கடந்த ஆண்டு ஐஐடி மெட்ராஸில் இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்தது கல்லூரி நிர்வாகம். இந்து மதத்துக்கு எதிரான கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வந்த மொட்டைக் கடிதத்தின் பேரில் இந்த மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சினை மாணவர் அமைப்புகளாலும் தமிழக அரசியல் கட்சிகளாலும் போராட்டமாக உருவெடுத்ததால் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு இருந்த தடை நீக்கப்பட்டது.
ஹைதராபாத் பல்கலை ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை நிகழ்வுக்குப் பிறகு, தலித் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாவது குறித்து விவாதம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், ஐஐடி மெட்ராஸில் ஒரு பிரிவு மாணவர்கள் தாங்கள் பிரிவினையை கடைப் பிடிக்கவில்லை என்றும், ஒரே தட்டில் உண்டு, ஒரே கப்பில் குடித்து ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும், ஆனால் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் மட்டும் சாதியத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றும் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவருகிறது என்றும் இதனால் தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக கல்லூரி டீனுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
ரோஹித் வெமுலா தலைமையில் செயல்பட்ட அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் மீதும் இத்தகைய குற்றச்சாட்டைத்தான் அகில பாரத வித்யா பரிஷத் அமைப்பும் முன்வைத்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.