இறுதிச்சுற்று: கச்சிதமான சினிமா!

ராஜா சுந்தரராஜன் 

இறுதிச்சுற்று
______________

செம படம்.

அவ்வளவுதான். இதற்குமேல் என்ன எழுதுவது?

ஆனால், இப்படிச் சொன்னால் இது வெறும் அபிப்பிராயமாகப் போய்விடும். எப்படி என்றால், “சூப்பர் ஸ்டார்”, “உலக நாயகன்” என்று மட்டும் சொன்னால் அது போதாது. இந்தா பாரு, அந்தாளோட பாக்ஸ்-ஆஃபீஸ் கலெக்ஷனெப் பாரு! ஒரு வருஷமா ரெண்டு வருஷமா, தொடர்ந்து எந்தனை வர்ஷம்னு பாரு! “பாபா” அனுக்ரகம் பண்ணலை, ஆனா சனங்க கைவிடலை பாரு! அப்டின்னா, அவரு சூப்பர் ஸ்டாரா இல்லையா? (இதே போல “உலக நாயகன்” பட்டத்தை நியாயப்படுத்த மண்டையைப் பிராண்டினேனா, நகக்கண்ணில் வந்துவிட்டது உச்சந்தலைலிருந்த ஒன்றிரண்டு நரைமுடியும்! ஆனால், “சூப்பர் ஆக்டர்” என்கிற பட்டத்தை ஓரளவுக்கு நியாயப்படுத்த முடியும்.)

“இறுதிச்சுற்று” ஒரு கச்சிதமான சினிமா. அதாவது, ஒரு ஹாலிவுட் ட்ராமா போல, சிக்கென்று செய்யப்பட்ட விறுவிறுப்பு-ஒளியாட்டம்.

செம படம் என்றால், அது உலகப்படத் தரத்திலிருக்கவேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. உட்கார்ந்திருந்த இரண்டுமணி நேரத்துக்கு நம்மை நெளிய/முனக விடாமல் வைத்திருந்தால் போதும்.

சரி, ஆனால் உலகப்படம் என்றால் என்ன? பொதுவாக, அதில் ஈகோ-ட்ரிப் இருக்காது. இருந்தால், அது வாழ்க்கையின் அடிப்படை-உண்மையான துக்கத்தைத் தொட்டுணர்த்துவதில் சென்றுமுடியும். என்றால், மகிழ்ச்சியில் அல்லது கொண்டாட்டத்தில் முடியவே முடியாதா? முடியும், ஆனால் அதன் பகடி அல்லது விமர்சனத்தொனி நம்மை சற்று மாற்றியோசிக்கத் தூண்டிவிடும்.

உண்மையில், நான் உலக சினிமா ரசிகன் இல்லை. ஆனாலும் சில உலகப் படங்களை சாகும்வரை மறக்கவே மாட்டேன். அதிலொன்று, உவெர்னர் ஹெர்சாக் இயக்கிய “Fitzcarraldo”. அது ஒரு ஈகோ-ட்ரிப் படம், ஆனால் ஹாலிவுட் அகந்தைப்பயண வெளிப்பாடுகளிலிருந்து எவ்வளவுக்கு வேறுபடுகிறது என்று தேடிப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!

ஆக, ‘செம படம்’ என்றால் இன்னதென்று ஓரளவுக்கு விளக்கிவிட்டேன். ஆமாம், “இறுதிச்சுற்று” ஒரு ஈகோ-ட்ரிப் படம்தான். குத்துச்சண்டை பற்றியது. ஆனால் “Rocky” வரிசைப் படங்களைப்போல சுயதேசப்பெருமைச் சொறிதல் கிடையாது. “பூலோகம்” படம் போன்ற பாவனைப்பிரச்சார நகலும் கிடையாது. இந்திய விளையாட்டுத்துறை அவலங்களை, அதற்கு மூலமான ஈனங்களை பொக்குதிர்த்துக் காட்டுகிற படம். என்றால், சற்று பாரமான படமோ? இல்லவே இல்லை, நம் அகந்தையார்வத்தை பூர்த்திசெய்யும், ஆனால் நச்சுப்பிச்சு கச்சுபொச்சு கலக்காத படம்.

