இறந்தவர்களின் சாதியைக் கண்டுபிடிப்பது எப்படி? ஊடகங்கள் கற்றுத்தரும் உத்தி!

சுரேந்தர்
surendar
சுரேந்தர்

புதிதாக ஒரு நோய் பரவிக் கொண்டிருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும் , பாதிக்கப்பட்டவர் – பாதிப்பு ஏற்படுத்தியவர்களின் சாதிச் சான்றிதழ்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அவர் தலித்தா தலித் அல்லாதவரா என்கிற கேள்வி பிரதானப்படுத்தப் படுகிறது.

ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொள்கிறார். அவர் ஒரு தலித் இயக்கத்தில் தீவிரமாக களமாடி இருக்கிறார். அவரது போராட்டங்களுக்கு மற்றொரு இந்து மாணவர் அமைப்பு மூலமாக எதிர்ப்பு கிளம்புகிறது. கல்லூரி நிர்வாகம் , காவல் நிலையம் அளவிலேயே முடித்து வைத்திருக்கக்கூடிய இந்த பிரச்சினையைத் தூக்கிக் கொண்டு ஒரு தரப்பு ஆளும் அரசியல் கட்சியை வரவழைக்கிறது. அமைச்சகம் தலையிடுகிறது. கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரோஹித் ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருக்கிறார். தற்கொலை செய்துகொள்ளும்வரை இந்த போராட்டம் பக்கத்து தெருவில் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ” தலித்தாக பிறந்தது ஒரு விபத்து ” என்கிற தற்கொலை குறிப்பு ஒன்று போதும், இது சாதிய பிரச்சினையா இல்லையா என்பது.

அவரது சாதி காரணமாகவே அவரது தரப்பு நியாயம் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்கிற அடிப்படையில் , இந்த பிரச்சினையில் அவர் என்ன சாதி என்கிற ஆராய்ச்சி புரிந்துகொள்ளக்கூடியது.

கள்ளக்குறிச்சி SVS கல்லூரியில் நடந்த கொலைகளின் (என்றே நம்புகிறேன்) தொடர்ச்சியாக அந்த கல்லூரியின் தாளாளர் காவலில் அடைக்கப்பட்டு நேற்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருக்கிறார். இதை செய்தியாக விகடன் e-magazine நேற்று அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் விழுந்த கமெண்டுகள் சில நாராசம். அவர்கள் சொல்ல வந்த கருத்தின் மொத்த சாராம்சம் இதுதான்.

” செத்துப்போன மாணவிகள் தலித்தாக இருந்திருந்தால் இந்நேரம் பெரும் போராட்டம் வெடித்திருக்கும் ”

செத்துப்போன மாணவிகளின் சாதிச் சான்றிதழ்களை இதில் தோண்ட வேண்டிய அவசியம் என்ன ? லட்சம் லட்சமாக பணம் வசூல் செய்துவிட்டு அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் மோசடி செய்திருக்கிறார்கள். ஊழல் நிர்வாகத்திற்கெதிராக போராடி மடிந்திருக்கிறார்கள். இந்த பிரச்சினை அந்த அடிப்படியிலேயே எதிர் கொள்ளப்பட வேண்டும். இதில் இறந்தவர்களின் சாதி என்னவாக இருந்தால் என்ன ?

அப்படி அவர்கள் குறைபட்டுக்கொள்கிற அளவிற்கு இந்த பிரச்சினையை தமிழகம் மென்மையாக எடுத்துக்கொள்ளவில்லை என்றே எனக்குப் படுகிறது. காரணமானவர்கள் காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றமும் சிறப்பான கவனத்தோடு இந்த வழக்கை அணுகிக்கொண்டிருக்கிறது. முதல்வரைத் தவிர அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் இது தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு என்று பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கு தற்போது CIDக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

பேதமின்றி அனைத்துத் தமிழக சேனல்களிலும் இதுதான் பிரதான செய்தியாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் Press Conferenceல் அமர்ந்து துணிச்சலாக வாக்குமூலங்கள் தருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கல்லூரியை ஆய்வு செய்து சான்றிதழ் அளித்தவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றே அறிகிறேன். ஆக இதுவரை இந்த வழக்கு எந்த திசையில் செல்ல வேண்டுமோ அந்த திசையில் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. இனிமேலும் செல்ல வேண்டுமானால் அரசுதான் மனது வைக்கவேண்டும்.

இதில் சம்மந்தமே இல்லாமல் சாதியை இழுப்பவர்களைக் கண்டால் சிரிப்பு வருகிறது. ஹைதராபாத்தில் சாதிய அடிப்படையில் புறக்கணிப்பு காரணமாக தற்கொலை செயதுகொண்டவரையும் கள்ளக்குறிச்சியில் ஊழல் நிர்வாகத்திற்கு எதிராக போராடி கொலையுண்டவர்களையும் முடிச்சு போட்டு களங்கப்படுத்துபவர்களின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் ?

