காப்பிக்கும் டீ க்கும் இடையில் ஒரு சாதிய உளவியல் இருக்கிறது, காப்பி அருந்துபவர்கள் மேட்டுக் குடிகளாகவும், டீ சாமான்யர்கள் அருந்துவதாகவும் நம்மையறியாத ஒரு மைண்ட் செட் எல்லோருக்கும் ஏற்படுகிறது. கட்டுப் பாடற்ற சந்தை இந்த இடைவெளியை குறைத்திருக்கிறது, இன்று யார் வேண்டுமானாலும் காப்பி அருந்தலாம்.. அது வேறு..
ஆனால் இவையிரண்டும் கிருஸ்தவ மிஷனேரிகளால் வெகுஜன மக்களுக்கு அறிமுகப்படுத்த பட்ட காலத்தில் காப்பியை உயர்சாதியினர் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள், அதனாலேயே அதற்க்கு உயர்ந்த பண்பு கிடைக்கிறது,
கும்பகோணம் டிகிரி காப்பி பிராமணர்களின் பிராண்ட். வெள்ளையர்களின் ஆட்சியில் லட்சக் கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் ரத்தத்தில் உருவான காப்பி கொட்டைகள் பிராமண ஆத்துக்குள் வந்த பிறகு சாதிய உயர்வை பெற்று பிராமண பிராண்டேட் ஆக நிலைக்கிறது.
“என்கூட ஒரு கப் காப்பி, அதுல தெரிஞ்சிரும் என் மிச்ச வாழ்கையை உங்க கூட வாழமுடியுமான்னு” என்று கவுதம் மேனன் படத்தில் அனுஷ்கா உருகும் வசனம் சும்மா போற போக்குல வந்திரல.. ஊறிப் போன உயர்சாதி மேட்டுக்குடி உணர்விலிருந்து வருவது அது, அனுஷ்கா இப்படி சொல்வதாக கற்பனை செய்வோம் “என்கூட ஒரு டீ குடிக்க …” சொல்லும்போதே நம் மனம் லோக்கலாக. செட் ஆகும்.
நம்மவர்கள் ஆடியவரை “கூத்தாக” இருந்தது “கூத்தாடிகளாக” இருந்தது அவர்கள் கைப்பற்றிய பிறகு “கலையாக” “கலைஞர்களாக” வடிவம் பெறுகிறது, சமூகத்தில் இழிவான உளவியல் உள்ள தொழில் சந்தையில் மதிப்பு மிக்கதாக மாறும்போது அதை அபகரிக்கும் லாவகத்தை, சமூகத்தில் அதை உயர்ந்த பண்புடைய உளவியலாக மாற்றும் தந்திரத்தையும் நாம் கற்க வேண்டும்.
நாளை “பறை”க்கு ஒரு சந்தை வந்தால் கூச்சமே இல்லாமல் அதை அபகரித்து.”அய்யங்கார் பேக்கரி”, “ஆரிய பவன்” போல “அயங்கார் பறை இசைக்குழு” வை உருவாக்கி பறைக்கு பிராண்ட் உரிமை கோர முடியும் அவர்களால்.
மருத்துவம் உயர்ந்த சந்தையாக மாறும்போது அதுவரை காலம் காலமாக மருத்துவம் பார்த்த நாவிதர்களிடம் (அம்பட்டையர்கள்) இருந்து மருத்துவத்தை கைப்பற்றி அதே சமயம் நாவிதர்களின் சாதிய இழிவும் மாறாதவாறு பார்த்துக் கொள்ளவும் முடிகிறது அவர்களால். சொல்வார்களே “குலக் கல்வி, குலக் கல்வி” என்று. அப்படியென்றால் மருத்துவம் பார்த்த நாவிதர்களுக்கு தானே ஆங்கில மருத்துவத்தையும் படிக்க உரிமை உண்டு?
இந்த லட்சணத்தில் தகுதியும் திறமையும் இல்லாமல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் திறமையற்றவர்கள் வாய்ப்பை பெறுவதால் தான் மருத்துவத்தில் தவறு நடக்கிறது என்று வியாக்கியானம் வேறு. விகிதாசார அடிப்படையில் கூட நம்மவர்கள் மருத்துவம் படிக்க விடாமல் எதிர்ப்பு வேறு இன்று வரை.
அதையே நம்மவர்களும் மூளையே இல்லாமல் சொல்லித் திரிவார்கள். நம்மையறியாமலேயே “கரகாட்டக்காரி” என்பதும் நாட்டியப் பேரொளி என்பது பார்ப்பன உளவியலே. இந்த தேசத்தின் அனைத்திலும் அவர்கள் உளவியல் விரவி கிடக்கிறது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது வெறும் வறட்டு வாதமல்ல.. எச்சரிக்கையாக கலைய வேண்டும்..