“அமெரிக்கா, அடிப்படைவாதம் மிகுந்த நாடு. மதவாதம் மலிந்த நாடு. உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் மேற்கூரிய தன்மைகள் மிதமிஞ்சிய அளவில் இருக்கின்றன” என்கிறார் நோம் சாம்ஸ்கி. சமகாலத்தில் அமெரிக்காவின் ஆகச்சிறந்த அரசியல் விமர்சகராக போற்றப்படுபவர். தி ஒயர் ஆன்லைன் தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில்தான் இவ்வாறான விவாதக்கருவாகக் கூடிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் பேட்டியின் முழுவடிவம்:
தமிழில்: மது பாரதி
“அமெரிக்கா, அடிப்படைவாதம் மிகுந்த நாடு. மதவாதம் மலிந்த நாடு. உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் மேற்கூரிய தன்மைகள் மிதமிஞ்சிய அளவில் இருக்கின்றன. அமெரிக்கா உருவான நாள் முதலே நிலவும் நிதர்சனம் இது. அமெரிக்காவின் இந்த அதிதீவிர மதவாத அடையளாமும் அது தேர்தல் கொள்கைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.
உலக நாடுகளில் வெகு சில நாடுகளில் மட்டுமே அதன் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு குடியானவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்றனர். அமெரிக்கர்கள் பெரும்பாலானோர் அத்தகைய நிகழ்வு தங்கள் வாழ்நாளுக்குள்ளேயே சாத்தியமாகும் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர். மேலும், மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் இவ்வுலகம் இப்போது எப்படி இருக்கிறதோ அதே அமைப்பு அம்சத்தோடு வெறும் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றுவிக்கப்பட்டதாகவும் நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கைகள் சிலருக்கு இயற்கைக்கு புறம்பானதாக படலாம். ஆனால் அமெரிக்காவில் இதுவே மெய். இந்த ‘மெய் ஞானம்’ வெகு காலமாக இங்கு நிலவுகிறது.
இந்த வெகு நீண்ட கால நம்பிக்கை ஒருபுறம் சற்றும் குன்றாமல் அப்படியே நிலைத்திருக்க. அண்மையில், அமெரிக்காவில் அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள் மத அடிப்படைவாதிகள். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இவ்வேளையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அடைந்திருக்கும் பிரபலமும், மத உரிமைகளுக்காக ஒன்றுபடும் கரங்களுமே மத அடிப்படைவாதிகள் அரசியல் அந்தஸ்து பெற்றுள்ளமைக்கு ஒரு சிறந்த உதாரணம்” இப்படியாக விரிகிறது சாம்ஸ்கியின் பார்வை.

கவனத்தை ஈர்த்த இருவர்:
கடந்த ஆறு மாதங்களாகவே சாம்ஸ்கி வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து பல கூர்நோக்கு பார்வைகளை முன்வைத்து வருகிறார். சரி, அமெரிக்க அதிபர் தேர்தல் களம் எப்படித்தான் இருக்கிறது. ஒருபுறம் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பார்னி சாண்டர்ஸ் மறுபுறம் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். இவர்கள் இருவருமே சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார்கள்.
பார்னி சாண்டர்ஸ் தன் கையில் எடுத்திருக்கும் துருப்பு வருவாய் ஏற்றத்தாழ்வை சீராக்குவேன் என்பதே. அவரது பிரச்சாரத்து குறிப்பிடத்தக்க ஆதரவு கிட்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இதை மெய்ப்பிக்கும் வகையில் அவரது பிரச்சார செலவுக்காக 33 மில்லியன் டாலர் தனிநபர்கள் வழங்கிய நன்கொடை மூலம் கிடைத்துள்ளது.
குடியரசு வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பும் சற்றும் சளைத்தவர் என்பதுபோல் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர்களில் முன்னணியில், முன்னிலையில் இருக்கிறார்.
