அன்புள்ள தோழர் நியாஸ் அவர்களுக்கு!
தங்களின் சமீபத்திய விகடன் கட்டுரை “மக்களே… எல்.கே.ஜி., என்ஜினீயரிங் எது காஸ்ட்லி? – இதுவும் நடக்கும் தமிழகத்தில்!” படித்தேன். உண்மைகளை பேசும் ஒரு சில ஊடகவியலாளர்களில், அதுவும் குறிப்பாக கல்வி குறித்து யாரும் பேசத் தயங்கும் பகுதிகளை கூட எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் எழுதுபவர்களில், நான் பார்த்து வியந்தவர்களில் நீங்களும் ஒருவர்.
அதுவும் 2014 ஆம் ஆண்டு தர்மபுரியில் தொடர்ச்சியாக மூன்று பள்ளிக்கூட மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை எவ்வித அச்சுறுதலைப் பற்றியும் துளியும் சிந்திக்காது நீங்கள் தர்மபுரியில் அமர்ந்துகொண்டே எழுதியது, 2015 இல் GATS ஒப்பந்தம் கையெழுத்தாகப்போகிறது என்று பதறியெடுத்துக்கொண்டு, நீங்கள் என்னைப் போன்றவர்களை அழைத்து நாம் ஏதாவது செய்ய வேண்டும், நம் அடுத்த தலைமுறையின் கழுத்தில் கத்தி தொங்கப்போகிறது என்று எங்கள் செவிகளில் ஓங்கி அறைந்து, அதனை தர்மபுரியில் இருந்து என்னவெல்லாம் செய்யலாம், தமிழகம் முழுமைக்கும் என்ன செய்யலாம் என என்னைப் போன்றவர்களை ஓடவிட்டது, என செய்தியாளராக வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு ஊதியம் பெற்று சுக வாழ்வு வாழாமல், ஓடிக்கொண்டே இருக்கும் உங்களை தோழன் என்று சொல்வதே எனக்கு மகிழ்ச்சிதான். அரசுப்பள்ளிக்கூட பாதுகாப்பு குறித்து இன்று நான் களத்தில் இறங்கி வேலை செய்ய காரணமானவர்களில் தோழரும் பாரதி தம்பியும் நீங்களும் முன்னிலை வகிக்கிறீர்கள். நீங்கள் நேரடியாகவும், பாரதி தம்பி விகடன் கட்டுரை வழியாகவும்!
கல்வி உலகில் பணம் மட்டும்தான் பிரச்சனையா தோழர்? பெரும்சவலாக இன்னொன்றும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறதே, நாம் அதை பற்றி பேசுவோமா? அது வேறு ஒன்றுமில்லை, சாதி என்னும் கொடிய பாம்புதான். சத்தியமாக இதனை பேசும் முதல் நபரும் நான் அல்ல, கேட்கும் முதல் நபரும் நீங்கள் அல்ல. இருப்பினும் பேசுவோம் தோழர். திராவிட இயக்க நூற்றாண்டை எவ்வித கூச்சமும் இல்லாமல் பெருமையோடு பேசும் எல்லா திராவிட இயக்கத் தோழர்கள், நண்பர்கள், கட்சியினர் அனைவருக்கும் கேட்கும்படி உங்களோடு பேச வேண்டும் தோழர். தமிழன் என நாமெல்லாம் ஒன்றாகிவிட்டால் சாதி இல்லாமல் போய்விடும் என பொய்க்கூச்சல் போடும் நம் சக தமிழர்கள் காது கேட்கும்படி பேசுவோம்.
தோழர், இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத முற்பட்டதற்கான காரணம் விகடனில் வெளியான தங்கள் கட்டுரை மட்டும் அல்ல. நான் சொல்லப்போகும் பயண அனுபவமே உங்களால்தான். உலக வர்த்தக மையத்தில் இந்தியா கல்வியை அடமானம் வைக்கப்போகிறது என்ற பதற்றத்தோடு அதனை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லவேண்டிய காரணங்களை எங்களை போன்றோருக்கு எடுத்துக்கூறி உற்சாகம் ஊட்டியதோடு, அதற்கான ஆயுதமாய் நீங்களே எழுதிய ‘களவு போகும் கல்வி’ புத்தகத்தையும் கொடுத்தீர்கள். குக்கூ அமைப்பு உதவியோடு வெளியான புத்தக்கத்தை, தர்மபுரி மக்கள் மன்றத் தோழர்கள் படைச்சூழ தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வாழ்த்துக்களோடு தஞ்சை மண்ணில் உங்கள் திருமணத்திலேயே வெளியிட்டு முதல் பயணத்தையும் தொடங்கி வைத்தீர்கள்.
