திவ்ய பாரதி
மதுரையில் மணியம்மை பள்ளிக்கு அருகே காளிமுத்து என்கிற துப்புரவு தொழிலாளியை vaaccine point என்கிற மிக பெரும் மருந்து நிறுவனம் தன் கட்டிடத்தின் முன் இருந்த மலக்குழிக்குள் வேலை என்கிற பெயரில் இறக்கி வன்கொடுமையில் ஈடுபட்ட புகைபடத்தை கையறுநிலையில் நேற்று முகநூலில் பகிர்ந்து இருந்தேன். கையால் மலம் அள்ளுவதை தடை செய்து 2013 லேயே சட்டம் இயற்றப்பட்டு விட்டது. அது மட்டும் இன்றி the scheduled castes and the scheduled tribes (prevention of atrocities) amendment act, 2015 ஜனவரி 26 2016 ல் இருந்து நடைமுறைக்கு வந்து விட்டது. அந்த திருத்த சட்டமும் கையால் மலம் அள்ளுவதை குற்றம் என வரையறுத்துள்ளது மிகவும் வரவேற்க வேண்டிய விஷயம், மேற்கூறிய இரண்டு சட்டங்களின் அடிப்படையில் புகார் மனு ஒன்றை தயாரித்து vaccine point நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி வழக்கு பதிவு செய்ய மதுரை திலகர் திடல் காவல் நிலையத்துக்கு நானும் தமிழ்தாசன் தோழரும் சென்றோம். எங்கள் புகார் மனு காவலர்களுக்கு வியப்பை அளித்தது. ஆய்வாளர் இல்லை இரவு 8.30 மணிக்கு மேல் வாருங்கள் என்று சொல்லி எங்கள் மனுவை பெற்று கொண்டனர்.
இரவு 8,30 மணிக்கு மேல் நானும் தோழர் மேரியும் காவல் நிலையம் சென்றோம். ஆய்வாளர் அப்போதும் இல்லை.நாங்கள் காத்திருந்தோம். சற்று நேரத்தில் vaccine point நிறுவனத்தின் மேலாளர் துப்புரவு பணியாளர் அய்யா காளிமுத்து அவர்களுடன் காவல்நிலையம் வந்தார். எங்கள் வழக்கை சார்பு ஆய்வாளரே விசாரிக்க தொடங்கினார். விசாரனையின் துவக்கத்திலேயே என்னை பேச அனுமதியாமல் அய்யா காளிமுத்துவை பேச சொன்னார். அய்யா காளிமுத்து தான் இப்பணியை முழு விருப்பதோடு தான் செய்ததாகவும் அதற்கு கூலியாக 700 ரூபாய் பெற்று கொண்டதாகவும் vaccine point நிர்வாகம் சொல்லி கொடுத்ததை அப்படியே பரிதாபமாக சொன்னார்.
உடனே அந்த சார்பு ஆய்வாளர் என்னை நோக்கி “மேடம் இப்ப உங்களுக்கு ஓகே வா? அவரே விரும்பி செஞ்சதா ஒத்துகிட்டாரு அப்புறம் என்ன மேடம் உங்களுக்கு பிரச்சனை என்று கேட்டார். உடனே நான் அவர் விருப்பத்தோடு செய்தாரா இல்லையா எனபதல்ல இங்கே பிரச்சனை. சட்டம் தடை செய்த தொழிலை ஒருவரை செய்ய வைப்பது சட்ட விரோதமானது, எல்லா சட்ட விதிமுறைகளையும் மீறி குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்கள் கூட இல்லாமல் அவரை மலக்குழிக்குள் இறக்கியது குற்ற செயல், அதற்காக அந்நிறுவனம் மீது நடவடிக்கை கோரி தான் நான் இங்கே வந்துள்ளேனே தவிர அவரின் விருப்பத்தை அறிய அல்ல என்றேன்.
