தலித் முதல்வர்: சிலர் வேண்டுமென்றே கூட்டணியில் குழப்பம் உண்டாக்க முயல்கின்றனர்: திருமாவளவன் விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் ‘தலித் முதல்வர்’ என்ற விவாதம் குறித்து விளக்க அளித்திருக்கிறார்.

“மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே ஒன்றுகூடி, ‘முதல்வர் வேட்பாளர்’ குறித்து விரிவாக விவாதித்து, தெளிவாக ஒரு முடிவை அறிவித்துள்ளோம். கூட்டணியின் ‘குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை’ முன்வைத்து மக்களைச் சந்திப்பது என்றும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்றும் ஒருமித்த முடிவெடுத்துள்ளோம்.

இந்நிலையில், “தலித் ஒருவர் ஏன் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது?” என்னும் உரையாடல் இப்போது பொதுவெளியில் தொடங்கியுள்ளது. விடுதலைச்சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தோழர் இரவிக்குமார் அவர்கள், 2014 ஆம் ஆண்டு, ‘நிறப்பிரிகை’ என்னும் தனது இணையப் பக்கத்தில் எழுதியதை அடிப்படையாக வைத்து, இதனைச் சிலர் தற்போதைய சூழலில் கிளறியிருப்பதாகத் தெரிகிறது.

‘வடமாநிலங்களில் சுஷில்குமார் ஷிண்டே, மாஞ்ஜி, மாயாவதி போன்றவர்கள் முதல்வராகும் அளவுக்கு அங்கே உட்கட்சி சனநாயகமும் சமூக சனநாயகமும் வளர்ச்சியடைந்துள்ளது; ஆனால், தமிழகத்தில் ஒப்புக்காகவும் அப்படியொரு பேச்சுகூட எழவில்லையே ஏன்?’ – என்னும் அடிப்படையில்தான் அவர் அந்தக் கேள்வியை எழுப்பினார். அன்று அதனை எவரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இன்று அதனை ஊதிப் பெருக்கி, மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கிட, சிலர் பெருமுனைப்புக் கொள்கின்றனர்.

தோழர் இரவிக்குமார் அவர்கள், மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்கு முன்பே, 2014 இல் பொதுவெளியில் எழுப்பிய இந்த சனநாயகக் குரலை, இன்று எமது கூட்டணிக்கு எதிராக எழுப்பப்பட்ட போர்க்குரலாகத் திரித்துக் கூற முயற்சிக்கின்றனர்.

காலம் காலமாக தமிழக அரசியலில் தொடரும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் தலித்துக்களின் மீதான அரசியல் சுரண்டலுக்கு எதிராகவும் உரையாட வேண்டிய சனநாயக சக்திகளும் இதனைத் தலித்துக்களுக்கு எதிராகவே திருப்பிவிட துடிக்கின்றனர் என்பது அதிர்ச்சியாகவுள்ளது. இதிலிருந்து, இன்னும் தமிழகத்தில் சாதியத்தைச் சாடுவதற்கும் கூட சனநாயகக் கூறுகள் வலிமை பெறவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே ‘முதல்வர் வேட்பாளர்’ என்கிற கேள்விக்கே இடமில்லை. இந்த ஒருமித்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். கூட்டணியை வலுவான மாற்று சக்தியாக முன்னெடுத்துச் செல்வோம்.”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.