மக்கள் நல கூட்டணியின் மதுரை மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதுதான் தற்போது இணைய உலகின் பரபரப பேச்சாக இருக்கிறது. திருமாவளவனின் பேச்சிற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு சில திமுகவினர் திருமாவளவனை தனிப்பட்ட முறையில் தாக்கி வருவது படிப்பவர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி என்னதான் திருமாவளவன் பேசி விட்டார் என்பவர்களுக்காக, அந்த பேச்சின் கட்டுரை வடிவம்.
மக்கள் நலக் கூட்டணியை யாரும் உடைக்க முடியாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இந்தக்கூட்டணி ஆட்சி அமைக்கும். அது கொள்கை அடிப்படையிலான கூட்டணி ஆட்சியாக அமையும்.
இந்த மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு. மக்கள் நலக்கூட்டணி தமிழகத்தில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும். யானை மலையை உடைக்க முடியாது. அதுபோல் மக்கள் நலக்கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. மாற்று அரசியல், மாற்றுப்பாதையில் மக்கள் நலக்கூட்டணி பயணத்தை துவங்கியிருக்கிறது.இதனால் பலருக்கு அடிவயிறு கலங்கியிருக்கிறது. அதிர்ச்சியடைந்திருக் கிறார்கள். நாம்தான் மாற்று அரசியலை முன்வைக்கிறோம்.
இன்றைய ஆட்சியாளர்கள் சாராய வியாபாரம் செய்கிறார்கள். சாராய வியாபாரிகளின் ஆட்சியாக இந்த ஆட்சிஉள்ளது. இந்த சாராய வியாபாரிகளை அப்புறப்படுத்த புறப்பட்டுள்ளோம். மாற்றத்தை உருவாக்க மாற்றுஅரசியலை முன்வைக்கிறோம்.
இன்றைக்கு தமிழக அரசியலில் ஆட்சி நடத்தும் கட்சி கட்டு விரியன் பாம்பாக உள்ளது.இதற்கு மாற்று நான் தான் என்று கூறும் கட்சி கண்ணாடி விரியனாக உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்று நான் தான் என்றுகூறிக் கொள்ளும் கட்சிநல்ல பாம்பாக படமெடுக்கிறது. விரியன் பாம்பும் வேண்டாம்; நல்ல பாம்பும் வேண்டாம். ஊழல்புற்றுகளை உடைத்தெறிந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள்நலக் கூட்டணி புறப்பட்டுள்ளது.
கபடி விளையாட்டில் களத்தில் விளையாடுபவர் காயமடைந்தால் மாற்று ஆளை இறக்கிவிடுவார்கள். அதற்கு சப்சிட்டியூட் என்றுபெயர். நாங்கள் சப்சிட்டி யூட் அல்ல; ஆல்டர்னேட், மாற்று. இந்தக் கூட்டணி ஜனநாயகமானது; அடிப்படை மக்களுக்கானது. இது ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் நடக்கும் யுத்தம்.
மதுவியாபாரிகளிடமிருந்து தமிழகத்தை மீட்க மக்கள் நலக்கூட்டணி போராடும்; இது தொடரும். அதிமுக, திமுக இரண்டும் வரக்கூடாது என்பதற்காகத்தான் மக்கள் நலக்கூட்டணி மாற்று அரசியலை முன்வைக்கிறது. ஒரு கட்சி ஆட்சி கூடாது.50 ஆண்டுகளாக நடைபெறுகின்ற இரு கட்சிகளின் ஆட்சியை அகற்றி, புதிய மாற்றத்தை ஏற்படுத்த கூடியிருக்கிறோம். கூட்டணி ஆட்சி கருத்தியலை அதிமுக, திமுக ஒப்புக்கொள்ளுமா? மக்கள் நலக்கூட்டணி கூட்டணி ஆட்சியை விரும்புகிறது. ஆள்மாற்றம், கட்சி மாற்றம் அல்ல, ஆட்சி மாற்றம். கொள்கை அடிப்படையிலான ஆட்சி மாற்றம். விளிம்புநிலை மக்களுக்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் எந்த தொடர்புமில்லை.கேடு கெட்ட, வெட்கங்கெட்ட ஆட்சி முறையே உள்ளது. ஒரு தொகுப்பு வீடுகட்டக் கூட ஆளுங்கட்சிக்கும் பல அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. 8 துணைவேந்தர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. துணைவேந்தர் பொறுப்புக்கு 8 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் தரவேண்டும் என்று ஆட்சியாளர்கள் கேட்பதாகச் சொல்கிறார்கள். மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் இல்லாமல் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படும். அடுத்த முதல்வர் என்று சொல்பவர் மீது சிபிஐ விசாரணை நடக்கிறது. இன்னொருவர் மீது தினமும் விசாரணை நடைபெறுகிறது.
வைகோவையும் ,என்னையும் விரல் நீட்டி குற்றம்சாட்ட முடியுமா? நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா ஆகியோர் மீது யாராவது குற்றம் சொல்ல முடியுமா? மக்கள் மீது அக்கறை உள்ளவர்களால் வழிநடத்தப்படும் கூட்டணி. வெள்ள நிவாரணப் பணியில் களத்தில் இறங்கி வேலை செய்தோம். சாக்கடையில் இறங்கி தூய்மைப்பணியில் ஈடுபட்டோம். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் தலைவர்கள் அல்ல.
மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் பொதுக்கூட்டம் இது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு நூலளவுகூட ஊசலாட்டமில்லை. நாங்கள்தான் மாற்று. மக்கள் நலக்கூட்டணியால்தான் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.உறக்கமின்றி, ஓய்வு ஒழிச்சலின்றி பணியாற்ற வேண்டும். தமிழகத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும். இந்த மாநாட்டிற்கு வந்துகொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இறந்த அயப்பாக்கம் பாக்கியராஜூக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன். அண்ணா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டபோது அக்கட்சிக்கு பெரிய வாக்குவங்கி இல்லை. ஆனால் 1967-ல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அப்படியொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் நலக்கூட்டணி தயாராகிவிட்டது.
LikeLike