மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ, தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் அ. குமரேசனுக்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி…
மக்கள் நலக் கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்தக் கூட்டணி அதிமுக-வின் ‘பி’ டீம் என்று கூட சொல்கிறார்கள். திமுக-வுக்கு இவ்வளவு ஆத்திரம் வரக் காரணம் என்ன?
அதிமுக-வை வீழ்த்துவதுதான் நோக்கம் என்றால் திமுக பக்கம்தான் வரவேண்டும் என்கிறார்களே?அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற கோபம் தங்களுக்கு ஆதாயமாக மாறும் என்று திமுக தலைவர்கள் மனப்பால் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த இரண்டு கட்சிகளுமே ஊழலில் போட்டிபோடுகிற கட்சிகள்தான் என்பதையும், இரண்டு கட்சிகளுமே ஆட்சிக்கு வரக்கூடாது என்பதையும் வலுவாக மக்களிடம் எடுத்துச் செல்கிறோம். அதுதான் ஆத்திரத்திற்குக் காரணம்.ஊழலில்தான் ஏ டீம், பி டீம் எல்லாம். திமுக ஆட்சியில் இருந்தால் அது ஏ டீம், அதிமுக பி டீம். அதிமுக ஆட்சியில் இருந்தால் அது ஏ டீம், திமுக பி டீம்.
இந்த இரண்டு டீம்களையும் முறியடித்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் மக்கள் நலக் கூட்டணி களத்திற்கு வந்திருக்கிறது.ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறபோது, அதிமுகவை முறியடிக்க திமுக-வோடு சேர்ந்தோ மானால், இரண்டுமே ஊழல் கட்சிகள்தான் என்கிறபோது, மக்கள் எப்படி நம்புவார்கள்? இரண்டுபேரும் ஊழல் செய்தவர்கள். இரண்டு பேர் மீதும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது.
முற்போக்கான இயக்கங்கள் வளர்ந்த தமிழகத்தில் இன்று சாதிய ஆதிக்க சக்திகள் தலைவிரித்து ஆடத்தொடங்கியிருப்பது, கணிசமான இளைஞர்கள் மனங்களில் கூட சாதிப்பாகுபாட்டு உணர்வுகள் வளர்க்கப்பட்டிருப்பது குறித்து…
மிகவும் கவலையளிக்கிற போக்கு இது. வர்ணாஸ்ரமத்திற்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பெரியார் இயக்கமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் வலுவான போராட்டங்கள் நடத்திய தமிழகத்தில், சாதி உணர்வுகளுக்கு எதிராக எழ வேண்டிய இளைஞர்களிடையே சாதி ஆதிக்க உணர்வுகள் தூண்டப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அநீதிகளும் தொடரவே கூடாது. ஆனால், இறந்துபோன ஒருவரின் சடலத்தைக் கூட எடுத்துச் செல்ல முடியவில்லை. நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அதைச் செயல்படுத்த வேண்டிய காவல்துறையினர் அந்த மக்களை மிரட்டி, வேறு பாதை வழியாக சடலம் எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை அருகில் நடந்திருக்கிறது.
மதவெறி சாதி வெறி இரண்டுமே சமுதாயத்திற்குப் பெரும் கேடு விளைவிப்பவைதான். இதை அகற்றுவதற்கு வலுவான, விரிவான பிரச்சார இயக்கம், அதே வேளையில் மக்களை அரவணைத்துச் செல்கிற அணுகுமுறை இரண்டும் தேவை. நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஒரு ஆவேசம், எழுச்சி ஏற்படுவது இயல்பு. அதைப் புரிந்துகொண்டும் அணுக வேண்டும். சகோதரர் திருமாவளவன் எந்தக் கட்டத்திலும் வன்முறைக்குத் தூண்டாத பக்குவமான அணுகுமுறையோடு ஒடுக்குமுறைப் பிரச்சனைகளைக் கையாண்டுவருகிறார்.
தேர்தலை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் சமூக நல்லிணக்கத்தைப் பேணுகிற, அனைவரையும் சமமாக மதிக்கிற இயக்கமாகவும் இந்தக் கூட்டணி செயல்படுகிறது. சாதிய மோதல் இல்லாத ஒரு தமிழ்ச்சமுதாயத்தைக் கட்டுவது என்ற லட்சியத்தோடு தேர்தலுக்குப் பிறகும் மக்கள் நலக் கூட்டணி செயல்படும்.
