சரா

இறுதிச்சுற்று, தமிழ் சினிமாவில் நான் கண்டு ரசித்த முதல் உருப்படியான ‘ஸ்போர்ட்ஸ் டிராமா’. இதற்கு முன் அரிதாக நான் பார்த்த தமிழ் ஸ்போர்ட்ஸ் சினிமாவில், குறிப்பிட்ட விளையாட்டுகளைத் தாண்டிய ஆக்ஷன், ரொமான்ஸ் முதலானவற்றின் ஆதிக்கம் அதிகம் என்பதால் இப்படிச் சொல்கிறேன். ‘வெண்ணிலா கபடிக்குழு’ நல்ல படைப்பு என்றாலும், அதை விளையாட்டுக்குள் அடக்கிவிட முடியாது. அதில், காதல் உணர்வுதான் நம் கவனத்தை அதிகம் ஈர்த்தது.
ஆனால், இறுதிச்சுற்று தன் தன்மையில் இருந்து விலகாதது தனிச் சிறப்பு. தமிழகத்தில் பெரும்பாலான மக்களால் அதிகம் கவனிக்கப்படாத குத்துச்சண்டையை மையக்களமாகக் கொள்வதற்கு தனி கட்ஸ் வேண்டும். இதுதான் இறுதிச்சுற்று படைப்புக் குழுவின் மிரளவைக்கும் கெத்து.
சர்வதேச அரங்கில் நாட்டுக்குப் பெருமைத் தேடித் தரக்கூடிய திறமையாளர்கள் வறுமைச் சூழலிலும் வெகுவாக விரவிக்கிடக்கிறார்கள் என்ற நிஜத்தின் நிழல்தான் இறுதிச்சுற்று. மலிவான வரவேற்புக்காக திரைக்கதையில் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாததன் மூலம் ப்யூர் சினிமாவை தர முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் என்னைக் கவர்ந்த விஷயங்களைப் பற்றி அடுக்க வேண்டும் என்றால் நானே டயர்டு ஆகிவிடுவேன். பாசிட்டிவ் அம்சங்களுக்காக ‘இந்து டாக்கீஸ்’ குழுவின் > http://goo.gl/OrXQcn இந்த விமர்சனம், தோழர் கார்த்திக்கின் https://goo.gl/2zvKK6 இந்த வீடியோ செல்ஃபி விமர்சனத்தையும் நாடலாம்.
இறுதிச்சுற்றில் எனக்கு சில நெருடல்களைத் தந்தது, முதன்மை கதாபாத்திரங்களுள் ஒன்றான மதியின் குடும்பப் பின்னணிதான். மீனவப் பகுதி குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் தோற்றத்துக்காக, அவரது தாயை மார்வாடியாகக் காட்டியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். நாயகியின் தோற்றம் மீது கேள்வி எழக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு பின்னணி திணிக்கப்பட்டுள்ளதாக நம்புகிறேன். உண்மையில் மீனவ குடிசைப் பகுதிகளில் உள்ள இளம் பெண்கள் பலரும் அழகிகள். இறுதிச்சுற்றுக் படக்குழு கண்களின் வழியாகப் பார்த்தாலும், ரித்திகாவைக் காட்டிலும் தோற்றப் பொலிவு மிக்கவர்களை அங்கு பார்க்க முடியும்.
மீனவப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை மார்வாடிப் பெண் காதலித்து திருமணம் செய்துகொண்டு, அவரது வீட்டில் வாழ்கிறார் என்றால், நிச்சயம் அந்த நபர் பொறுப்பும் திறனும் மிகுந்தவராக இருக்க வேண்டும் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. ஆனால், அந்தத் தந்தையோ குடிகாரராகவும் ஊதாறியாகவும் காட்டப்படுகிறார். குடும்பத்தின் மீதும், திருமண வயது மகள்கள் மீதும் அக்கறை இல்லாதவராக இருக்கிறார். குடிசைப் பகுதிகளில் குடிப்பழக்கம் அதிகம் என்பதைப் பதிவு செய்வதற்கு, அந்தத் தந்தையை குடிகாரராக காட்டியதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், குடிசைவாசிகள் பலரும் தங்கள் உடலுழைப்பு அசதியைப் போக்குவதற்கே குடிப்பழக்கத்தை தவிர்க்க முடியாமல் டாஸ்மாக் போகிறார்கள் என்பதும் நிதர்சனம்.
