ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மாணவனாக படித்து வந்தார் செந்தில் குமார். பன்றிகளை வளர்த்து மேய்க்கும் ‘பன்னியாண்டி’ என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம். அந்த சாதியிலேயே அதிகம் படித்தவர். பள்ளி, கல்லூரி காலம் முழுவதும் பதக்கங்கள் சான்றிதழ்கள் என்று குவித்தவர். கனவு காணுங்கள் என்று சொன்ன கலாம் இவருக்கு மிகவும் பிடித்தமானவர். எப்படியாவது படித்து முன்னேறி தன் குடும்பத்தின் நிலையை மாற்றிட வேண்டுமென்ற முனைப்போடு படித்து வந்தார்.
‘பன்னி மேய்கிறவனுக்கு இங்க என்ன வேலை?’ ‘உனக்கெல்லாம் படிப்பு வராது போய் பன்னி மேய்’ என்று சொன்ன ஆசிரியர்கள், பல வகைகளிலும் தடை போட்டு அவரை பல்கலைக்கழகத்திலிருந்து துரத்த முயன்ற ஆதிக்க சாதிகள் நிறைந்த துறை நிர்வாகம். 2008 பிப்ரவரி 24 அன்று தன் விடுதி அறையில் செந்தில் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் சாதிய ஒடுக்குமுறை காரணமாக தற்கொலை செய்து கொண்ட தமிழ் மாணவர்!
இதே ஐதராபாத் பல்கலையில், சில நாட்களுக்கு முன் ரோஹித் வெமுலா என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரோஹித் உட்பட ஐந்து தலித் மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கியதாக குற்றம்சாட்டப்படும் ஐதராபாத் துணை வேந்தர் அப்பா ராவ் , விடுமுறையில் சென்றுவிட்டார்.

பல்கலைகழகத்தில் நிலவி வரும் சூழல் அமைதியடைவதற்காகவே தான் விடுமுறையில் சென்றுள்ளதாக அப்பா ராவ் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஐதராபத் பல்கலையின் இடைக்கால துணைவேந்தராக விபின் ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்றுள்ளார்.
இதனிடையே ஸ்ரீவஸ்தவாவின் நியமனத்திற்கு எஸ்.சி / எஸ்.டி பணியாளர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. ஐதராபாத் பல்கலையில் 2008 -ம் ஆண்டு பயின்ற, பன்னியாண்டி இன தலித் மாணவன், தமிழகத்தை சேர்ந்த செந்தில் தற்கொலை செய்து இறந்து போனதற்கு விபின் ஸ்ரீவஸ்தவா முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
தலித் மாணவனின் தற்கொலைக்கு காரணமான ஒருவரையே, மற்றொரு தலித் மாணவனுக்காக நடைபெறும் போராட்டம் பொருட்டு, விடுமுறையில் சென்றுள்ள துணைவேந்தருக்கு மாற்றாக நியமித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.