கால்பந்து சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் பத்தாம் நம்பர் ஜெர்சியை, அணிந்த குழந்தை ஒன்றின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் டிவிட்டரில் வெளியானது.
அது ஜெர்சி அல்ல. வெள்ளை நிறத்தில் நீல வண்ண கோடுகள் இருந்த பிளாஸ்டிக் பை என்றும், அதில் கருப்பு மை கொண்டு MESSI 10 என்று எழுதபட்டிருப்பதும் தெரிந்தபோது, அந்த புகைப்படத்தை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு பகிர தொடங்கினர்.
மெஸ்சியின் கவனத்திற்கும் இந்த புகைப்படம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது டீமும் இந்த குட்டி ரசிகன் யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், இந்த குட்டி ரசிகன் ஆப்கனிஸ்தான் நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிபிசி வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆப்கன்வாசியான ஆசீம் அஹமதி என்பவரின் ஐந்து வயது மருமகனான முர்தாசா அஹமதிதான் அந்த “குட்டி ரசிகன்” என்றும், அவர்தான் குறிப்பிட்ட புகைப்படத்தை டிவிட்டரில் பதிந்தார் என்றும் தெரிவித்துள்ளது.
பின்னர் சேகரிக்கப்பட்ட செய்திகளின்படி ஆப்கானிஸ்தானில் உள்ள கஸ்னி மாகாணத்தில், சிறிய கிராமம் ஒன்றில் குட்டி அஹமதி வசிக்கிறான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கிராமத்தில் மெஸ்சியின் ஜெர்சியை வாங்குவது என்பது இயலாத ஒன்றாக இருந்ததால், ஐந்து வயது அஹமதியின் தொடர் அழுகையை சகிக்க முடியாது, அவனுடைய சகோதரன் உருவாக்கியதுதான், அந்த பிளாஸ்டிக் பை ஜெர்சி என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
இப்போது மெஸ்சி அணிந்த ஒரு பத்தாம் எண் ஜெர்சியை எப்படியாவது குட்டி அஹமதிக்கு நேரில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று மெஸ்சியின் அணியினர் தீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கிறார்களாம். குட்டி அஹமதி, அவனுடைய கதாநாயகனான மெஸ்சியையும் சந்திப்பதற்கும் வாழ்த்துக்கள்.