கச்சுபொச்சு காட்டவில்லை, ஆனால் திறப்புக்காட்சியே நாயகன் ஒரு படிதாண்டிய பத்தினியோடு கலவிகொள்வதில் ஆரம்பிக்கிறது. கூடவே, நாயகனோட பெண்டாட்டி அவனைவிட்டு ஓடிப்போனாள் என்கிற உண்மையும் சொல்லப்படுகிறது. இவ்வளவு சட்டென்று (within a minute) கதைமையத்தில் காலூன்றித் தாவும் ஒரு திரைப்படத்தை, என்னனுபவத்தில், நான் பார்த்ததேயில்லை.

மாதவன் தூள்கிளப்புகிறார். காட்சிகளை விளக்கி இதை நான் நிறுவப்போவதில்லை. கண்டு தெளியுங்கள்! “தாரை தப்பட்டை” வரலக்ஷ்மிக்குத்தான் இவ்வாண்டு நேஷனல் அவார்டு என்றார்கள். அடுத்த ஆட்சி கருணாநிதியினது என்றால் அது சாத்தியம்தான். (எம்.ஜி.ஆர். முதற்கொண்டு அப்படி சாத்தியப்பட்டவர்களே, பெரும்பாலும்). ஆனால், “இறுதிச்சுற்று” ரித்திகா முன்னால் அது செல்லுபடி ஆகாதுபோல் தோன்றுகிறது. பிச்சு உதறுகிறாள். சொந்தக்குரல் டப்பிங் இல்லாதவளுக்கு தரமுடியாதே (எ.டு. “முதல்மரியாதை” ராதா) என்று ஒருவேளை தள்ளக் கூடும். ஆனால் இப் படத்தின் ஹிந்தி வெர்ஷனில் ரித்திகா தன் சொந்தக்குரலில் பேசியிருந்தால்?

என்னா கேரக்டரைசேஷன்ஸ்! நாசர் ஒரு காமடியன் போல வருகிறார். போலதான், ஆனால் கதைக்கு முக்கியமான ஒரு கேரக்டர். சரி, காமெடிக்கு வருவோம். ஒரு குடிசாலையில் அவர் ஈரல்வறுவல் வாங்குவார். கூட உட்கார்ந்திருக்கும் மாதவன், “இப்படி லிவர் சாப்பிட்டுசாப்பிட்டு ஏதாவது ஏடாகூடமாய் ஆகிவிடப் போகிறது,” என்பார். நாசர் சொல்வார், “குடிச்சா லிவர் பாதிக்கப்படும்கிறாங்க. இப்படி லிவர் மேல் லிவர் சாப்பிட்டால் அது மேக்கப் ஆயிடும் இல்லையா?”

நாயகிக்கு அக்காவாக வரும் இன்னொரு கேரக்டர். ஆஹா! அவள் தன் பொறாமை அடிபட்டுத் தளர்ந்து நாயகன் மார்பில், ஒரு தந்தையில் மகளைப் போல, சரிகிற அந்தத் தீர்வு! இயக்குநர் பெண் ஆனதால் ஆனதோ இத்தைய உணர்வு நுணுக்கங்கள்!

இதுவரை நான் கண்ட பெண்இயக்குநர்கள் படங்களில் இதுவே நம்பர் ஒன். என்னா உழைப்பு! இசை, கேமரா பற்றி யெல்லாம் பொதுவாக நான் பேசுகிறதில்லை. இதில் சந்தோஷ் நாராயணன் முதலாய டெக்னீஷியன்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.

பெருமையாக இருக்கிறது. அவ்வப்போது இப்படியொரு படம் கண்டுபிடித்து தமிழ் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் என்றறிய, உண்மையிலேயே, உள்ளம் நிறைந்து பொங்குகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.