அமெரிக்க தேர்தல் களம்:
சாம்ஸ்கியின் பார்வையில், அமெரிக்க தேர்தல் களத்தின் முரண்பாடான சில போக்குகள் காணப்படுவதும்கூட தகவு ஒத்த நிகழ்வுகளில் பிரதிபிம்பங்களே. அது எவ்வாறு என அவரே விளக்குகிறார். “ஐரோப்பியாவில் இத்தகைய அரசியல் போக்கினை வெகு சகஜமாக பார்த்திருக்கலாம். கடந்த தலைமுறையின் பொருளாதார சீர்திருத்த கொள்கைகள் எல்லாம் ஜனநாயக பங்களிப்பை அடக்கிவைக்கும் எதிர்வினையையே ஆற்றியிருக்கின்றன. சில நேரங்களில் பொருளாதார மந்தநிலையும்; சில நேரங்களில் பெரும்பான்மை சமூகத்தின் மீது பெருந்தாக்கம் என இருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் விளைவாக செல்வந்தர்களுக்கான அதிகாரம் கோளோச்சிற்று. பண பலம் படைத்தவர்களின் கைகளில் கிடைத்த கூடுதல் அதிகாரம் அரசியல் போக்கை நிர்ணயிப்பதாயிற்று.
இடமும், சூழலும் தகுந்தாற்போல் பார்வைகள் மாறலாம். ஆனால், நிகழ்வுகள் ஒரே மாதிரியானவையே. ஐரோப்பாவில், பிரதான பாரம்பரிய கட்சிகள் சமூக ஜனநாயக கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக கட்சி ஆகியன தங்களது பிடியை இழந்து வருகின்றன. அதற்கு மாறாக அங்கே வலது சாரிகள், இடது சாரிகளின் சமூக போராட்ட பங்களிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவிலும் அதே மாதிரியான அரசியல் மாற்றங்களே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பெரும்பாலான மக்கள் மத்தியில் சமூக கட்டமைப்புகள் மீது கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. அந்த கோபத்துக்கான நியாயமும் இருக்கிறது. அமெரிக்காவில், அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 45-55 வயது ஆண்கள் மத்தியில் இறப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய புள்ளி விவரங்கள் அமெரிக்கா போன்ற வளர்ந்த சமூகத்தில் விரும்பத்தகாதவையே.
இந்த புள்ளிவிவரம் வெறுமையின் வெளிப்பாடு, இயலாமையின் அடையாளம். இது உணர்த்துவது இந்த வாழ்வில் நமக்கு எதுவும் சொந்தமில்லை. எதிர்காலத்தில் நமக்கென எதுவுமில்லை என்று மக்கள் மனங்களில் ஏற்படும் வெற்றிடத்தின் தாக்கம்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பிரச்சார கருப்பொருள் திட்டமிட்டு வடிவமைக்கப்படுகிறது. அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்றால், சமூக பிரச்சினைகளுக்கான காரணம் அகதிகள், விளிம்பு நிலை மனிதர்கள், தொழிற்சங்கங்கள் என்பது போலவே சித்தரிக்கப்படுகின்றன. ஆனால், உண்மையாக அந்த கோபம் பெரும் பண முதலைகள், தனியார் துறை மீது இருந்திருக்க வேண்டும். அதை விடுத்து தனக்கு கீழே இருப்பவர்களே குறிவைக்கப்படுகின்றனர். இது இரண்டு குழந்தைகளை தனியாக பராமரிக்கும் ஏழைத் தாயின் பிரச்சினைகளுக்கு அவளே காரணம் எனக் கூறுவதற்கு ஒப்பாகும்.
இத்தகைய பிரச்சினைகளை திசை திருப்பும் போக்கினைத்தான் டிரம்ப்பின் தேர்தல் அணுகுமுறை என்கிறார் சாம்ஸ்கி. மத்திய அமெரிக்காவிலிருந்து வந்த அகதிகள் சிலர் அமெரிக்காவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இடையூறாக இருப்பதாக டிரம்ப் பிரச்சாரம் செய்வதே அவருடைய ‘பிரச்சார பாணி’ எனக் கூறுகிறார் சாம்ஸ்கி.
