இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!

வில்லவன் இராமதாஸ்

(இது பட விமர்சனம் அல்ல)

தமிழகத்தில் முற்றாக இந்துமயமான முதல் துறை என்றால் அது சினிமாத்துறைதான். வில்லனின் ஆசைநாயகியர் பெயர்கள் எல்லாம் ரீட்டா. மேரி என கிருஸ்தவ பெயர்களாகவே இருக்கும். ஆனால் அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகைகள் 100% இந்துக்கள். வரலாற்றை சிதைப்பதில் காவிக்கூடாத்துக்கு கடும் சவால் விடக்கூடியவர்கள் இந்தத்துறையில் இருப்பவர்களதான். பவுத்த மதத்தை சேர்ந்த போதிதர்மனுக்கு காவி பெயிண்ட் அடித்து குறளிவித்தைக்காரனாக்கினார் முருகதாஸ். பாரபட்சமில்லாமல் எல்லா இயக்குனர்களும் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்து அவர்களுக்கு ஊருக்குள் வீடுகூட கிடைக்கவிடாமல் செய்தார்கள். கேரளப் பெண்களை காமப்பொருளாக சித்தரித்தது, கிராமத்து ஆசிரியைகளை கவர்ச்சி நாயகிகளாக காட்டியது, சென்னைத்தமிழை அநாகரீகமான தமிழாக காட்டியது என இந்த கும்பலின் குற்றப் பட்டியல் எழுதி மாளாதது.

அதில் மிக சமீபத்து வரவு காசுக்காக மதம் மாறுகிறார்கள் எனும் காட்சியமைப்புக்கள். நாத்திகர் பாலாவின் படமே இந்துத்துவாவை தூக்கிப்பிடிக்கையில் சுத்த பிராமணர் மாதவனின் இறுதிச்சுற்று படத்தில் இத்தகைய காட்சிகள் இருப்பது ஆச்சர்யமல்ல. அப்படத்தில் நாயகியின் தந்தை பணத்துக்காக மதம் மாறுவதாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. இது உண்மையில் கிருஸ்துவ மதத்தை அவமானப்படுத்தும் காட்சியல்ல. மாறாக குப்பத்து மக்களை அவமானப்படுத்தும் சிந்தனைதான் அதில் மேலோங்கியிருக்கிறது.

பொதுவாக நமது மேட்டுக்குடி மக்களுக்கு (அப்படி நடிக்கும் நடுத்தரவர்கத்தின் ஒரு பகுதி உட்பட) ஒரு தனிப்பட்ட வடிவிலான மட்டம்தட்டும் பழக்கம் உண்டு. இவர்கள் முஸ்லீம் மீதான வெறுப்பை நேரடியாக காட்டமாட்டார்கள் மாறாக அவர்கள் படிச்சு முன்னேற மறுக்கிறார்கள் என்பார்கள். தலித் மக்கள் மீதான வெறுப்பை மறைத்து அவர்களுக்கு வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத் தெரியவில்லை என்பார்கள். கார்பரேட் கம்பெனிகள் அரசின் லட்சக்கணக்கான கோடிகளை தின்று கொழுப்பதை கண்டுகொள்ளாமல் மக்கள் அரைவயிற்றுக்கு உணவிடும் மானியத்தால் நாடு குட்டிச்சுவராகிறது என அங்கலாய்ப்பார்கள். ஒரு படம் எடுத்தாலே மேட்டுக்குடிக்கு உயர்ந்துவிடுவதால் அனேகமாக எல்லா சினிமாக்காரர்களும் இப்படித்தான் சிந்திக்கிறார்கள். ஆகவே இறுதிச்சுற்று  இயக்குனரும் அப்படித்தான் சிந்திப்பார். இயக்குனர் சங்கரின் முதல் படத்தில் கொல்லப்படும் வில்லன் ஒரு ஊழல் அமைச்சர். அவரது கடைசி ”சமூக”ப்படம் அன்னியனில் கொல்லப்படும் வில்லன் சும்மா பூங்காவில் தூங்கும் ஒரு சேரிக்காரன். மனதின் ஆழத்தில் எல்லா சினிமாக்காரர்களும் பாமர மக்கள் மீது ஒரு அருவெறுப்புடனேயே வாழ்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இத்தகைய காட்சிகள். பசங்க 2 படத்தில் கெட்ட வார்த்தை பேசும் பெற்றோர் யார்? ஆட்டோ ஓட்டும் குப்பத்து மனிதர்கள். அப்பாத்திரத்தை ஒரு அதிகாரியாக காட்ட இவர்களுக்கு ஒருக்காலும் மனம் ஒப்பாது.