ஒரு முன்னுதாரணமே இல்லை என்கிற வகையில் தமிழகத்தில் முதல் முறையாக, புத்தம் புதிதாக இப்படி ஒரு செயல்திட்டத்தின் அடிப்படையில், போராட்டங்களின் அடிப்படையில் ஒரு இயக்கம் உருவாகியிருக்கிறது. ஆனால், பழைய தேர்தல் புள்ளிவிவரங்களையே சொல்லிக்கொண்டு, கூட்டணி பற்றிய குழப்பத்தை ஏற்படுத்த, சில ஊடகங்கள் உள்ளிட்டோர் முயல்கிறார்கள்?
மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஒரு மாற்று இயக்கம் உருவாகியிருக்கிறபோது அதை வரவேற்க வேண்டியவர்கள் இப்படி பழைய தேர்தல்களின் கதைகளையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களோடு கூட்டுச் சேர்ந்தீர்களே, இவர்களோடு கூட்டுச் சேர்ந்தீர்களே என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஊழலும், ஜனநாயக மறுப்பும் இனியும் அனுமதிக்க முடியாது என்ற அளவுக்கு உச்சத்திற்கு வந்திருக்கிற நிலையில், ஒரு மாற்றத்தை நிகழ்த்தியே தீர வேண்டும் என்ற உறுதியோடு இந்தக் கூட்டணி பரிணமித்திருக்கிறது. இப்படி ஒருபோதும் நடக்காமலே போவதை விட இப்போது நடந்திருக்கிறது என்ற ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சேரவே மாட்டார்கள் என்றார்கள். சேர்ந்துவிட்டோம். இணைந்திருக்க மாட்டார்கள் என்றார்கள். இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். வெற்றிபெற மாட்டார்கள் என்கிறார்கள். வெற்றிபெறுவோம்.
மதுரையில் இந்த மாதம் 26ம் தேதியன்று நடைபெற உள்ள மக்கள் நலக் கூட்டணி மாநாடு சொல்லப்போகும் செய்தி என்ன?
மாற்று அரசியலுக்கான மக்கள் நலக் கூட்டணியின் மாநாட்டில் பல லட்சம் பேர் பங்கேற்கப் போகிறார்கள். அவர்கள் தங்களது சொந்தச் செலவில் வந்து அதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். எளியவர்கள், உழவர்கள், தொழிலாளர்கள் என்று எல்லாத் தரப்பிலிருந்து வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் பேருக்குச் சமம். மாநாட்டின் முடிவுகளை தமிழகம் முழுக்க எடுத்துச் செல்வார்கள். தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாறுதல் வருவதற்கான ஒரு நுழைவாயிலாக இந்த மாநாடு அமையும்.மதுரை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி. ராஜா கலந்துகொள்ள இருப்பது சிறப்பு.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெள்ளம்போல் தன் ஆதரவாளர்களோடு பங்கேற்க இருக்கிறார். மதிமுக தொண்டர்களும் பெருந்திரளாகப் பங்கேற்கிறார்கள்.பேய்மழை பெருவெள்ளம் தாக்கியபோது நான்கு கட்சிகளும் சேர்ந்துதான் நிவாரணப்பணிகளை மேற்கொண்டோம். சேறு சகதியை அப்புறப்படுத்துவதில் கூட கூட்டணி தலைவர்கள் இணைந்து ஈடுபட்டோம். இந்த ஒத்துழைப்பும் நம்பிக்கையும் தோழமையும்தான் கூட்டணியின் மிகப்பெரிய பலம். இதில் வந்து இணைந்துகொள்ளுமாறு வேறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். முடிவெடுக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பு.மாநாட்டிற்குப் பிறகு, பிப்ரவரி 7, 8, 9 தேதிகளில் நான்கு கட்சிகளின் தலைவர்களும் காவிரி பகுதியில் தொடங்கி ஒரு சுற்றுப்பயண திட்டத்தை அறிவிக்க இருக்கிறோம். மக்களைச் சந்திக்கிற இயக்கமாக அது அமையும். ஒரு பிரளயம் போன்ற, மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தப்போகிற, மக்கள் மனங்களில் எழவிருக்கிற மவுனப் புரட்சியின் அடையாளமாக மதுரை மாநாடு வரலாற்றில் இடம்பெறும்.