சோலார் பேனல் முறைகேடு தொடர்பான விசாரணையின் போது, முதல்வர் உம்மன்சாண்டிக்கு சுமார் இரண்டு கோடி லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர், இரண்டு நாட்களுக்கு முன் வாக்குமூலம் கொடுத்தார். அதன் பின் அவர் அமைதியாகிவிட்டார். ஆனால் கேரளா அலறிக்கொண்டிருக்கிறது.
எத்தனை கோடி ரூபாய் ஊழல் என்பது யாருக்குமே தெரியவில்லை. சரிதாவும்-அவர் கணவரும் பல ஆயிரங்களை முறைகேடு செய்திருக்கிறார்கள் என்று செய்திகள் எழுதப்படுகின்றன.லஞ்சமாகவே பலகோடிகளை அள்ளி வீசி இருப்பதாக புகார் கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த ஊழல் கேரளாவுக்கு புதிது. அதுவும் பெண்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு என்ற புகார் , கேரளத்தின் ஆளும் அரசை அடித்து துவைத்து கொண்டிருக்கிறது. முதலமைச்சருக்கு ஆதரவாக சாட்சி அளிக்கும்படி சரிதா நாயருக்கு, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரவி அறிவுரை கூறியதாக ஆடியோ வெளியாகி உம்மன் சாண்டி மீதான இமேஜை தலைகீழாக புரட்டி போட்டிருக்கிறது.
உம்மன்சாண்டி மீது எப்.ஐ.ஆர் போட கீழ் நீதிமன்றம் உத்தரவு, அதற்க்கு கேரளா உயர்நீதிமன்றம் 2 மாத கால இடைக்கால, இதனால் கீழ் நீதிமன்ற நீதிபதியான சிவராஜன் வி.ஆர்.எஸ்.கேட்டு விண்ணப்பம்…. என்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிறது கேரளா. அது மட்டுமல்லாமல் உம்மன் சாண்டி பதவி விலக கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை குண்டு என்று திருவனந்தபுரமே கலவரமாகி இருக்கிறது.

யார் இந்த சரிதா நாயர் ??
இவரை பற்றி பக்கம் பக்கமாக ஆங்கில, தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட, பத்திரிக்கைகள் எழுதி தீர்த்திருக்கின்றன. அவை அனைத்தையும் படித்ததில், சரிதா நாயரின் சில தொலைக்காட்சி பேட்டிகளின் மூலம் தெரிந்து கொண்டவற்றையும் கட்டுரையாக தர முயன்றிருக்கிறோம்.
சோலார் பேனல் முறைகேட்டில் முக்கிய பங்கெடுத்து, பின் அதை வெளிக்கொண்டு வருவதற்கு காரணமானவராக உருவெடுத்திருக்கும் சரிதா நாயரை “பல அரசியல்வாதிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவராகவும், முதலமைச்சாருக்கே உத்தரவிடுபவராகவும்தான்” பத்திரிக்கைகள் எழுதி இருக்கின்றன.
ஆனால் சரிதா நாயர் பக்க கதை வேறு பார்வை கொண்டிருக்கிறது. வாழ்க்கை மற்றும் சோலார் பேனல் தொழில் பங்குதாரான பிஜூ மற்றும் அரசியல்வாதிகள் தன்னை பயன்படுத்தி கொண்டதாக குற்றம்சாட்டுகிறார்.
செங்கனூரில் ஒரு மத்திய தர நாயர் குடும்பத்தின் இரண்டாவது பெண். கடன் தொல்லையால் சரிதாவின் தந்தை சோமசேகரன் நாயர் தற்கொலை செய்திருக்கிறார். அவரின் அரசு பணி, சரிதாவின் தாயார் இந்திரா நாயருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான், சரிதாவின் அண்டை வீட்டார்கள் கூறியிருகிறார்கள் ஊடகங்களிடம். அதற்க்கு மேல் எதையும் கூற மறுத்திருக்கிறார்கள். சர்ச்சை, கைது என்று ஏதோ ஒன்றுக்குள் தாங்களும் சிக்கி கொள்ளலாம் என்ற பயம் காரணமாக.