இது திடீரென்று ஏற்படுத்தப்பட்டதில்லை. பிரச்சினையின் அடிப்படை என்ன , நோக்கம் என்ன என்பதையெல்லாம் விட்டுவிட்டு சாதியைப் பிடித்துத் தொங்குவது என்பது தமிழகத்தில் தினமலர் தொடங்கி வைத்த பாரம்பரியம். உதாரணத்திற்கு சீர்காழியில் இரண்டு பேர் கொடுக்கல் வாங்கல் தகராறில் அடித்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் . அடுத்த நாள் தினமலரில் இப்படி செய்தி வரும் .. // சீர்காழி வைசியர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் சீர்காழி காலனி கலியன் மகன் முத்துவிடம் …// குறிப்பாக சாதியையும் உணர்த்துகிறார்களாம்.

வன்னியர்களை அடையாளம் காட்ட வேறொரு யுக்தியை வைத்திருக்கிறது. உதாரணத்திற்கு ஒருவர் குடிபோதையில் டீக்கடையில் வம்பு வளர்த்து கைதாகிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த நாள் // .. டீ கடையை அடித்து நொறுக்கிய பாமக நிர்வாகி கைது .// என்று வரும். இதைப்போல் வாய்க்கால் தகராறு, சொத்துத் தகராறு , முன்விரோதம் , கள்ளக்காதல் எல்லாவற்றுக்கும் சாதியை இழுத்துவிடுவார்கள். நிற்க. இதில் தலித்தோ வன்னியரோ சம்மந்தப்பட்டிருந்தால் மட்டும்தான்.

சாதி பிரச்சனையில் கொடுமை என்றால் அதை அந்த அடிப்படையில்தான் அணுக முடியும். முன்விரோதம் காரணமாக கொலை என்றால் அதை அந்த அடிப்படியில்தான் அணுக வேண்டும். எங்கு சாதி முன்னுரிமை பெற வேண்டும் என்கிற தெளிவு இல்லாதவர்களா நாமெல்லாம் ? அல்லது தெளிவில்லாதவர்கள் போல நடிக்கிறோமா ? வயிற்று வலி என்று மருத்துவரிடம் போகிறோம். இல்லை இல்லை இதுவேண்டாம் நேற்று ஒருவருக்கு கண்களில் மெஷீன் எல்லாம் வைத்து பார்த்தீர்களே அதைப்போல் சிக்கிச்சை தான் வேண்டும் என்று கேட்க முடியுமா? அவனது பிரச்சனையும் உனது பிரச்சினையும் வேறு வேறு அல்லவா ?

அதில் ஒருவர், இறந்தவர்கள் தலித்தாக இருந்திருந்தால் இந்தியா முழுவதும் கவனப்படுத்தியிருப்பார்கள் என்று பதிவிட்டு இருந்தார். இவரது ஆசை என்ன ? தமிழகத்தில் நடக்கும், நடந்த எந்த பிரச்சினைக்கும் வடநாட்டு ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதே இல்லை என்பதுதான் வரலாறு. அது தலித் பிரச்சினையாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. வினோதினி மீதான ஆசிட் வீச்சு , முத்துக்குமார் , சசிக்குமார் என்று பார்த்து கொண்டுதானே இருக்கிறோம். சரி விடுங்கள் , நாகை மாவட்டத்தில் இறந்து போன தலித் பெரியவரின் சவ ஊர்வலத்தை ஊர் வழியாக கொண்டுபோக முடியாமல், நீதிமன்ற உத்தரவையும் மீறி காவல்துறையினரே குறுக்கு வழியாக தூக்கிச் சென்று அடக்கம் செய்த அவலம் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்குக் கூட தெரிந்திருக்காதே அய்யா.

பண்ணை அடிமைகளாக இருந்த காலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் சாதி ரீதியாக கொடுமைகளுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டு ஊருக்கு வெளியே விவகாரம் தெரியாத அளவிற்கு மறைக்கப்பட்டு வந்த காலம் மீண்டும் வேண்டும் என்கிறார்களா? இப்பொழுதுதான் சாதி ரீதியிலான கொலைகளுக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ குறைந்தபட்சம் பொதுவெளிக்கு விவாதத்திற்காகவாவது வர ஆரம்பித்து இருக்கிறது. அதுவும் பொருக்க மாட்டாமல் சம்மந்தம் இல்லாத பிரச்சினைகளுடன் முடிச்சிட்டு நீர்த்து போகச்செய்யும் நுண்ணரசியல் இது என்றே என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

இவ்வாறு தட்டையாக கேள்வி எழுப்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் :

1. ஆழ்ந்த வாசிப்பும் அரசியல் தெளிவும் இல்லாமல் , தாம் படிக்கும் பேப்பர் கூறுவதே உண்மை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

2.ஒளித்து வைத்திருக்கும் சாதித்திமிரை மறைத்து வைக்க முடியாமல் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் வெறுப்புணர்வை கொட்டுபவர்கள்.

சுரேந்தரை இங்கே பிந்தொடரலாம்  Suren Surendhar.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.