எவ்வளவுதான் குடிப்பழக்கம் இருந்தாலும் தன் குடும்பம் மீது கொஞ்சமும் அக்கறை காட்டாத குடும்பத் தலைவர்கள் என்று பார்த்தால், குடிசைப் பகுதிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான சதவீதத்தினர் மட்டுமே இருக்கக் கூடும். குடிப்பழக்கம் இருந்தாலும் மதிப்புடன் குடும்பம் நடத்துபவர்களே அதிகம் என்பதும் நம்பத்தகுந்தது.
இது ஒருபுறம் இருக்க, போகிற போக்கில் அந்தக் குடிகார அப்பா துட்டுக்காக கிறிஸ்தவ மதம் மாறுவதாகவும், அதைக் கிண்டல் செய்தும் காட்சி அமைக்கப்பட்டிருப்பதும் நெருடலானது. பணம், கல்வி முதலான காரணிகளுக்காக மதம் மாறுவது என்பது இருந்தாலும், மனம் விரும்பி மதம் மாறும் ஏழைகளின் எண்ணிக்கையை அதற்கு இணையான எண்ணிக்கையில் நான் பார்க்கிறேன். எந்த ஆன்மிக வடிமாக இருந்தாலும், அதில் டிசிப்ளின் – ஒழுக்கம் என்பது முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன். குடிசைப்பகுதிவாசிகளைப் பொறுத்தவரை, தங்களை ஏதோ ஒரு வகையில் ஒழுங்குபடுத்துவதால் மதமாற்றத்தில் ஈடுபடுவதும் உண்டு.
விளையாட்டுத் துறையின் உண்மைப் பின்புலத்தை கச்சிதமாக பின்பற்றி, இந்த மாதிரி சமூகப் பின்னணியை அமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படவில்லை என்பதை என்னைப் பொறுத்தவரையில் ஒரு குறையாக நினைக்கிறேன்.
இதுபோன்ற ஏழை மனிதர்களின் வாழ்க்கைப் பின்னணியைத் திரையில் கையாளும்போது எப்படிப் பக்குவமாக செயல்படுவது என்பதற்கு ‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் சரியான சமீபத்திய உதாரணம். அவர் தனது படத்துக்கு முதலில் அந்தச் சிறுவர்களின் தாய் கதாபாத்திரத்தை ஒரு பாலியல் தொழிலாளியாக வடிமைக்கிறார். பெரிய கட்டிடத்தின் பால்கனியின் நின்று கொண்டு குடிசைப் பகுதிகளைப் பார்ப்பதன் விளைவு அது. படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு குடிசைவாசிகளுடன் பழகுகிறார்; அவர்களது வாழ்க்கையை நெருக்கமாகப் போய்ப் பார்க்கிறார். தன் தவறான பார்வையை நினைத்து அதிர்ச்சி அடைகிறார். அந்த மக்களின் கண்ணியமான வாழ்க்கை முறையை நேரில் கண்டு, அந்த இளம் தாய் கதாபாத்திரத்தை நிஜத்துடன் பொருந்தக் கூடியதாக மாற்றி வடிவமைக்கிறார். இந்த மனமாற்றத்தையும் கதாபாத்திர திருத்தத்தையும் அவரே வெளிப்படையாகவும் சொல்லத் தயங்கவில்லை.
குத்துச்சண்டை சார்ந்த பின்புலத்தின் நம்பகத்தன்மைக்கு ஆண்டுக்கணக்கில் மெனக்கெட்ட இறுதிச்சுற்று படக்குழு, குடிசைப்பகுதி மக்களின் நிஜ வாழ்க்கையை அறிய சில மாதக்கணக்கை செலவிட்டிருந்தால், எனக்கு ஏற்பட்ட இந்த நெருடல்களுக்கு அவசியமே இருந்திருக்காது என்று நம்புகிறேன்.
குடிசைவாழ் மக்களின் வாழ்க்கையை தங்கள் கதையோடு பதிவு செய்ய விரும்புவர்கள், அந்தப் பகுதிகளுக்கு முன்பு காரை நிறுத்திவிட்டு கண்ணாடியைத் திறந்துவிட்டு சில மணிநேரம் பார்க்கும் ஹோம் ஒர்க்கை செய்யாமல், எளிதில் அணுகக் கூடிய அந்த மக்களுடன் சில காலம் நேரில் பழகலாம் என்றே சொல்லத் தோணுது.
இதுபோன்ற மிகச் சில நெருடல்கள் இருந்தாலும், இன்னும் சில தடவை திரையரங்கில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை எனக்குத் தூண்டியிருக்கும் வகையில், நல்ல சினிமாவாக என் கண் முன் ஜெயித்து நிற்கிறது இறுதிச் சுற்று.
சரா, பத்திரிகையாளர். சராவை இங்கே பின் தொடரலாம்
Saraa Subramaniam