அதனை சுமந்துகொண்டு ஒரு வெளியீட்டு விழாவிற்கு நானும் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் கொங்கு பகுதிகளில் இருக்கும் ஒரு பேரூருக்கு சென்றோம். இடத்தின் பெயரையும் பங்கு கொண்ட மற்றும் ஏற்பாடு செய்த ஏனையவர்களின் பெயரை வேண்டும் என்றே தவிர்க்கிறேன். நமக்குள்ளான உரையாடல் பிரச்சனைகளை மையப்படுத்தியே தவிர நபர்களை அல்ல என்பதால் மட்டும் இல்லை. அவர்களை பாதுகாக்கும் பொருட்டும்தான்.
அவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தனக்கே உரிய வழக்காமான துணிச்சலில் சமூகத்தில் நிலவும் சாதியம் குறித்தும் இந்துத்துவ வெறியர்களின் கீழ்த்தரம் குறித்தும் பேசியவர் கொங்கு பகுதியென்பதால் யுவராஜ் என்ற சாதிவெறியன் செய்தவற்றையும் சுட்டிக்காட்டி, இதனை பேசும் எதிர்க்கும் தைரியம் இல்லையெனில் நாம் படித்துதான் என்ன பலன், உயர்ந்துதான் என்ன பயன் என கேள்வியையும் கேட்டுவிட்டு புத்தகம் தொடர்பான கருத்துக்களையும் GATS குறித்த புரிதலையும் ஏற்படுத்த பேச எத்தனித்த வேளையில், கூட்டத்தில் ஒரு குரல்.
தோழர், திராவிட மண் என்று என்னை போன்றவர்கள் பெருமையோடு வாழ்ந்த திமிர் அந்த நொடியில் சுக்குநூறாய் வீழ்ந்தது. “வட இந்தியாவில் பொதுவுடமைவாதிகளும் கூட சாதிப்பெயரோடே வாழ்கிறார்கள், தமிழகத்தில் சாதிக்கட்சித் தலைவர்கள் கூட சாதிப்பெயர் போட கூச்சப்படுகிறார்கள்” என்று பெருமை பொங்க 2012 இல் எனது கட்டுரைகளில் நான் எழுதியிருக்கிறேன். ஆனால், அந்த நொடி என்னை நிறைய கேள்விகள் கேட்க வைத்தது.
ஆசிரியர்களும் மாணவர்களும் நிரம்பியிருந்த அந்த கூட்டத்தில், தன்னை அக்கூட்டம் நடத்தும் அமைப்பின் பொறுப்பாளர் என்று கூறிக்கொண்ட ஒரு மனிதர், “எங்களுக்கு யுவராஜ் ஒரு கதாநாயகன் தான்; எங்கள் சாதி எங்களுக்கு உயர்வுதான்; எங்கள் மண்ணின் பெருமை எங்களுக்கு தெரியும்; அதனைக் குறித்து பேச நீங்கள் இங்கே வரவில்லை; அதுகுறித்து உங்கள் விளக்கம் எங்களுக்கு தேவையில்லை; புத்தகம் குறித்து மட்டும் பேசுங்கள்” என கூச்சலிட்டார். பிறகு ஏனையவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, கூச்சலிட்ட நபர் தனிமைப்பட்டு நின்று, உரை தொடர்ந்தது என்பது வேறு. ஆனால், அந்த நபரின் குரல் ஒற்றை மனிதரின் குரல் அல்ல; அங்கே பேச கூச்சப்பட்டு, பொதுவெளியில் அமைதி காத்த ‘உத்தம’ர்களின் பெருங்குரல். அந்த குரல், “யுவராஜின் கைது பிரபலம் ஆன அளவிற்கு கூட ஏன் விஷ்ணுப்பிரியாவின் கொலை மக்கள் மத்தியில் பேசப்படவில்லை” என்று எனக்கு உணர்த்திய குரல்.
அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர் இவ்வளவு சாதித்திமிரோடு வாழ்ந்துகொண்டு எதை கற்றுக்கொடுப்பார். இத்தனைக்கும் அவர் இருக்கும் அரசுப்பள்ளிக்கூடங்களில் அவர் ஜாதியைச் சார்ந்த மாணவர்கள் படிப்பதில்லை. ஆம் தோழர், அரசுப்பள்ளிக்கூடங்கள் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கூடாரமாக மட்டும் மாறி நிற்கிறது. மீண்டும் சொல்கிறேன் இவையனைத்தும் புதியவை அல்ல; தமிழகம் அறியாததும் அல்ல; ஆனால், எவ்வித அசைவையும் இச்சமூகத்தில் கொடுக்காமல் காலங்காலமாக எல்லா ஊர்களில் வேர்விட்டு நிற்கும் இதனை இன்று பேசியாக வேண்டும் என்றே எழுதுகிறேன். கொங்குப்பகுதிகளில் பயணித்த சில நாட்களில் உறுதிபடக் கிடைத்தத் தகவல் இவை.
கொங்கு பகுதிகளில், அரசு பள்ளிக்கூடங்களில் கவுண்டர் சாதி குழந்தைகளை பெற்றோர்கள் சேர்ப்பதில்லையாம். அரசு பள்ளிக்கூடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கானதாம். தனியார் பள்ளிக்கூடங்களை நடத்துபவர்கள் எல்லாம் கவுண்டர் சாதியினர் என்பதால், அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களை பெரும்பாலும் சேர்ப்பதில்லையாம். ஏதோவொரு காரணம் கொண்டு தவிர்க்கப்படுகிறது அல்லது குழந்தைகள் விரட்டப்படுகிறார்கள்.
அரசு பள்ளிக்கூடங்களை காப்போம் என போராடும் யாரும் இதுகுறித்து வெளிப்படையாக பேசுவதில்லை என வருத்தம் உண்டு. உண்மையாக உழைக்கும் அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர்கள் பாவம். இதை பேசினால் அவர்கள் செய்யும் பாராட்டத் தக்கப்பணிகளில் அவர்களுக்கு இடையூறு வரும். அவர்களும் அரசுப்பள்ளிக்கூடங்களில் இல்லையென்றால், அரசுப்பள்ளிக்கூடங்களை சவக்குழியில்தான் தள்ள வேண்டும். அவர்களுடன் பணிபுரியும் ஆசிரியர்களோடே முரண்பட்டுக்கொண்டே பல நல்ல செயல்களை செய்யும் அவர்களுக்கு இது போன்ற உணர்ச்சிமையமான பிரச்சனை, அவர்களை வீழ்த்தும் கருவியாக்கப்படும் அபாயம் உள்ளது. இதில் நான் அவர்களை குறை கூறவும் இல்லை. இழுக்கவில்லை. பொதுவெளியில், பொது மக்கள் மத்தியில் இது விவாதமாகவே இல்லையே தோழர். திராவிட இயக்கங்கள் கட்சிகளில் இது குறித்து வெளிப்படையான பேச்சுக்களே இல்லையே..
அதேபோல, இன்னொரு சம்பவத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். மதிமுக நடத்திய திராவிட இயக்க நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து திருப்பூர் செல்ல பேருந்தில் பயணமானேன். பொதுவாக, அருகில் இருப்பவர்களோடு பேசும் பழக்கம் உள்ளவன் என்பதால் எனது அருகில் இருந்த இரு நபர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். ஒருவரின் வாழ்க்கை குறித்த அறிமுகத்தை தொடர்ந்து பேச்சு எங்கெங்கோ சென்று சாதியில் நின்றது. இருவரில் ஒருவர், மிக சத்தமாக எல்லோருக்கும் கேட்கும் நிலையில், “தம்பி என்ன சாதி?” என்றார். நான் அதிர்ச்சியோடும் அமைதியோடும் இருந்தேன். அவரே தொடர்ந்து, உங்க பேச்சு கொங்கு பகுதி வாசனையோடு இருக்கு; ஆனா உங்க ஊர் தர்மபுரின்னு சொன்னீங்க, அதான் கேட்டேன் என்றார். நான் மிக சத்தமாக பொதுவெளியில் இவ்வளவு உரக்க சாதியின் பேரை கேட்கிறீங்களே, வெக்கமா இல்லையா என்றேன். மிக கீழ்த்தரமாக சிரித்துக்கொண்டே, தம்பி வெளிநாட்டில இருந்தீங்க இல்ல; அதான் தமிழ்நாட்டு கலாச்சாரம் மறந்துடுச்சு என்றார். பிறகு பேசிக்கொள்ளவில்லை.