அவர்கள் குறிப்பிடும்படி சாமானிய மக்கள் காசுக்காக மதம் மாறுகிறார்களா? அதற்கு சாத்தியமே இல்லை. எப்படி இந்துக்கள் கடவுளுக்காக செலவு செய்கிறார்களோ அப்படியே கிருஸ்தவர்களும் தங்கள் காசை செலவு செய்துதான் வழிபடுகிறார்கள். பெந்தகொஸ்தே சபைகளின் பிரச்சாரத்தை கேட்டுப்பாருங்கள், உன் வருமானத்தில் ஒரு பங்கை இறைவனுக்கு கொடு எனும் வலியுறுத்தல் அங்கே கட்டாயம் இருக்கும். பால் தினகரன் தொலைக்காட்சியிலேயே ஊழியத்துக்கு நன்கொடை தாருங்கள் என வேண்டுகோள் விடுக்கிறார். மனிதர்களின் தீவிர பலவீனம் மதம்தான். காசைக்கொடுத்து மதம் மாற்றுவது என்பது வாதத்துக்குகூட சாத்தியமில்லை. புறந்தள்ளப்பட்ட மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் தாங்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு ஏங்குகிறார்கள்.

அதனை பெருமளவில் பெந்தகொஸ்தே சபைகள் பயன்படுத்திக்கொள்கின்றன. புதிதாக நீங்கள் பிரார்த்தனை கூட்டங்களில் நுழைந்தால் உங்கள் பெயர் மேடையில் குறிப்பிடப்படும். உங்கள் வீட்டு நல்லது கெட்டது எதுவானாலும் அழைக்காமல் ஆஜராவார்கள். பிரார்த்தனைக்கு வரத் தவறினால் அடுத்த முறை நினைவூட்டலுக்கு ஆள் வரும். அங்கீகாரத்துக்கு ஏங்கும் மக்களிடம் இந்த அக்கறையும் தொடர் முயற்சியும்தான் வேலை செய்கிறதேயன்றி பணம் அல்ல. சற்றேறக்குறை இந்த நுட்பங்களை கொண்டுதான் பங்காரு ஒரு பெரும் கூட்டத்தை வசியம் செய்திருக்கிறார். வழிபாட்டில் பெருமளவு புறக்கணிக்கப்படும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் வழிபாட்டு முறையை வடிவமைத்து அவர் பணம் பார்க்கிறார். புறக்கணிக்கப்படும் மக்கள் இருக்கும்வரை சாமியார்களும் பெந்தகொஸ்தே சபைகளும் கல்லா கட்டிக்கொண்டே இருப்பார்கள். துணிச்சல் அல்லது அறம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அரை சதவிகிதம் மிச்சம் இருந்தால் அந்த புறக்கணிப்பைப் பற்றி சினிமா மேட்டுக்குடிகள் படம் எடுக்கட்டும். அதைவிடுத்து சாமானிய மக்களை இழிவுபடுத்துவது பச்சையான வர்கக் கொழுப்பு.

கிருஸ்தவ நிறுவனங்கள் மதம் மாற்றலாமா என கேட்பது அபத்தம். மத நிறுவனத்தின் இலக்கு மத மாற்றம்தான். ஹரே ராமா குரூப் வெளிநாடுகளில் மசாஜ் செண்டரா நடத்துகிறார்கள்?

இந்தியாவில் நடந்த பெரிய மத மாற்றம் பெருமளவிலான இந்திய மக்கள் தங்களை அறியாமலே இந்துக்களாக மாற்றப்பட்டதுதான். யாரெல்லாம் இசுலாம், கிருஸ்தவ, பவுத்த, சீக்கிய மதத்தவரில்லையோ அவரெல்லாம் இந்துக்களே எனும் வினோத விளக்கத்தின்மூலம் நாமெல்லாம் ஒரு நாளில் இந்துவாக்கப்பட்டவர்கள்.

