிலவாரியாக, சாதிவாரியாக, மொழிவாரியாகப் பிளவுபட்டு இயங்கிய இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சக்திகள் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்படி அவை ஒன்றுபட யோசிப்பதால் காங்கிரஸ் கடந்த காலங்களில் செயல்பட்டது போல ஆதிக்க ஜாதியினர், பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பகுதி, பட்டியல் சாதியினரில் ஓரளவுக்கு ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு பாஜக ஆட்சியைப் பல இடங்களில் பிடிக்கிறது.
எனவே, பிளவை சீர்செய்து ஒன்றுபட்டுப் பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை பல தளங்களில் பேசவேண்டிய முக்கியமான கட்டம் இது. ரோஹித் வெமுலாவின் கடிதம் வித்தியாசமான, அழகான கடிதம். யாரையும் குறை சொல்ல ரோஹித் மறுக்கிறான். யார் முன்னும் தன்னைச் சிறியவனாக உணரவும், கடும் வன்மத்தை வெளிப்படுத்தவும் அவன் அக்கடிதத்தில் மறுக்கிறான். என்னை அழியா நம்பிக்கை கொண்டவன் என்று கூட நீங்கள் அழைக்கலாம், என்றாலும் இதனைச் சொல்கிறேன். ரோஹித் வெமுலாவின் மரணம் பலதரப்பட்ட மக்களை ஜாதி அநீதிக்கு எதிராக ஒன்று திரட்டியுள்ளது. இதுவரை இதனைப் பற்றி மூச்சு விடாதவர்களைப் பேச வைத்திருக்கிறது. பெரிய, ஆழமான, தொலைநோக்குக் கொண்ட சமூக நீதி அரசியலை முன்னெடுத்து அயராமல் செயல்படுவதே நாம் எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களுக்குச் செலுத்தும் மகத்தான சமர்ப்பணம்.