தமிழ் புத்தாண்டு எது?: தொ.பரமசிவன் சொல்கிறார்!

தொ.பரமசிவன்

ஆய்வாளர் தொ. பரமசிவம்
ஆய்வாளர் தொ. பரமசிவம்

சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது சமய நம்பிக்கை உள்ளவர்களின் வாதம். உழைப்பவர்கள் கொண்டாடும் தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என்பது தமிழறிஞர்களின் வாதம். அதற்கேற்ப தமிழக அரசு தை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருக்கிறது. ஆனால் இவ்விரண்டு வாதங்களையும் மறுத்து தைப்பூசம் தான் தமிழ்ப்புத்தாண்டு என்கிறார் ஆய்வாளர் தொ.பரமசிவன். தமிழர்களின் சமயங்கள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், தொன்மங்கள், வழிபாடுகள் எனப் பல அம்சங்கள் குறித்தும் ஆய்வுபூர்வமாக எழுதி வரும் தொ.பரமசிவத்தின் பொங்கல் குறித்த கருத்துக்கள் வியப்பின் விளிம்புக்கு அழைத்துச் செல்பவை.

“தமிழகத்தில் கொண்டாடப்படும் வேறெந்தப் பண்டிகைகளையும் விடவும் பொங்கலுக்குச் சிறப்பான தனித்துவம் உண்டு. இரண்டு அம்சங்களில் பொங்கல் மற்ற பண்டிகைகளில் இருந்து வேறுபடுகிறது. முதலாவதாக இது ஒரு தேசிய இனத் திருவிழா. சாதி, சமயங்களுக்குள் மற்ற பண்டிகைகள் சிறைப்பட்டுக் கிடக்க, பொங்கல் மட்டும் ஓர் இனத்திருவிழாவாகத் கொண்டாடப்படுகிறது. இரண்டாவதாக, பொங்கல் என்பது தீட்டு அணுகாத திருவிழா. பொங்கலுக்கு பிறப்பு, இறப்பு தீட்டுக்கள் கிடையாது. ஒரு வேளை பொங்கலன்று காலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும், மிக விரைவாகச் சடங்குகளை முடித்துவிட்டு, வீட்டைப் பூசி மெழுகிப் பொங்கல் கொண்டாடும் பழக்கம் இன்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.

சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு ஆகிய மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் உயர் சாதியினர் எனச் சொல்லப்படுபவர்களால் விலக்கப்பட்டவை. இன்றும் பெருங்கோயில்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவே பொங்கல் எளிய மக்களின் இனிய கொண்டாட்டம் என்பதற்குச் சாட்சி.

தைப்பொங்கலை அடுத்து தென்மாவட்டங்களில் கொண்டாடப்படும் திருவிழா சிறுவீட்டுப் பொங்கல். மார்கழி மாதம் முப்பது நாட்களும் அதிகாலையில் வாசல் தெளித்துக் கோலமிட்டு, சாணத்தில் பூ சொருகி வைக்கும் பழக்கம் பீர்க்கு, பூசணி, செம்பருத்தி ஆகிய பூக்களே சாணத்தில் செருகப்படும். மாலையில் வாடிவிடும் இந்த பூக்களைச் சாணத்துடன் சேர்த்துக் காயவைத்துவிடுவார்கள். பொங்கல் முடிந்து 8-15 நாட்கள் கழித்து சிறுவீட்டுப்பொங்கல் கொண்டாடப்படும். பெண் பிள்ளைகளுக்காகவே வீட்டுக்குள் களி மண்ணால் ஆன சிறு வீடு கட்டப்படும். பொங்கல் அன்று சிறு வீட்டு வாசலில் பொங்கலிடப்படும். பிறகு, பொங்கலையும் பூக்களால் ஆன எருத்தட்டுக்களையும் பெண்கள் ஆற்றில் விடுவர்.

‘மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்’ என்னும் திருப்பாவைப் பாடல் பலரும் அறிந்த ஒன்று. ஆனால், சங்க இலக்கியங்களில் தை நீராடல் குறித்தும் குறிப்பிடப்படுகிறது. ‘தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி’ என்கிறது பரிபாடல். இங்கே நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது, ஆண்டாள் தன் திருப்பாவையில் மார்கழி முதல் நாளைக் குறிப்பிடவில்லை. மதிநிறைந்த நன்னாள் என்றுதான் குறிப்பிடுகிறார். மதிநிறைந்த நன்னாள் என்பது பௌர்ணமி.

எனவே, திருப்பாவை நோன்பு மார்கழிப் பௌர்ணமியில் தொடங்கி தை மாதம் பௌர்ணமியில் முடிகிறது. தைப்பூசம் என்பது தை பௌர்ணமி. தமிழ் மாதங்கள் அனைத்தும் பௌர்ணமியில் இருந்தே தொடங்குகின்றன. எனவே, தைப்பூசம் என்பதுதான் தமிழ்ப் புத்தாண்டு. மார்கழி நீராடலில் தொடங்கும் திருப்பாவை நோன்பு தை நீராடலில் முடிகிறது. இந்தக் காலகட்டம் தான் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் காலகட்டம்.

தமிழ்ப்புத்தாண்டு பற்றிப் பேசுகிற இருதரப்பாரும் இந்த விஷயத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. நமது பண்பாடு குறித்த புரிதலுடன்தான் நாம் தமிழ்ப்புத்தாண்டு குறித்த விஷயத்தை அணுக வேண்டும்.

உழைக்கும் மக்கள் மற்றும் வீட்டுப் பெண்களின் நம்பிக்கைகள் சார்ந்து கொண்டாடப்படும் இந்தத்திருவிழாக்கள் தமிழர்களின் நன்றி உணர்வை வலியுறுத்துபவை. வெப்ப மண்டல நாடுகளில் அறுவடைத் திருநாட்கள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. மற்ற பண்டிகைகளில் நாம் பிராத்தனைகளை முன்வைக்கிறோம். வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் முன் வைக்கிறோம். ஆனால், அதற்கு மாறாக பொங்கலில் நமது வாழ்க்கைக்கு அடிப்படையான உழவர்களுக்கும், சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி செலுத்துகிறோம். இப்படிப் பல்வேறு அம்சங்களில் மாறுபட்டு விளங்குகிற பொங்கலைக் கொண்டாட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை” என்கிறார் தொ. பரமசிவம்.

One thought on “தமிழ் புத்தாண்டு எது?: தொ.பரமசிவன் சொல்கிறார்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.