#விவாதம்: பாண்டேயின் உடல்மொழியும் மற்றைய நெறியாளர்களின் காந்தி வழியும்…

வியாழக்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சி குறித்து சமூக-அரசியல் விமர்சகர் வில்லவன் இராமதாஸ் ஒரு பதிவு எழுதியிருந்தார்…

“விவாதிப்பவர்கள் ஏன் பாண்டேயிடம் சமநிலை இழக்கிறார்கள்?

பாண்டே எழுப்புவதைவிட சிக்கலான கேள்விகளை மற்ற தொலைக்காட்சி நெறியாளர்கள் எழுப்புகிறார்கள். பாண்டே மிகவும் பழைய மற்றும் ஒரே பொருள் கொண்ட கேள்விகளைத்தான் திரும்பத்திரும்ப எழுப்புகிறார். ஆனாலும் மற்ற நெறியாளர்களிடம் உண்டாகாத பதட்டம் மற்றும் தடுமாற்றம் பாண்டேயிடம் பேசுவோரிடம் தென்படுகிறது.

காரணம் பாண்டேயின் தனிப்பட்ட (மற்றும் ஆபத்தான) உடல்மொழி. தலையை தாழ்த்தி மேல்பார்வை பார்ப்பது, தலையை ஒருபுறமாக சாய்த்து கோணலாக சிரிப்பது, அல்லது வெறுமனே கிண்டலடிக்கும் வடிவிலான சிரிப்பை வெளிப்படுத்துவது போன்ற பல செய்கைகளை நீங்கள் அவரிடம் காணலாம்.

இவை எதுவும் மற்ற நெறியாளர்களிடம் காண இயலாது. மூத்த நெறியாளர்கள் ஜென்ராம், வெங்கட், குணா (செந்திலை அதிகம் பார்க்க வாய்ப்பில்லை, ஜீவசகப்தனை பார்த்ததேயில்லை- உபயம் அரசு கேபிள்) ஆகியோரது விவாதங்களை கூர்ந்து கவனித்தால் அவர்கள் தலையாட்டுவது மிக அரிதாக நடப்பதை பார்க்கலாம். அது அனேகமாக ஆமோதிப்பதற்காக மட்டும் நடக்கும்.

பாண்டேயின் உடல் மொழியும், குரல் ஏற்ற இறக்கமும் (டோனாலிட்டி) எதிரிலிருப்பவரின் கருத்தின் மீது மறுப்பையும், அலட்சியத்தையும், எள்ளளையும் வெளிப்படுத்துகின்றன. அவர்கள் இதனை சகிக்க மறுப்பதால் (தன்னையறியாமல்) ஆத்திரமடைந்து எதிர்வினை செய்கிறார்கள். பொதுவாக மனிதர்கள் வார்த்தைகளில் இருந்து வெறும் 7 சதவிகிதத்தை மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். ஏனையவற்றை உடல்மொழியும் வார்த்தை உச்சரிப்பின் ஏற்ற இறக்கமும் புரியவைக்கின்றன. ( நான் நன்றாக இருக்கிறேன் என சோகமான குரலில் சொன்னால் நீங்கள் என்ன புரிந்துகொள்வீர்கள்… என் வார்த்தைகளையா அல்லது உணர்வையா? )

பேச்சாளர்கள் பாண்டேயின் உணர்வுக்கு எதிர்வினை செய்ய முனைந்துதான் சிக்கிக்கொள்கிறார்கள். அதன் சமீபத்து விக்கெட் பழ.கருப்பையா.

பாண்டேயின் பாணி ஒரு ஆக்கபூர்வமான விவாதத்துக்கு ஒருக்காலும் உதவாது, வேண்டுமானால் சுவாரஸ்யமான வாதத்துக்கு உதவலாம்.

நான் சொல்வதில் ஐயமிருந்தால் ஒரேயொரு சோதனையை செய்துபாருங்கள்.
ஒரு தீவிரமான உரையாடலில் எதிரேயிருப்பவர் பேச்சுக்கு பாண்டே பாணி உடல்மொழியோடு “ அருமை அருமை அருமை” என அவரது மாடுலேஷனோடு பதில் சொல்லிப்பாருங்கள்.. (விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல)”

வில்லவன் இராமதாஸின் பதிவுக்கு வினவு தளத்தின் பொறுப்பாளர் கன்னையன் இராமதாஸின் எதிர்வினை…

“வில்லவன், உங்களுடைய கருத்து அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது. விவாதங்களில் கேள்வி கேட்கும் நெறியாளர்கள் பாண்டே துவங்கி நீங்கள் பாராட்டும் ஏனையோர் வரை தங்களது விவாதங்களின் அடிப்படையை அல்லது திசை வழியை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மற்றும் தமது சொந்த அரசியல் கண்ணோட்டங்களிருந்தே பெறுகிறார்களே அன்றி உடல் மொழியில் அல்ல. உடல் மொழியில் 73 சதவீதமும், வார்த்தையில் அதாவது குறிப்பிட்ட அரசியல் கண்ணோட்டத்தோடு தொடர்புடைய பொருளில் 7 சதவீதமும் மட்டுமே எதிரில் இருப்போரிடம் சென்றடைகிறது என்பது மிகவும் அபத்தமானது.

