#பச்சைத்தமிழகம்: தமிழகம் புதிய அரசியல் சிந்தாந்த கட்சிகளை எதிர்நோக்கி உள்ளதா?

ஆழி.செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

ஏன் என்றால் மிக நெடுங்காலத்துக்குப் பின் தமிழ்நாட்டின் சாதாரண மனிதர்களின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவாக அது உருவாகியிருக்கிறது. அந்தப் போராட்டத்தின் ஆதரவாளரான தொடர்ந்து அவர்களோடு பயணித்துவந்த நாங்கள் இந்த தேர்தலில் பச்சைத் தமிழகத்தோடு முழுமையாக இணைந்து பயணிக்கவிரும்புகிறோம்.

முதலில் ஒரு அறிவிப்பு:

நானும் எனது நண்பர்கள் பெ பழநி, நா.த. தமிழினியன், தாண்டவ மூர்த்தி, ஸ்டாலின் ஆகியோரும் இணைந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு உருவாக்கிய மக்கள் இணையம் என்கிற அரசியல் அமைப்பு தொடர்ந்து இயங்கும். ஆனால் தற்போது அது ஓர் கட்சியாக இயங்கும் வலிமை அற்று இருப்பதாலும், நாங்கள் தொடங்கிய கட்சி என்பதால் அதைத்தான் முன்னிறுத்தவேண்டும் என்கிற பிடிவாதம் எங்களுக்கு இல்லை என்பதாலும் இப்போதைக்கு பச்சைத் தமிழகத்தோடு இணைந்து பணியாற்றுவது என்று முடிவெடுத்திருக்கிறோம். மக்கள் இணையமும் தான் ஏற்கனவே வகுத்த அரசியல் பணிகளில் ஒரு சிலவற்றை மையப்படுத்தி தொடர்ந்து இயங்கும். ஆனால் தேர்தல் அரசியல் களத்தில் பச்சைத் தமிழகத்தோடு இணைந்து இந்த தேர்தலில் களம் காணும்.

புதிய தமிழ்த்தேசியம், புதிய சமூக நீதி, புதிய சமூக ஜனநாயகம் என மூன்று அடிப்படைக் கோட்பாடுகளோடு உருவாக்கப்பட்ட மக்கள் இணையம் ஒரு பொதுக்கட்சியாக உருவாகவேண்டும் என்கிற இலக்கை உடையது. ஆனால் பச்சைத் தமிழகம் ஒரு பசுமைக் கட்சி (Green Party). என்றாலும், இப்போதைக்கு முழுமனத்தோடு பச்சைத் தமிழகத்தில் இணைந்து செயல்படவுதென உறுதிபூண்டுள்ளோம்.

பச்சைத் தமிழகம் அமைப்பு உருவாவதற்கு முன்பிருந்தே கடந்த இரு ஆண்டுகளாகக் கூடங்குளத்திலிருந்து இயங்கிவரும் அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்போடு இணைந்து வேலை செய்தோம். வேலை என்றால் எங்களால் முடிந்தது, பரப்புரை வேலைதான். (1990-91- ஆம் 1990-91 – இலேயே காஞ்சிபுரத்திலும் செய்யாறிலும் கூடங்குளம் திட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் மக்கள் இணையத்தை உருவாக்கிய நாங்கள் ஐவரும்.)

தமிழ்நாட்டில் அடுத்த அரசியல் சக்திகளாக உருவெடுக்கவேண்டிய புதிய அமைப்புகளின் ஐக்கியத்துக்காக கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சுமார் 20 க்கும் மேற்பட்ட அமைப்புகளோடு கூடி செயல்பட்டோம். 2013 இல் தமிழ் ஆழியைப் படித்தவர்கள் இதற்கான முயற்சிகளின் வித்து அப்போது போடப்படிருந்ததை பார்த்திருக்கலாம்.