எனது இருப்பதி நான்கு வயது வரை தமிழகத்தில்தானே வாழ்ந்தேன். எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. என்னிடம் சாதிப்பெயரைக் கேட்டவர்கள் கூட, “சாமி படத்தில் விக்ரமிடம் கோட்டா சீனிவாசராவ் கேட்பது போல சுத்தி வளைத்தோ அல்லது காதிற்குள்ளோ கேட்பார்கள். வெளிப்படையாக பேசத் தயங்கிய காலம் ஏழு வருடத்தில் மறைந்துவிட்டதா? இல்லை, பள்ளி, கல்லூரிகளில் இள வயதில் நான் இதனையெல்லாம் பார்க்கத் தவறிவிட்டேனா? இத்தனைக்கும் சாதிக்கு பெயர் போன தர்மபுரி மாவட்டத்தில் வளர்ந்து மேலே கூறிய சாதிய கொங்கு மண்டலத்தில்தானே படித்தேன். நோர்வே சென்று திரும்பியதும் இதெல்லாம் எனக்கு இப்பொழுது மட்டும் தெரிவது எதனால் தோழர்? இல்லை, இதுவரை திராவிட இயக்க பெருமைகளை உரைகளிலும் புத்தகங்களிலும் படித்துவிட்டு நானே என் கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தேனா? இல்லை எனக்கு அரசியல் பாடம் எடுத்த ஆசிரியர்கள் எல்லாம் எனக்கு பொய்யாக பாடம் எடுத்துவிட்டார்களா?
சாதியம் பள்ளிகளில் கட்டுப்பாடாக இருந்த நிலையில் இருந்து வெளிப்படையாக பேசும் நிலையில், வெளிப்படையாகவே அரசுப்பள்ளிக்கூடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கென மாறி நிற்கும் நிலையில், பணம் படைத்தவர்களும் உயர் சாதியினரும் தனியார் பள்ளிகளில் மட்டும் தங்கள் குழந்தைகளை சேர்ப்பது அதிகரித்துவிட்ட நிலைக்கும் வெளிப்படையாக சாதியத்தின் கூறுகள் நோக்கி சமூகம் பின்னோக்கி நகர்வதற்கும் தொடர்பு உண்டா? திராவிட இயக்கங்கள் சாதியத்தைக் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்த்து உண்மையென்றால், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் சாதியம் எப்படி சிதையாமல் அப்படியே நிற்கிறது? திராவிட அரசியல் கட்சிகள்தான் தவறானவை திராவிட இயக்கங்கள் கொள்கை காக்கும் ஆயுதங்கள் என்றால், அரசுப்பள்ளிக்கூட முறைகளே சாதியத்தைக் காக்கும் தளமாக மாறி நிற்பது தெரியாமல் என்ன செய்கிறார்கள்? என்ற கேள்விகள் எழுகிறது தோழர்.
கேள்வி நான் உங்களை நோக்கி மட்டும் கேட்கவில்லை. பதிலையும் உங்களை மட்டும் தேடச்சொல்லவில்லை. சேர்ந்தே கேட்போம். சேர்ந்தே பதில் தேடுவோம். அதுவரை உரக்க பேசுவோம். இதுகுறித்த நமக்குள்ளான நட்பு உரையாடலையும் பொதுவெளியிலேயே பேசுவோம்.
தோழமையுடன்:
முனைவர் விஜய் (எ) தமிழ்ச்செல்வன்
– 1983இல் பெரியார் திடலில் சாதி மறுப்பு திருமணம் செய்த இணையரின் மூத்த மகன்.