டெல்லியைச் சேர்ந்த ஒரு வர்த்தகரின் மூத்த மகளான சுஜாதா ஷர்மா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் “தனது தந்தை மறைந்த பின்னர் அவரது 3 தம்பிகள் சொத்துக்களை நிர்வகித்து வந்ததாகவும், தற்போது அவர்களும் மறைந்த பின்னர் தான் பொறுப்புக்கு வர முயன்றபோது தனது சித்தப்பா மகன் அதைத் தடுத்து விட்டதாகவும்” கூறி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நஜ்மி வசிரி பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘இந்து கூட்டுக் குடும்பங்களில் மூத்த ஆண்மகன் குடும்பத் தலைவராவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ அதேபோல மூத்த பெண்களும் குடும்பத் தலைவராக முடியும். குடும்பத்தில் மூத்த பெண், குடும்ப நிர்வாகியாவதை எந்த சட்டமும் தடுக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.
வட இந்திய மாநிலகளில் கர்தா எனப்படும் மூத்த உறுப்பினருக்குத்தான் குடும்பத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும், தீர்மானிக்கும் உரிமை உள்ளது. சொத்து வாங்குவது, விற்பது உள்பட அனைத்து முக்கிய முடிவுகளையும் இவர்கள்தான் எடுக்கிறார்கள். இதில் ஆணாதிக்கமே இதுவரை நிலவி வருகிறது. அதை தற்போது டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு தகர்த்துள்ளது.