ஒட்டுமொத்தமாக மதமாற்றத்தை மட்டுமே கிருஸ்தவ மத நிறுவனங்களின் வேலையாக காட்டுவது அயோக்கியத்தனம். தமிழகத்தின் 220 ஆண்டுகளுக்கு முன்பே சாதாரண மக்களுக்கு பள்ளிக்கூடம் கட்டியது கிருஸ்தவ மிஷினரிகள்தான். தஞ்சாவூருக்கு அருகாமையில் உள்ள அய்யம்பேட்டையில் ஒரு கத்தோலிக்க பள்ளி உண்டு. நாற்பதாண்டுகளுக்கு முன்னால் அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு வீடு வீடா சென்று பெற்றோர்களிடம் பேசி பெண் பிள்ளைகளை சேர்த்தார்கள் அப்பள்ளியின் கன்னியாஸ்திரிகள். மாலை அவர்களை பத்திரமாக வீடுகளின் விட்டுவிட்டு வருவதன் மூலம் நன்னம்பிக்கையை பெற்று அதன் மூலம் மற்ற குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்திருக்கிறார்கள். இந்த வழக்கம் பல்லாண்டுகாலம் தொடர்ந்து நடந்திருக்கிறது.

ஒட்டுமொத்த தஞ்சையின் கல்வி வளர்ச்சியில் கிருஸ்தவ பள்ளிகளின் பங்கு கணிசமானது. ஒருவேளை அவர்களது ஒரே இலக்கு மதமாற்றமாக இருந்திருக்குமானால் பாதி தஞ்சாவூர் ஜனத்தொகை கிருஸ்தவ மதத்துக்கு மாறியிருக்கும். கல்வி மட்டுமல்ல சமுக நீதியும் மிஷனரிகளின் முயற்சியால்தான் துவங்கியது. தரங்கம்பாடி டச்சு ராஜ்ஜியத்தில் தலித் மக்களுக்கான பள்ளி ஒன்றை துவங்கினார்கள் கிருஸ்தவ போதகர்கள். ஆனால் யாரும் படிக்க வரவில்லை. காரணம் அங்கே பிள்ளைகளின் வேலை என்பது தண்ணீர் கொண்டுவருவது மட்டுமே. அதனால் மிஷனரி சார்பாக ஒரு தனி கிணறு வெட்டப்பட்டது. அதன் பிறகும் பள்ளிக்கு வரவேற்பில்லை. இப்போது குழந்தைகள் விவசாய பணிகளுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். பிறகு மிஷனரி தரங்கம்பாடி கவர்னரிடம் பேசி அந்த ஊர் தலித் மக்களுக்கு கொஞ்சம் நிலத்தை சொந்தமாக்கியது. இப்படியாக ஒரு பள்ளியின் மூலம் அம்மக்களுக்கு சமூக நீதியின் சிறுவெளிச்சம் காட்டப்பட்டது. மருத்துவத்துறையிலும்கூட கிருஸ்தவ மத நிறுவனங்களின் பங்கு மகத்தானதே.

தமிழ் சினிமாவின் ஆன்மா சாதித்திமிராலும் பணத்திமிராலும் ஆனது. எம்.ஆர்.ராதாவுக்கு பிறகு அங்கே மானமுள்ள ஒருவன் உருவாகவில்லை. இவர்களுக்கு வரலாற்றையும் சமூக நீதி பற்றியும் வகுப்பெடுப்பது அநாவசியம். ஆனால் அவற்றை நாம் தெரிந்துகொள்வது கட்டாயம். இல்லாவிட்டால் சினிமாவில் வந்ததே வரலாறு என நம் மக்கள் நம்பிவிடுவதற்கான சாத்தியம் அதிகம். சினிமாவைப்பார்த்து எம்.ஜி.ஆர் நல்லவர் என நம்பிய மக்களின் வாரிசுகள் அல்லவா நாம்!

வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர். இவருடைய வலைத்தளம்.

One thought on “இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.