இந்தியன் பீனல் கோட் 377-ம் பிரிவு என்றால் என்ன ?
இயற்கைக்கு விரோதமான உடலுறவு பற்றி இந்த பிரிவு பேசுகிறது. இயற்கை நிமித்தத்திற்கு எதிராக மனிதர்களுடனோ, விலங்குகளுடனோ உடலுறவு கொண்டால், அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. இதில் ஓரினசேர்க்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஆங்கிலேயர்கள் இயற்றிய குற்றவியல் சட்டத்தின் பிரிவில் உள்ளது. இரு நூற்றாண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களின் கண்ணோட்டத்தில் எது பொது நெறி என்று நினைத்தார்களோ அதன் அடிப்படையில் இயற்றப்பட்டது. இன்று அவர்களுடைய நாட்டிலேயே இந்த சட்டம் மாறிவிட்டது. சமத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் விரிந்து விட்டது.
இனி இந்த சட்டம் குறித்து ஏன் உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று யோசித்தோமேயானால்…. இயற்கைக்கு எதிரான குற்றங்கள் என்ற சட்டத்தின் கீழ் மட்டும் 2014-ம் ஆண்டு சுமார் 1500 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்வது, கேள்வி கேட்பது, வன்முறைக்கு ஆளாக்குவது, கட்டாய பாலியல் உறவுக்கு உட்படுத்துவது போன்ற கொடூரங்களை போலீசார் நிகழ்த்துவதற்கும் ஐ.பி.சி 377-ம் பிரிவு உபயோகபடுத்தபட்டு வந்துள்ளது என்கிறார்கள் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள்.
சென்னையில் ஒரு காய்கறி கடையில் உதவியாளராக பணி புரிந்த வியாசர்பாடியை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான 18 வயது பாண்டியனை , 2006-ம் ஆண்டு அழைத்து செல்கிறது போலீஸ். திருட்டு வழக்கில் தொடர்புடைய சரண்ராஜ் என்பவர் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், உண்மை தெரிந்து விட்டால் அனுப்பி விடுவதாகவும் கூறுகிறது. பின், பாண்டியனை மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்கிறார்கள். நீதிமன்ற காவலில் அனுப்ப நீதிபதி உத்தரவிடுகிறார். அங்கு தன்னை பார்க்க வந்த, தனது சகோதரியிடம் கதறி அழுத பாண்டியன் “போலீசார் தன்னை தினமும் சித்ரவதை செய்வதாகவும், கட்டாய வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவதாகவும்” கூறி இருக்கிறார்.
பின் ஜாமீனில் வெளிவந்த பாண்டியனிடம், சிறையில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளியே கூறக்கூடாது என்று மிரட்டியது மட்டுமல்லாமல், தொடர்ந்தும் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர் போலீசார். இது பற்றி கேட்ட, பாண்டியனின் தாயாரை அடித்ததுடன், பாண்டியனின் சகோதரி மீது “விபச்சார வழக்கு தொடருவோம்” என்று மிரட்டி இருக்கிறது போலீஸ்.
அவருடைய ஆசனவாயில் லத்தியை விட்டு சித்ரவதை செய்த போலீஸ், வாய் வழி புனர்ச்சியிலும் ஈடுபடுத்தி பாண்டியன் என்கிற அப்பாவி 18 வயது மூன்றாம் பாலினத்தவன் மீது வன்முறை புரிந்திருக்கிறது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், போலீசார் பாண்டியனை அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள்.
ஒரு நாள் பாண்டியன் தற்கொலை செய்து கொண்டார். அதுவும் தீக்குளித்து தற்கொலை. “நான் இறந்தால் யார் அழ போகிறார்கள்” என்று சிரித்தபடியே செத்து போயிருக்கிறார் பாண்டியன். அந்த கொலைக்காக நீதி கேட்டு, நீதிமன்ற படியேறி ஓய்ந்து போனார் பாண்டியனின் சகோதரி. அந்த வழக்கின் விவரம் இங்கே..http://indiankanoon.org/doc/1373799/
2004-ம் ஆண்டு பெங்களூரில் திருநங்கைகையான பாலியல் தொழிலாளி ஒருவரை பத்து பேர் சேர்ந்து கடுமையாக தாக்கியதுடன், கூட்டாக வன்புணர்வு செய்கிறார்கள். இது நடந்து கொண்டிருக்கும்போதே, அந்தப்பக்கமாக இரண்டு போலீசார் வந்தவுடன், வன்புணர்வு செய்தவர்களில் ஆறு பேர் ஓடிவிடுகிறார்கள். இரண்டு பேர் மட்டுமே பிடிபடுகிறார்கள். அவர்டளுடன், கோகிலாவையும் அழைத்து செல்லும் போலீஸ், அங்கு மூன்று பேரையும் நிர்வாணமாக்கி அடிக்கிறார்கள். “நான் பெண்ணா என்பதுதான் அந்த போலீஸ்காரர்களின் ஆராய்ச்சியாக இருந்தது” என்று தெகல்கா இதழுக்கு அளித்த பேட்டியில் கோகிலா கூறி இருக்கிறார் .
2008-ம் ஆண்டு சென்னை திருவொற்றியூரை சேர்ந்த திருமணமான பெண்கள் இரண்டு பேர், கட்டியணைத்தபடி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதும் , அவர்களை பிரிக்க இருவரது குடும்பமும் தீவிரமாக முயன்றதை அடுத்தே, அவர்கள் இம்முடிவுக்கு தள்ளப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
377 -வது பிரிவு என்பது ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளை கொண்டது என்பதால், அதில் கைது செய்யப்படுபவர்களுக்கு, ஜாமீன் என்பது அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் கருணையை பொறுத்தே வழங்கபடுகிறது. இயற்கைக்கு மாறான உறவுகளை எதிர்க்கும் மனநிலை கொண்ட நீதிபதி அந்த வழக்கை விசாரித்தால், ஜாமீன் என்பது கனவிலும் நினைக்க முடியாத விஷயமாகி விடுகிறது என்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அச்சப்படுகிறார்கள்.
377 -வது பிரிவு என்பது, வெறும் காகித கட்டு மட்டுமல்ல, அதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் வலியும் ரத்தமும், சதையும் நிரம்பியதாக இருக்கிறது. பாண்டியன், கோகிலா இன்னும் பலர் அந்த சட்டப்பிரிவினால், தங்களுடைய உரிமையை, சுதந்திரத்தை இழந்து கொண்டே இருக்கிறார்கள்.
“அரசியல் சாசன நெறியை” டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசனம் இயற்றும் நேரத்தில் நடந்த விவாதங்களில் பெரிதும் வலியுறுத்தினார். “இந்த நெறியை நாம் கவனத்துடன் வளர்க்க வேண்டும். இது தானாக வராது என்றும் கூறினார். மேலும் “இந்தியர்கள் இந்த நெறியை கற்றுக்கொள்ளவேண்டும், ஏனென்றால் நமக்கு இன்று வரை ஜனநாயகம் என்பது மேல்பூச்சாகத்தான் உள்ளது” என்றார்.
ஆம். நாம் அந்த நெறியை கற்றுகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறோம். நீதிமன்றங்களும்.
ஆங்கிலத்தில் எழுதியவர் Vishnupriya Bhandaram