 இது உண்மை எனில் இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்பதாக பேசும் பல்வேறு பாசிச எண்ணம் கொண்டோரையும், செயல்பாட்டில் உள்ளோரையும் உங்களுடைய உளவியல் ஆய்வு நல்லோர் என்று விடுதலை செய்து விடும். இவையெல்லாம் சமூக அறிவியல் அதாவது சொல்லிலும் செயலிலும் நடைமுறை சாராத வெறுமனே வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு மிரட்டுவதோடு தவறான புள்ளிவிவரங்களையும் கொண்ட முதலாளித்துவ பாணி கல்வி நிறுவனங்களின் பார்வை மட்டுமே. வைகுண்டராஜனின் காசில் பேசும் நெறியாளர்களும், பச்சமுத்து தொலைக்காட்சிகளில் தந்திரமாக மழை வெள்ளத்தின் குற்றவாளிகளான அரசையும், ஆக்கிரமிப்பு முதலாளிகளையும் – பொத்தேரியை ஆக்கிரமித்த பாரிவேந்தரையும் உள்ளிட்டு – காப்பாற்றும் பொருட்டு நிகழ்ச்சிகளின் தலைப்பையும், விவாத நோக்கையும் மாற்றுகிறார்களே அவர்களின் உடல் மொழி நீங்கள் பாராட்டும் வகையில் ‘காந்தி’ போல இருப்பினும் இவர்களின் அதாவது அந்த தொலைக்காட்சிகளின் செல்வழியை உங்களது ஆய்வு கண்டுபிடிக்கும் வகையில் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கொள்கைகளை சமூக சேவகர்கள் வேடத்தில் கத்தும் இந்துமதவெறியர்களும் அவர்களின் இதயக்குரலாக பேசும் பாண்டே போன்றோரும் ஒருவகையில் பழைய வகையிலான காட்டுக்கத்தல் போடும் பிற்போக்கு வாதிகள் மட்டுமே. சொல்லப்போனால் இவர்கள் தந்திரமாக பேசுமளவு இன்னும் அப்டேட் செய்து கொள்ளவில்லை. ஆனால் நடுநிலையின் பெயரில் நல்லவிதமான உடல்மொழியில் பேசுவோர்கள்தான் நரித்தனமாக பேசி எதிரில் இருப்போரை மயக்குகிறார்கள். ஒரு முறை தமிழக முஸ்லீம் அமைப்பு ஒன்றை அனேகமாக த.மு.மு.க என்று நினைக்கிறோம், அழைத்த சென்னை அமெரிக்க தூதரகம் அவர்களது வாதத்தை கேட்டதாம். அது யூடிபில் நபிகள் படம் குறித்த பிரச்சினை. இவர்கள் பேசுவதை அமைதியாக கேட்ட துணை தூதர், “உங்கள் வாதங்களை நேர்த்தியாக வைக்கிறீர்கள், நன்றி ” என்று அனுப்பிவிட்டார்கள். அடுத்த நாளே ஆப்கனிலோ, ஈராக்கிலோ குண்டு போட்டு ஆயிரம் பேரைக் கொன்றிருப்பார்கள். எனினும் அவர்கள் பாண்டே போல கத்தியோ, கோணலாகச் சிரித்தோ இல்லாமல் வெகு நாகரீகமாகவே நடந்து கொண்டார்கள்.

பழ.கருப்பையாக அவுட்டாக காரணம் பாண்டேவின் உடல் மொழி என்ற உங்களது ஆய்வு முடிவு உண்மையில் பாண்டே போன்றோருக்கே ஆதரவாக சென்று முடியும். ஏனெனில் பழ.கருப்பையா எனும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பெருச்சாளி இதற்கு முன் அ.தி.மு.கவில் சேரும் போது அம்மா என்ன புனிதத்தாயா இருந்தாரா, இல்லை அய்யாதான் மிஸ்டர் நேர்மையின் இலக்கணமாக இருந்தாரா?
பழ.கருப்பையா தனது சொந்த நலன் காரணமாக – அது புதிய பதவி கிடைக்கவில்லை, ஏதோ தனிநபர் முரண்பாடு, சசிகலா கும்பலோடு முரண்பாடு என்றே ஏதோ ஒரு எழவாக இருக்கலாம் – மட்டுமே அதிமுகவிலிருந்து விலகி அம்மாவை குற்றம் சாட்டுவது போல பேசுகிறார், நடிக்கிறார். பழ கருப்பையாவின் சந்தர்ப்பவாதத்தை உங்களது உளவியல் ஆய்வு கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் ஈசி விக்கெட்டான பாண்டே மேல் உடல் மொழி என்று ஒரே போடாக போடுகிறீர்கள். பாண்டேவின் உடல்மொழியோ வாய் மொழியோ இரண்டும் வடிவம், உள்ளடக்கம் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதற்கு பொருத்தமாகவே இருக்கிறது. என்ன இந்து கொஞ்சம் பழைய டைப் மட்டுமே. எது எப்படியோ சொல்லிலும் செயலிலும் நாம் பொருத்தமாக இருந்தால்தான் இத்தகைய அப்பட்டமான நாடகத்தை புரிந்து கொள்ள முடியும். ஃபேஸ்புக்கில் அதிகம் நிலைத்தகவல் போடுவதால் அந்த புரிதலை பெற முடியும் என்று தோன்றவில்லை. அரசியல் பொறுப்புணர்ச்சியோடும், கடமையுணர்வோடு மக்களிடம் வேலை செய்வது மூலமே அந்த புரிதல் கிடைக்கும் என்பதை உங்களுக்கு தோழமையோடு சொல்லிக் கொள்கிறோம். 