அப்போது அதில் பெரும்பாலானோர் சுப.உதயகுமாரன் முன் முயற்சி எடுத்தால் அது நடைபெறும் என்று கருத்து கூறினார்கள். ஆனால் அது பேச்சோடுதான் இருந்தது. அப்போது தேர்தலில் நிற்பதா நின்றாலும் தனியே அமைப்பை உருவாக்குவதா ஆம் ஆத்மியிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று அவர்களோடு செல்வதா என்கிற குழப்பத்திலும் கூடங்குளம் குழுவினர் இருந்தார்கள். ஆனால் முன்வைத்த காலை பின்வைக்க விரும்பாத நாங்கள், இறுதி நேரத்தில் மக்கள் இணையம் என்ற அமைப்பை உருவாக்கினோம். நான் ஆரணியி்ல் போட்டியிட்டேன்.

தேர்தலுக்குப் பிறகும் பல்வேறு அமைப்புகளோடு புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவது குறித்து பேசினோம். ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய பலரும் பின்பு பின்வாங்கினார்கள். மக்களுடைய நிலையை யோசித்து ஒரு முடிவை எடுப்பதற்கு பதிலாக தங்களுடைய பலம், பலமின்மையின் அடிப்படையிலேயே அவர்கள் முடிவெடுத்தார்கள். எங்களிடமும் பெரிய மாற்றமில்லை. 2015 முழுக்க மொழி உரிமை மற்றும் உள்ளூர் விவகாரங்களிலேயே செலவழித்தோம். 2016 தேர்தலுக்கான முன்முயற்சிகளை எடுப்பதில் தயக்கமில்லை என்றாலும், நம்பிக்கை இல்லாமலிருந்தது. அந்த சமயத்தில்தான் பச்சைத் தமிழகம் என்கிற அமைப்பை உருவாக்கும் வேலையில் உதயகுமாரன் ஈடுபட்டார். நாங்களும் அதில் கலந்துகொண்டோம். காஞ்சிபுரத்தில் மக்கள் இணையம் நடத்திய இயற்கைவள பாதுகாப்பு மாநாடு எங்களுடையிலான உறவை வலுப்படுத்தியது. மொழியுரிமை மாநாட்டிலும் உதயகுமாரன் கலந்துகொண்டார். நெருக்கமானோம்.

வேறு பல அமைப்புகளையும் இணைத்து மேற்கொண்ட நகர காலம் இடம்தரவில்லை. இனி வந்தாலும் இணைந்து செயல்படலாம், தடைகள் இல்லை.

இரண்டாண்டு காலமாக பல்வேறு அமைப்பினர்களிடம் நான் கூறிவந்த கருத்தின் சுருக்கம் இதுதான்:

  1. தமிழ்நாட்டுக்கு அடுத்த அரசியல் கட்சிகள் உருவாக வேண்டியதற்கான காலம் எப்போதோ அரும்பிவி்ட்டது. நாம் தாமதம் செய்யவேண்டியதில்லை. மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

  2. தேர்தல் முறையை முற்றிலும் கைவிடமுடியாது. ஆனால் எல்லா அமைப்புகளுமே தேர்தல் கட்சிகளாக மாறவேண்டிய அவசியமில்லை. தேர்தலுக்கு அப்பாலும் உள்ளும் என இரட்டைக் குழல் துப்பாக்கியாக நாம் செயல்படலாம்.

  3. ஒற்றைக் கட்சி, ஒற்றைத் தலைமை என்பதை முழுமையாக நிராகரிப்போம். ஆனால் மக்களைக் குழப்பாமலிருக்க ஒற்றைக் கட்சி அல்லது முன்னணி, ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட தலைவர் பிரதான தலைவர் என்பதை முன்வைப்போம். எனவே அடையாளங்களை அழிக்காமலேயே ஐக்கியத்தை முன்னெடுக்கும் உத்தியை கற்போம். இதுதான் இப்போது ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கிறது. எனவே தமிழ்த்தேசியர்கள், பெரியாரிஸ்டுகள், சமூக நீதிக்காக போராடுவோர், இடதுசாரிகள், பசுமை இயக்கத்தினர், ஊழல் எதிர்ப்புப் போராளிகள் ஆகியோர் ஒரு வானவில் கூட்டணியாக இணைவோம். கூட்டுத்தலைைமையின் கீழ் இருப்போம். ஆனால் வலுவான ஒற்றுமைக்காக தேர்தல் அடையாளத்தை ஒன்றாக வைத்துக்கொள்வோம்.