படிப்பில் படு கெட்டியான சரிதா நாயருக்கு 18 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் அது நிலைக்கவில்லை. விவாகரத்தாகி விட்டது. திருமணம் மூலம் ஒரு ஆண் குழந்தை உண்டு சரிதா நாயருக்கு.
விவாகரத்திற்கு முன்னரே, இந்த முறைகேட்டின் முக்கிய குற்றவாளி என்று சுட்டிக்காட்டப்படும் பிஜூ ராதாக்ரிஷ்ணனுடன் அறிமுகம் ஏற்படுகிறது.
ஏற்கனவே திருமணமான பிஜூவுடன், சரிதா சேர்ந்து வாழத்தொடங்கியதாக தகவல்கள் சொல்கிறார்கள். அதே காலகட்டத்தில் பிஜூவின் மனைவி ரேஷ்மி மரணமடைந்திருக்கிறார். தற்கொலை என்று வழக்கை முடித்திருக்கிறார்கள் போலீஸ். ஆனால், சோலார் பேனல் முறைகேடு விவகாரங்கள் வெளிவரவும், அதை வைத்து ப்ளாக் மெயில் செய்வது போல, உம்மன் சாண்டி அரசு உணர்ந்ததால், அந்த வழக்கு மீண்டும் 2013-ம் ஆண்டு விசாரிக்கப்படுகிறது.
விசாரணையில் ரேஷ்மி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, பிஜூ சிறையில் அடைக்கப்படுகிறார். இதற்கிடையே, சரிதா நாயரையும் திருமணம் செய்து கொள்ள பிஜூ மறுத்திருக்கிறார். அவருக்கு பதிலாக தொலைகாட்சி நடிகை ஷாலு மேனன் என்பவருடன் நெருக்கமாகி இருக்கிறார். இதுதான் சரிதா-பிஜூ இடையே பிரிவை ஏற்படுத்தி இருக்கிறது. சோலார் பேனல் மூலமாக சம்பாதித்த பெரும் பகுதி பணத்தை ஷாலுவுக்கு செலவழித்ததாக, பின்னர் சரிதா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. (இதே ஷாலுவின் இல்ல புதுமனை புகு விழாவிற்கு, பேனல் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அப்போதைய உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் சென்று, அது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது)
2005-ம் ஆண்டு HDFC நிறுவனத்தில் முறைகேடு ஒன்றில் ஈடுபட்டதாக சரிதா நாயரும், அந்த வங்கியின் அப்போதைய மேனஜரான பிஜூவும் கைது செய்யப்படுகிறார்கள். அதுதான் அவர்கள் இருவரின் முதல் முறைகேடு. ஆனால் மீண்டும், விசா முறைகெட்டு புகார் ஒன்றில் சரிதா மாட்டுகிறார். இம்முறை சில உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் பிஜூவின் துணையுடன் அந்த வழக்கில் இருந்தும் வெளி வருகிறார் சரிதா. இந்த வழக்குதான், சரிதா நாயரின் இன்றைய உருமாற்றதிற்கு அடித்தளமாக அமைத்திருக்கும் என்கிறது கேரளா மீடியா. சிறை வாசத்தின் போதுதான், சரிதாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. (சமீபத்தைய விசாரணையின் போது “இந்த குழந்தையின் தந்தை யார் என்று ?” நீதிபதி கேட்டபோது, அங்கயே சரிதா நாயர் அழுது மயங்கி விழுந்ததாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.)