விவாதிப்பவர்கள் ஏன் பாண்டேயிடம் சமநிலை இழக்கிறார்கள் என்று ஆய்வு செய்யும் போது நீங்கள் பாண்டேவை மட்டும் கருத்தில் கொள்கிறீர்கள். பாண்டேவிடம் விவாதிக்கும் நபர்களின் அரசியல் சமரசங்களும், சந்தர்ப்பவாதங்களும், ஓட்டுக் கட்சி கூட்டணி நிர்ப்பந்தங்களும், என்று ஏராளமான பலவீனங்களை வைத்திருக்கின்றனர். இந்த பலவீனங்களை எடுத்து கிடுக்கிப் பிடி போடுமளவு பாண்டே யோக்கியர் இல்லை மட்டுமல்ல, கடைந்தெடுத்த அயோக்கியர் என்பதால் போகிற போக்கிலோ இல்லை வெறும் மிரட்டலிலோ நாக் அவுட் செய்கிறார். சின்ன கிரிமினல் பெரிய கிரிமினலை பார்த்தோ இல்லை பெரிய கிரிமினலை சின்ன கிரிமினலை பார்த்தோ சில தருணங்களில் பயப்படலாம். இதுவே தேர்ச்சி பெற்ற கிரிமினல் என்றால் அவரைப் போன்ற உத்தமரே இந்த உலகில் இல்லை என்று பெயரெடுக்குமளவு ‘குற்றங்குறை’ இல்லாமல் செய்வார். என்.டி.டி.வி பிரனாய் ராய் கூட அமைதியாகப் பேசும் ஒரு நெறியாளர்தான். ஆனால் அந்த டீசன்சிக்கு பின்னே உள்ள சதிகள், சமரசங்கள் கடைசியாக பீகார் தேர்தலில் பா.ஜ.க வெற்றி என்று அறிவித்து பின்னர் மன்னிப்பு கேட்டது வரை ஏராளம் அம்பலத்திற்கு வந்துவிட்டன.

பாண்டேக்கள் வில்லன்கள்தான். அதே நேரம் பழ கருப்பையாக்களை நல்லவர்களாக்கித்தான் பாண்டேக்களை வில்லன்களாக நிறுவ முடியும் என்றால் இறுதியில் பாண்டே தன்னை சுலபமாக காப்பாற்றிக் கொள்வார். பாசிஸ்டுகளின் உத்தியை எதிர் கொள்ளவதற்கு வெறுமனே டெக்னிக்கல் நுட்பம் மட்டும் அதாவது உடல் மொழியோ இல்லை பன்ஞ்லைன் பேசும் தருக்க மொழி மட்டும் போதாது. வாழ்க்கையை மக்கள் நலனில் இருந்து உள்ளது உள்ளபடி ஊடுறுவிப் பார்க்கும் பார்வையும், அந்த பார்வையை உருவாக்கும் களப்பணி சார்ந்த நடைமுறையும் வேண்டும். இல்லையேல் வார்த்தைகளை வைத்தே வாழ்க்கையை ஆய்வு செய்யும் சுயதிருப்தியிலும் அது தரும் டிஜிட்டல் பரவசமும் நம்மை அரித்துத் தின்றுவிடும்.”

One thought on “#விவாதம்: பாண்டேயின் உடல்மொழியும் மற்றைய நெறியாளர்களின் காந்தி வழியும்…

  1. வினவு கண்ணையனின் கருத்தே என் கருத்தும்- உடல் மொழி (அதுவும் ஒரு ஆணின் உடல் மொழி) கண்டிப்பாக
    விவாதத்திற்கு வரும் அரசியல் பிரமுகரை பொருட் படுத்தாது .இன்னும் இடம் கொடுத்தால் பாண்டே அணிந்து இருக்கும் நீல நிறச் சட்டை தான் எதிரில் அமர்ந்து இருப்பவரின் சிந்தனையைத் தடுக்கிறது , அல்லது பாண்டேயின் பெல்ட் தான் காரணம் என்று எல்லாம் எழுத இடம் கொடுப்பீர்கள் போல

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.