விலாசினி ரமணி

என் வீட்டுக்கருகில் ஒரு தறுதலை இருந்தான். எப்பொழுதெல்லாம் வீட்டை விட்டு இறங்குகிறேனோ அப்போதெல்லாம் சரியாக அவன் வண்டியைக் கிளப்பி தொடர்ந்து ஒலியெழுப்பிக்கொண்டேயிருப்பான். அவன் வீட்டு வாசலிலிருந்துதான். தெருவில் எங்காவது என்னைக் கடக்க நேர்ந்தாலும் விறுக்கென்று வண்டியை அதி வேகத்தில் உறுமவிட்டுச் செல்வான். எங்கள் வீடுகளுக்குப் பொதுவாக துவைத்த துணியைக் காய வைக்கக் கட்டப்பட்டிருக்கும் கொடியை (அது நான் கட்டியதில்லையென்றாலும்) சமயம் கிடைக்கும் போதெல்லாம் அறுத்தெறிவான். என் துணிகள் அதில் காயாத போதும். வீட்டில் தொலைபேசி அடிக்கும் ஆனால் யாரும் பேச மாட்டார்கள். அவன் தான் என்றெல்லாம் திட்டவட்டமாகக் கூற முடியாது. வீட்டில் ஏதோ வேலையாக உள்ளறையில் இருந்தால், “வெளியே வாடி” என்பதுபோல் தொடர்ந்து ஏதாவது பொறுக்கித்தனம் செய்தபடி இருப்பான். அவன் நண்பர்களோடு இருந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம். எத்தனைக் கேவலமான வார்த்தைகளைப் பேச முடியுமோ, “பு”, “கூ” எல்லாம் எந்த பீப்பும் இல்லாமல் வரும்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவன் பெற்றோரிடம் கூறினேன். அதற்கு அவர்கள், “உன் கையப் புடிச்சு இழுத்தானா, உன் வீட்டுக்கு வந்தானா? அவன் பாட்டுக்கு ஏதோ செய்யறான் (தனி மனித சுதந்திரம்), உனக்கென்ன வந்தது? புடிக்கலேனா காத பொத்திட்டு போவியா,” என்றார்கள். என்ன செய்தும் இது நிற்காமல் போகவே வேறு வழியில்லாமல் போலீஸிடம் புகார் கொடுத்துவிட்டேன். முதல் தடவைக் கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் அவன் தெனாவட்டாகவே திரிந்தான். புகார் கொடுத்ததையடுத்து திருந்துவான் என்று பார்த்தால் அவன் கெட்ட வார்த்தைப் பேசுவதும் (நண்பர்களிடம், அவன் வீட்டுச் சுவருக்குள்ளிருந்துதான்) நின்றபாடில்லை. அத்தனையும் பெண்ணுறுப்பு, பெண்ணொழுக்கம் குறித்த வார்த்தைகள்
இரண்டாவது முறை கமிஷனரிடம் சென்று எழுத்துவழி புகார் கொடுத்தேன். அவனை விசாரிக்க அழைத்தவர், அவன் திமிராக, தான் செய்த செயல்களுக்கு கொஞ்சமும் வருந்தாமல் மார்பை விடைத்துக் கொண்டு நின்றிருந்தவனை நோக்கி விட்டாரே ஒரு அறை. “ஈவ் டீசிங்கா செய்யற? பின்னாடி சொருகினா எப்படி இருக்கும் தெரியுமா? வாயையும் சூ….யும் மூடிட்டு இருக்கனும்” என்றும் அடுத்தமுறை தொடர்ந்தால் வழக்கு பதியப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.
அந்தத் தறுதலையின் பெற்றோர், அவன் செய்தது அவன் சுதந்திரம் என்றனர் (நம்ம கலை இலக்கிய, அரசியல் வட்டத்தில் ஒரு வார்த்தை இருக்கிறதே, அது என்ன? கருத்து சுதந்திரமா? அதேதான்) ஆனால் போலீசும், சட்டமும் ஈவ் டீசிங் என்று என் பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து அவன் தொந்தரவுகளிலிருந்து என்னைக் காப்பாற்றினர்.
சிம்பு மாதிரியான “சமூக அந்தஸ்து” பெற்றவர்கள் தெரு முனையில் நாலு வயசுப் பையன்களுடன் சேர்ந்து நின்று கொண்டு, பெண்கள் தங்களைக் கடக்கும்போதெல்லாம் ஊளையிட்டு, கெட்ட வார்த்தைப் பேசியா கும்மியடிக்கமுடியும்? பாவம், அவர்களாலானது, அவர்கள் வசதிக்கேற்ப லட்சங்கள் செலவழித்து பாடலை வெளியிட்டுக்கொள்கிறார்கள் (இதில் வைரமுத்துவுக்கும், முத்துக்குமாருக்கும் தங்கள் பிழைப்பு கெட்டுவிடுமே என்று பயம் வேறாம்!!)
அப்பாடலை இத்தெருமுனைகளில் கூடி நிற்கும் இளசுகள் பெருசுகள் பாடிக்கொண்டிருக்கும். பிடிக்காதவர்கள் காதைப் பொத்திக்கொண்டு செல்ல வேண்டும். இல்லை, “ப்ளீஸ், பெண்களுறுப்பைக் கொச்சைப்படுத்தியும் பற்றியும், ஒழுக்கத்தைப் பற்றியும் பேசாதீங்கோ” என்றும் கேட்டுக்கொள்ளலாம். அவர்கள் மனம் திருந்தி நிறுத்துவார்களா. கால காலத்திற்கும் தொடர்வார்களா என்றெல்லாம் எதுவும் கூற முடியாது.
ஏனென்றால் இது அவர்களுக்கான கருத்து சுதந்திரம்.
இம்மாதக் ‘காலச்சுவடு‘ தலையங்கத்தில் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது!
ஆண் பெண் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும் எப்படி இருக்கின்றன. அவைகளின் பயன்பாடென்ன என்பது எல்லாரும் அறிந்த ஒன்று. ஆனாலும் நமது வளர்ச்சி அடைந்த நாகரிகம் உடலை சட்டை போட்டு மறைக்கச் சொல்கிறது. சுதந்திரம் என்று சொல்லி ஆடையில்லாமல் வீதியில் செல்வதை அனுமதிக்கலாமா என்பதே கேள்வி.
LikeLike