மண்ணின் மைந்தர்கள் என்ற தொணியில் டிரம்ப் போன்றவர்கள், “சிறுபான்மையினத்தவராக, வந்தேறிகளாக இருக்கும் அவர்கள் நம் நாட்டை நம்மிடம் இருந்து பறித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கிலோ-சாக்ஸன் நாடு என நாம் பெருமைப்பட்ட காலம் சென்றுவிட்டது. அமெரிக்காவில் அச்சுறுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மிகவும் பாதுகாப்பான நாடு என்று அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நம்பிக்கை அச்ச உணர்வாக மாறியிருக்கிறது. ஐஎஸ் மீதான பயம் துருக்கியில் இருப்பதைவிட அமெரிக்காவிலேயே அதிகமாக இருக்கிறது. பயத்தின் காரணமாக துப்பாக்கி கலாச்சாரமும் பெருகிவிட்டது” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர் என்பதையும் சாம்ஸ்கி சுட்டிக்காட்டத் தவறவில்லை. டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியின் தலைமையகமே டிரம்பை எப்படி கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறது என்பது மற்றுமொரு விவாத களத்துக்கான கரு.
சாண்டர்ஸ் ஒரு புது பாதையின் வித்தகர்
சாம்ஸ்கியின் பார்வையில் பார்னி சாண்டர்ஸ்க்கு நல்ல மதிப்பீடே இருக்கிறது. அவருக்கு மக்கள் அபிமானம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இருக்கிறது. அவர் தனது பிரச்சார மேடைகளில் சோஷலிஸ்ட் என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகம் செய்தாலும் அவர் ஒரு புது பாதையின் வித்தகர் என்கிறார் சாம்ஸ்கி.
சாண்டர்ஸின் அரசியல் பார்வையானது முன்னாள் அதிபர் எய்ஸன்ஹோவருடையது போலவே இருக்கிறது. 1930-களில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தபோது எய்ஸன்ஹோவர் தான் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளை கேள்வி கேட்பவர்கள் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதைப் போலவே பார்த்தார். கிட்டத்தட்ட அதே பார்வையைத்தான் சாண்டர்ஸும் கொண்டுள்ளார். ஜனநாயக கட்சியினர் செல்வந்தர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். ஆனால், சாண்டர்ஸின் சில பிரச்சாரங்கள் முக்கிய பொருளாதார பிரச்சினைகளை தொட்டிருந்தாலும், அமெரிக்க அதிபராக அவரால் சோபிக்க முடியாது என்பதே சாம்ஸ்கியின் இறுதி வாதம்.
ஒபாமாவை குறிவைக்கும் நிறவெறி:
அதிபர் ஒபாமா மீதான வெறுப்புணர்வின் பின்புலத்தில் இருப்பது ஆழமான இனவெறி என்றால் நம்ப முடிகிறதா. ஒபாமா சார்ந்த குடியரசுக் கட்சியினர் பலரும்கூட ஒபாமா கென்யாவில் ஒரு முஸ்லிமாக பிறந்தவர் என்ற கண்ணாடி வழியாகவே அவரைப் பார்க்கின்றனர். ஒபாமா கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஓரளவு பாராட்டுக்குரியதே என்றாலும் அதை ஜனநாயகக் கட்சியினர் ஒபாமாகேர் என்று அழைக்கின்றனர். அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் முன்னாள் அதிபர் ஜான்சன். ஆனால் அப்போது அத்திட்டம் ஜான்சன்கேர் என்று யாராலும் அழைக்கப்படவில்லை. ஆனால், இப்போது மட்டும் ஒபாமாகேர் என்ற அழைக்கப்படுவதின் பின்னணியில் இருப்பது நிறவெறியே.
இதுதவிர பாதிக்கும் மேலான குடியரசு கட்சியினர் ஒபாமாவை கிறிஸ்துவுக்கு எதிரானவராகவே பார்க்கின்றனர். இது ஒரு வகையான அடிப்படைவாதம். இத்தகைய அடிப்படைவாதத்தில்தான் அமெரிக்க குடியரசு தற்போது சிக்குண்டு கிடக்கிறது.