அதிமுக பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அரங்கத்தை விட்டு கிளம்பிய பழ.கருப்பையா: கருப்பையாவின் ’நேர்மை’க்கு உதாரணமான ’அக்னிப்பரிட்சை’ அனுபவம்

‘ அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா நீக்கி வைக்கப்படுவதாக’ பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். காரணம். ஆட்சிக்கு எதிராக கருப்பையாவின் கூர்மையான விமர்சனம். துக்ளக் விழாவில் கருப்பையா பேசிய பேச்சு, அ.தி.மு.க தலைமையை அதிர வைத்துவிட்டது என புரிந்து கொள்ளலாம்.

இதே கருப்பையாவோடு நான் முரண்பட்டுப் போன சம்பவம் ஒன்றும் நடந்தது. இன்று இவ்வளவு பேசும் கருப்பையா, அன்று நடந்து கொண்ட விதத்தை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சிக்காக அவரை அழைத்தேன். பத்துநாள் தொடர் முயற்சிக்குப் பிறகே, நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்தார். அப்போது, ‘ அ.தி.மு.க குறித்த கேள்விகள் எதுவும் வேண்டாம். எனது அரசியல் வாழ்வு, நேர்மை அரசியல் ஆகியவை குறித்த கேள்விகள்தான் இருக்க வேண்டும்’ என நிபந்தனையும் விதித்தார். குறிப்பிட்ட நாளும் வந்தது. பெரும் படைவாரத்தோடு வந்தார். அக்னிப் பரீட்சை அரங்கிற்குள் சென்றவர், நெறியாளர் ஜென்ராமோடு பேசிக் கொண்டிருந்தார். நான் ரெக்கார்டிங் அறைக்குள் அமர்ந்து ‘ரோலிங்’ சொல்வதற்கான நேரத்திற்காக காத்திருந்தேன். திடீரென்று அரங்கிற்குள்
அமைதி.

ஒளிப்பதிவாளர் ஒருவர் ஓடிவந்து, ” எம்.எல்.ஏ உங்களைக் கூப்பிடுகிறார். சீக்கிரம் வாருங்கள்” எனச் சொல்ல, வெளியே ஓடிவந்தேன். லிப்ட் அருகே நின்று கொண்டிருந்த கருப்பையா, “வாய்யா…நீ சொல்லித்தான் வந்தேன். என்னய்யா நினைச்சிட்டு இருக்கீங்க” என சத்தம் போட, நான் புரியாமல், “சார்… என்ன நடந்தது?” என்றேன்..எதையும் சொல்லாமல் சத்தம் போட்டுக் கொண்டே லிப்ட் கதவைத் திறந்தார். உள்ளே போனதும், ” இந்த நெறியாளருக்கு என்ன சம்பளம் கொடுக்கறாங்க? நான் யார் தெரியுமா?” என கண்டபடி பேச ஆரம்பித்துவிட்டார். அந்த மூன்று மாடி லிப்ட் கீழே எப்போது இறங்கும்? என பதைபதைத்துக் கொண்டே இருந்தேன். கீழே வந்தவர், ” நான் கட்சிக்கு கட்சி மாறிட்டு இருக்கேன். இது சரியான்னு முதல் கேள்வியை வச்சிருக்கார் அந்த நெறியாளர். அ.தி.மு.கவுக்கு எதிராக நிறைய கேள்விகள் இருக்கு? இதுக்குத்தான் சம்பளம் கொடுக்கறாங்களா? இனி அந்த ஆபீஸ் பக்கம் வந்தன்னா கேளு” என்றபடியே காரைக் கிளப்பிக் கொண்டு போனார் கருப்பையா.

அதிர்ந்து போய் நெறியாளர் ஜென்ராமிடம், ” சார்… என்னதான் நடந்தது?” என்றேன். அவர் எப்போதும் போல் அமைதியாக, ” ஒன்றுமில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு என் அனுமதியில்லாமல் என்னிடம் இருந்த கேள்வித்தாளை பிடுங்கி படித்துவிட்டார். அந்தக் கோபத்தில் செல்கிறார். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றார்.

கருப்பையா, அங்கிருந்த அகன்ற பின்னரும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அ.தி.மு.கவுக்கு எதிரான சிறு விமர்சனத்திற்குக்கூட பதில் கூறாமல் அவமானப்படுத்துகிறார். என்ன காரணம்? என அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ” இன்னும் ஓரிரு நாளில் மந்திரி சபை மாற்றம் இருக்கப் போகிறது. பதவி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். அதனால்தான் அவர் பேச மறுத்திருப்பார்” என விளக்கம் கொடுத்தார். அடுத்த இரண்டு நாளில் மந்திரி சபை மாற்றமும் நடந்தது. கருப்பையாவுக்கு சிறு நாற்காலியைக்கூட அ.தி.மு.க தலைமை ஒதுக்கவில்லை. இன்றைக்கு, ‘ கமிஷன் வாங்கலாம். ஊரை அடித்து உலையில் போடலாம்’ என பேசும் அவர், அன்றைக்கும் இதே மனநிலையில் பேசியிருந்தால், அவருடைய நேர்மை அரசியலுக்கு சல்யூட் அடித்திருக்கலாம். துணை சபாநாயகர், ஏதேனும் ஒரு துறைக்கு அமைச்சர் என ஆட்சி தொடங்கிய நாளில் இருந்தே கருப்பையா எதிர்பார்த்தார் என்பதை அவரது மனசாட்சி அறியும்.

அதற்கேற்பவே, ஜெயலலிதாவை உயர்த்திப் பிடிக்கும் கட்டுரைகளையும் அவர் தினமணியில் எழுதினார். ஒருகட்டுரையில், ‘ சீர்காழி பிராமண குடும்பத்தில் பிறந்த திருஞானசம்பந்தரின் திராவிடப் பற்றை சகிக்க முடியாமல், அவரை ‘திராவிட சிசு’ என ஆதி சங்கரர் வர்ணித்தார். இது ஆரிய முரணே அன்றி திராவிட முரண் அல்ல. அதேபோல, பிராமணக் குடும்பத்தில் பிறந்த முதலமைச்சர் செயலலிதா திராவிடக் கட்சி ஒன்றிற்கு தலைமையேற்று நடத்துவதும் ஆரிய முரண்தான் என முதல்வரை ரொம்பவே தூக்கி வைத்துக் கொண்டாடியவர்தான் பழ.கருப்பையா. கருணாநிதி மீதான விமர்சனத்தை கூர்மையாக்கி, அ.தி.மு.க தலைமையிடம் பாராட்டுப் பெறவும் ரொம்பவே முனைந்தார். எல்லாம் எதிர்மறையாகிப் போனது.

திராவிடம், சமயம், பண்பாடு குறித்த அவரது கட்டுரையாகட்டும். வள்ளலார், காந்தி குறித்து அவரது பேச்சுக்களாகட்டும். எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அனைத்தும் நடைமுறையில் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இதையும்கூட, கருப்பையாவின் மீதுள்ள காதலால்தான் சொல்கிறேன்…

விஜய் ஆனந்த், ஊடகவியலாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.