என்னம்மா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கேங்க என்று கத்த ஆரம்பித்தார் சார்பு ஆய்வாளர். உடனே குறுக்கிட்ட vaaccine point நிறுவனத்தின் மேலாளர், தாங்கள் மிக பெரும் மருந்து கம்பெனி என்றும், தங்களை நம்பி பல நோயாளிகள் இருப்பதாகவும், அப்படிப்பட்ட இடத்தின் முன்பே நரகல் வழிந்து ஓடுவது சுகாதார கேட்டை அசுத்தத்தை விளைவிக்கும் என்பதாலேயே காளிமுத்து அய்யாவை மலகுளிக்குள் இறங்கி அடைப்பை நீக்க சொன்னதாக கூறினார். மூன்று நாட்களுக்கு முன்பே மாநகராட்சியிடம் சொல்லியும் இதுவரை வராத காரணத்தால் தான் வேறு வழியின்றி காளிமுத்து அய்யாவை இறக்கியதாக ஒப்பு கொண்டார். நான் உடனே சுகாதாரம் அசுத்தம் பற்றி எல்லாம் பேசுறேங்க அதே சுகாதாரம் சுத்தம் எல்லாம் காளிமுத்து அய்யாவுக்கு வேணாமா? என்று கேட்க, உடனே அந்த மேலாளர் சற்றும் தயக்கம் இன்றி, மேடம் காலம் காலமா இவுங்க பண்ற வேலை தானே இது, இவுங்களுக்கு எல்லாம் அது பிரச்சனை இல்லை என்றார். இங்கே தான் பிரச்சனையே இருக்குன்னு நான் சட்டத்தை பேச தொடங்கியதும் மேலும் கடுப்பாகி எழுந்து சென்றார் சார்பு ஆய்வாளர். சார்பு ஆய்வாளருக்கு இது ஒரு குற்ற செயலாகவே தெரியவில்லை. இது குறித்து வந்த எந்த சட்டம் பற்றியும் துளி கூட அறிவில்லை.
அந்த மருந்து கம்பெனி க்கு ஆதரவாக பேசியதோடு இதெல்லாம் ஒரு வழக்கா என்கிற ரீதியில் தான் என்னை அணுகினார். என்னுடைய புகார் மனுவை பெற்று கொண்டு csr copy தரும் வரையில் நான் இவ்விடத்தை விட்டு அகல மாட்டேன் என்று சொன்னதும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். sc /st பாதுகாப்பு சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்ய மறுத்தால் உங்களுக்கு தான் பெரும் பிரச்சனை என்றதும் உயர் அதிகாரிகள் பலருக்கு போன் இல் பேச தொடங்கினார். இறுதியாக 11 மணிக்கு வேறு வழி இன்றி வேண்டா வெறுப்பாக csr copy யை போட்டு கொடுத்தார்.
கையால் மலம் அள்ள தடை விதித்த சட்டம் 2013 குறித்து காவல் நிலையங்களுக்கு கொஞ்சம் கூட தெரியவில்லை என்பதை தான் கண்கூடாக இன்று எங்களால் உணர முடிந்தது. sc /st திருத்த சட்டம் நான்கு நாட்களுக்கு முன் அமலுக்கு வந்ததும் அவர்களுக்கு தெரியவில்லை அதனால் தான் ஒரு குற்ற செயல் சாதிய மனோநிலையால் இயல்பானதாக தெரிகிறது. மதுரையில் நான்கு மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை விச வாயு தாக்கி உயிரிழந்த இரண்டு இளம் தொழிலாளர்கள் மரணம்(கொலை) குறித்த வழக்கிலும் இதுவரை மதுரை காவல் துறை 2013 மலம் அள்ளும் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மறுத்து வருகிறது. அதுக்காகவும் நாம் தொடர்ந்து போராட வேண்டி உள்ளது. இந்த சூழலில் மலக்குழியில் இறக்கி வேலை வாங்கிய குற்றத்திற்காக தனியார் நிறுவனம் மீது மதுரையில் வழக்கு பதிவானது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். தற்போது csr காப்பி மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. அதை fir ஆக மாற்றும் வரை சம்மந்தபட்ட நிறுவனம் தண்டனை பெரும் வரை போராட்டம் ஓய்வதில்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன் நண்பர்களே.
திவ்ய பாரதி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர், களப்பணியாளர்.