  • இந்த அடிப்படையில் நாங்கள் எடுத்த முயற்சி ஏன் வீணாகிப் போயின என்பதை விளக்கவேண்டிய அவசியமில்லை. நாம் யாரும் அவ்வளவு முதிர்ச்சி அடையவில்லை.

ஆனால் சுப.உதயகுமாரன் இந்த அடிப்படைகளை மனமுவந்து ஏற்றார். தன்னளவில் தனது அரசியல் கட்சி ஒரு பசுமைக் கட்சியாக இருக்கவேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். ஆனால் வானவில் அமைப்புகளை அவர் முழுமையாக ஏற்றார். “ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு” என கூடங்குள போராட்டத்தில அவர் முன்வைத்த முழக்கம் என்பது நவீன அரசியல் வியூகத்தில் ஒரு முக்கிய அம்சம். ஜனவரி 18 இல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தலித் அமைப்புகள் குறித்து அவர் கூறிய கருத்து அந்த அடிப்படையான பன்மைத்துவ அரசியலில் அவர் கொண்டிருக்கக்கூடிய நிலைப்பாட்டை உறுதிசெய்தது. நாங்களே எல்லாவற்றுக்கும் தீர்வு என்கிற நிலைப்பாட்டை உதயகுமாரன் கொண்டிருக்கவில்லை. இதை நான் பலதடவை அவரிடம் கவனித்தேன். எங்களுக்கு ஒரு comfort zone இருக்கிறது. அவரோடு.

அதுமட்டுமல்லாமல் இந்த இயக்கம் ஒரு அறிவுஜீவி உருவாக்கிய இயக்கமோ அல்லது சித்தாந்தவாதிகள் சேர்ந்து உருவாக்கிய இயக்கமா அல்ல. இது மக்களிடமிருந்து தோன்றியது. பச்சைத் தமிழகம் இடிந்தகரையில் தோன்றிய உயிரார்ந்த இயக்கம். அந்த மக்களின் போராட்டம் ஒரு திருப்புமுனையை அடைந்தபோது, அது இற்றுவிழக்கூடிய நிலையில், மீண்டும் அதைத் தொட்ர்வதற்கான வாய்ப்பாக பச்சைத் தமிழகம் அமைகிறது. அத்துடன் தமிழ்நாட்டின் பிற இயற்கை வளம் சார்ந்த, சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களின் களமாகவும், எல்லாவற்றுக்கும் அப்பால் மாற்று வளர்ச்சி, மாற்றுப் பொருளாதாரம் தொடர்பான அரசியல் வாய்ப்பாகவும் பச்சைத் தமிழகம் விரிகிறது. பச்சைத் தமிழகம் தமிழக மக்களின் கட்சி.

நாம் விரும்பும் ஜனநாயகத் தமிழ் வெளிக்கு ஒரு நல்ல பசுமைக் கட்சியும் தேவைப்படுகிறது. அப்படியொரு கட்சியாக பச்சை தமிழகம் வரவேண்டும் என்று விரும்புகிறோம். முன்சொன்ன காரணங்களோடு, இந்தக் காரணத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எனவே பச்சைத் தமிழகத்தோடு இணைந்து பயணி்க்க விரும்புகிறோம்.

நமது பல பணிகளில் இதுவும் ஒன்று, பல களங்களில் இதுவும் ஒனறு. ஆனால் ஒற்றுமை என்பதற்கு ஒரே அர்த்தம்தான் உண்டு. அது இணைந்து செயல்படுதல் என்பதுதான். அதைச் செய்யவிரும்புகிறோம்.

நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்:-)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.