அறிவழகன் கைவல்யம்

“அவாளை எல்லாம் ஆத்துக்குள்ள ஏன் அலவ் பண்றேள்” என்று சொல்கிற ஒரு பார்ப்பனரைக் கூட மன்னிக்கலாம், ஆனால், “பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை நிற்க வைத்திருக்கிறோம்” என்று சொல்கிற எவரையும் மன்னிக்க முடியாது, அந்தச் சொற்களின் பின்னால் ஒரு ஆழமான சாதிய வன்மமும், அரசியல் தீண்டாமையும் இருக்கிறது.
பொதுத் தொகுதி ஒன்றும் தலித்துகளுக்கு நீங்கள் வழங்கும் பிச்சைப் பாத்திரம் அல்ல ஆண்டைகளே, சமூக அக்கறையும், அரசியல் அறிவும், பொது வாழ்வில் அனுபவமும் மிக்க எவரும் பொதுத் தொகுதியில் வேட்பாளராக நிற்கலாம், பொது சமூகம் என்பது ஒடுக்கப்பட்டவனையும் உள்ளடக்கிய சமூகக் கூட்டு மனத்தோடு தொடர்புடைய ஒரு அளவீடு.
உங்கள் “பொதுத் தொகுதியில் தலித்” என்கிற சொல்லாடல் கயமைத்தனமும், போலி முற்போக்கு உள்ளீடுகளும் கொண்டது. உண்மையில் பொதுத் தொகுதியில் தலித்தை என்று துவங்குவதற்கு முன்பாக ஒருமுறை நீங்கள் கையாள்கிற அந்தச் சொல்லாடல் எவ்வளவு அபத்தமானது என்பதை நினைவு கூறுங்கள், இப்போது எதற்காக அந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் இன்னொருமுறை நினைவு கூறுங்கள்.
உங்கள் கூற்றுப் படி பார்த்தால் ஒரு ஒடுக்கப்பட்ட உழைக்கும் மனிதனை நீங்கள் பொதுத் தொகுதிக்குள் நிற்க அனுமதிப்பதே நீங்கள் இந்த உலகுக்குச் செய்கிற மிகப்பெரிய தியாகம் என்றல்லவா பொருளாகிறது, பொதுத் தொகுதிகளில் நீங்கள் ஒரு உழைக்கும் ஒடுக்கப்பட்ட மனிதனை வெற்றி பெற அனுமதிப்பதில்லை.
உங்களையும் அறியாமல் உங்களுக்குள் இருக்கும் சாதியத்தின் வன்மம் பொதுத் தொகுதியை ஆதிக்க சாதிக்காரர்களின் அடிப்படை உரிமை என்று எண்ண வைக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் “தனித் தொகுதி” என்கிற கோட்பாட்டையே பேரறிஞர் அம்பேத்கர் உருவாக்கினார்.
பாருங்கள், ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு மேலாக மைய அரசியல் நீரோட்டத்தில் இயங்கும் கம்யூனிஸ்ட்டுகள் கூட பொதுத் தொகுதியின் வரையறையைப் புரிந்து கொள்ள இயலாத அளவுக்கு சாதி எப்படிப் புரையோடிப் போயிருக்கிறது என்று.
முற்போக்கு, கம்யூனிசம், திராவிடம், தூய தமிழ்த் தேசியம் என்று என்ன வேடம் போட்டாலும் உங்கள் சாதித் திமிர் கொண்ட தடித்த நாக்கு “பொதுத் தொகுதியில் நாங்கள் ஒரு தலித்தை நிற்க வைத்தோம்” என்று தம்பட்டம் அடிக்கிறதே தவிர அதை ஒரு இயல்பான அரசியல் நிகழ்வு என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
“பொதுத் தொகுதில தலித்” என்கிற சொல்லாடல் போலி முற்போக்கு அரசியல் ஆண்டைகளின் தோலை உரித்துக் காட்டுகிற சுய விளம்பரம் தவிர வேறொன்றுமில்லை.
அறிவழகன் கைவல்யம், சமூக-அரசியல் விமர்சகர்.