#விருதுசர்ச்சை: பத்மஸ்ரீ விருதுக்கு தன்னை நண்பர்கள் பரிந்துரைத்தபோதே ஏன் ஜெயமோகன் வேண்டாம் என்று சொல்லவில்லை?

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

எனது நண்பர் ஒருவருக்கு, மூன்று வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது இது. அவரை ஒரு நண்பர் அழைத்து, உங்களது பயோடேட்டாவை அனுப்பி வையுங்கள் என்றார். ஏன், என்ன விஷயம் எனக் கேட்டார் நண்பர். உங்களை —- விருதுக்கு தேர்வு செய்துள்ளோம்; விரைவில் அறிவிப்பு வரும் என்றார் நண்பரின் நண்பர். “விருதெல்லாம் வேண்டாம்; அந்தளவுக்கு நாம் என்ன செய்துவிட்டோம். இதை அப்படியே லூசில் விட்டுவிடுவோம்” என்று நண்பர் சொல்லிவிட்டார். விஷயம் அத்தோடு முடிந்தது.

விருது திரும்பி கொடுக்கும் நிகழ்வுகளையொட்டி, ஏன் தமிழ் எழுத்தாளர்கள் திரும்பிக் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு, “விருதை திருப்பி கொடுப்பதாக இருந்தால், அதனுடன் கிடைத்த பணத்தையும் திரும்பிக் கொடுக்க வேண்டும்; அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை” என்று சில தமிழ் எழுத்தாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. உண்மைதான். தமிழ் எழுத்தாளர்களுக்கு பணம் பெரிய விஷயம்தான். பலருக்கு விருது அறிவிக்கப்படும்போது, அந்த விருதைவிட அதனுடன் கிடைக்கும் பணம்தான் முக்கியமாக இருக்கிறது. இல்லையென்றால், நண்பர் போல் பலரும் விருதுகளை ‘லூசில் விட்டுவிடுவார்கள்’ என்றுதான் நினைக்கிறேன். ஆனால், நண்பர் ‘லூசில் விட்ட’ விருது தொகை ரூ. 50,000.

நண்பர் போல், விருது அறிவிப்புக்கு முன்பே, காதும் காதுமாக விஷயத்தை முடித்தவர்கள் பலர் இருக்கலாம். ஏனெனில், இங்கே விருதெல்லாம், ‘அறிவித்த பிறகுதான் எனக்குத் தெரியும்’ ரகம் இல்லை; முதலிலேயே சொல்லிவிடுவார்கள்; சொல்லாமல் வரும் அறிவிப்புகளில் பெரும்பாலானவை கேட்டு வாங்கியதாக இருக்கலாம். எனவே, வேண்டாம் எனக் கருதுபவர்கள், அறிவிப்புக்கு முன்பே, நாசுக்காக வேண்டாம் எனச் சொல்லிவிட வாய்ப்புள்ளது. ஒரு மூத்த எழுத்தாளர், அப்படி “வேண்டாம்யா” என ஒரு விருது அறிவிப்பில் இருந்து விலகிய சம்பவமும் எனக்குத் தெரியும். (விருதுத் தொகை 2 லட்சம் ரூபாய்) இன்னும் பல விருதுகளைக்கூட அவர் மறுத்திருக்கக் கூடியவர்தான்.

ஜெயமோகன் பத்மஸ்ரீ மறுப்பில் இந்த ஒன்று மட்டும்தான் எனக்கு நெருடுகிறது. அவரது நண்பர்கள் இந்த விருதுக்காக முயற்சித்தது தனக்குத் தெரியும் என்று அவர் சொல்கிறார். இப்போது எழுதியுள்ள விஷயத்தை நாசுக்காக அவர்களிடம் சொல்லி முயற்சி அளவிலேயே இதை மறுத்திருக்கலாம். ஜெயமோகனை மீறிச் செய்யும் அளவுக்கு முரட்டு நண்பர்களாக அவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு மாதம் முன்பு, விருதுப் பட்டியலில் இவர் பெயர் இருப்பதாக அழைத்துச் சொன்ன, நெடுங்கால நண்பரான காவல்துறை உயரதிகாரியிடம்கூட சொல்லியிருக்கலாம். அவரே பட்டியலில் இருந்து பெயரை நீக்கி உதவியிருப்பார்.

தன்னை சுற்றியிருப்பவர்கள், தனக்காக, தனக்கு விருப்பமில்லாத ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிந்தும், ஏன் அதைத் தடுக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. கலைஞன் காரியங்கள்… எதாவது இருக்கலாம்.

மற்றபடி… ஜெயமோகன் எழுதியுள்ள விஷயங்கள், அவரது கவலைகள் எல்லாவற்றையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவை நியாயமான கவலைகள் என்றும், அவர் கவலைப்படுவது போல்தான் நமது சூழல் இருக்கிறது என்றும்தான் நான் கருதுகிறேன்.

ஆனாலும்… முதலிலேயே லூசில் விட்டிருக்கலாமே; அறிவித்த பிறகு மறுத்தால், வாங்கினால் என்னவெல்லாம் பேசுவார்கள் எனக் கவலைப்படுகிறீர்களோ, அதுபோல் மறுத்தாலும் பலதும் பேசுவார்கள் எனத் தெரியாதா. இப்போது பேசவில்லையா; ஏன் தேவையில்லாத இவ்வளவு சர்ச்சைகள்?

தளவாய் சுந்தரம், பத்திரிகையாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.