அதன் பின் சரிதா நாயர்-பிஜூ இருவரும், “வீடுகள், அலுவலகங்களுக்கு சோலார் பேனல்” அமைத்து தரும் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கொச்சியில் தொடங்குகின்றனர். ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பேனல்கள் அமைத்து தரவேண்டுமென்றால், அதில் ஐம்பதாயிரம் ரூபாயை தங்கள் நிறுவனமே முதலீடு செய்து கொள்ளும், நுகர்வோர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் தந்தால் போதும் என்பதுதான் அந்நிறுவனத்தின் தாரக மந்திரம்.
அதே போல், தங்களிடம் பணம் செலுத்துவோருக்கு மிகப்பெரும் சோலார் திட்டங்களில், ஷேர்கள் வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்துள்ளனர். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், மெது மெதுவாக புகார்கள் எழத் தொடங்குகின்றன. கோடிகணக்கில் பணம் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
இந்த புகார்களுக்காக கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்துள்ள சரிதா நாயர், ஆறு மாதங்களுக்கு முன் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் “அதிர்ஷ்டமும் சாபமும் ஒரு சேர்ந்து உருவானது தன்னுடைய அழகு” என்று கூறி இருந்தார். அந்த அழகுதான் ஏராளமான அரசியல்வாதிகளை தன் பக்கம் ஈர்த்ததுடன், தன்னை கட்டாயப்படுத்தி பயன்படுத்த காரணமானது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பு சரிதா நாயர் தெரிவித்திருக்கும் சாட்சியம் என்று வெளிவரும் தகவல்கள் உண்மை என்றால், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஏன் சட்டமன்ற அலுவலக ஊழியர் என்று ஏராளமானோர், உதவி செய்வதாக கூறி தவறாக பழகியதாக சரிதா நாயர் பதிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, “உதவி செய்கிறேன் என்று தன்னை பயன்படுத்தியவர்கள் குறித்த 30 பக்க கடிதம் ஒன்றை, டிஜிபி.க்கு சரிதா நாயர் எழுதியதாக தகவல்கள் தெரிவித்தன. அப்போதைய உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், வன, சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் கே பி கணேஷ்குமார், என்று ஆறு அமைச்சர்கள், நடிகர் மோகன்லால், எதிர்க்கட்சி தலைவர் கொடியேறி பாலக்ரிஷ்ணன் என்று அந்த பட்டியல் நீண்டதாகவும் தெரிகிறது. ஆனால் ஜாமீனில் வெளிவந்த பின், தன்னுடைய கடிதம் திருத்தப்பட்டு தவறாக பயன்படுத்த பட்டுள்ளதாக , ஒரு செய்தியாளர் சந்திப்பில் சரிதா குறிப்பிட்டார்
நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பு கடந்த சில நாட்களாக சரிதா அளித்து வரும் சாட்சியத்தின் படி “1991 -ம் ஆண்டே சோலார் பேனல் அமைப்பது தொடர்பாக தானும் பிசூவும் திட்டம் தயாரித்ததாக கூறி இருக்கிறார். கேரளாவில் உம்மன் சாண்டி ஆட்சி அமைந்தவுடன் அவரிடம் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதில் ஆர்வமான சாண்டி, இந்த திட்டம் தொடர்பாக மின்துறை அமைச்சர் ஆர்யதன் முகமதுவிடம் தன்னை சிபாரிசு செய்ததாகவும் சரிதா குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக உம்மன் சாண்டிக்கு நெருக்கமான தாமஸ் குருவில்லாவிடம் இரண்டு கோடி ரூபாயை இரண்டு தவணையாக அளித்ததாகவும் சரிதா கூறி இருக்கிறார்.
“என்னிடம் இருந்து பணம் வாங்கி கொண்டார்கள். என்னை பயன்படுத்தி கொண்டார்கள். ஆனால் எனக்கு அளித்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றவே இல்லை”
கேரள அரசியல்வாதிகளின் லட்சணத்தை பொதுவெளிக்கு கொண்டு வந்ததற்காக, சரிதா நாயர் கூறும் மிக அழுத்தமான காரணம் இதுதான்.