
விடியலுக்கு முன்பான மூன்று மணி நேரமான கடைசி யாமத்தில் நடத்தப்பட்ட வைகறை ஆட்டத்திற்கு இசையமைக்க தலைமையேற்பவரை “தலைப்பறை” எனவும் அவருக்குக் கீழ்பணிபுரிவோரை கீழாள் எனவும் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.வைகறை ஆட்டத்தின் போது விளக்கெரிக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட நிவந்தங்களையும் இவர்களே ஏற்று செய்திருக்கின்றனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கல்வெட்டில் தலைப்பறை ஒருவரும் அவருக்குக்கீழ் 14 பேரும், குத்தாலத்தில் தலைப்பறை ஒருவரின் கீழ் 11 பேரும் பணி புரிந்திருக்கின்றனர்.தலைப்பறையின் கீழ் பணி புரிந்த கீழாள்கள் இசையமைத்த கருவிகள் கரடிகை, கைம்மணி, மத்தளம், தாளம், காளம், ஸ்ரீகாளம், சங்கு போன்றவையாகும்.
“ப்ரகட படஹ கண்டா காஹல ச்ரேணி பேரி” எனத் தொடங்கும் திருவாலங்காட்டு செப்பேட்டில் ஒலிமிகு சிறுபறை, மணி, எக்காளம் போன்றவற்றின் வரிசையாலும் போர்ப்பறை, முரசு, பேரொளி, சங்கம் முதலியவை திசைகளில் முழங்க நீரால் பூமியில் கலியால் தோன்றிய அழுக்கை நீக்குபவன் போல அருண்மொழி வர்மன் தானே மன்னனாக முடிசூடினான் என்ற குறிப்பிருக்கிறது.
இவையனைத்தையும் விட இறை பக்தியில் முக்தியடைந்த, இறையாலேயே “அம்மையே” என அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மை சுடுகாட்டில் சிவனின் ஆடலுக்கு பக்கக் கருவியாக பறை ஒலித்ததை குறிப்பிடும் பாடல் வரிகளை “பறை போல் விழிகட் பேய் கொட்ட” பாடல் வரிகளில் காணலாம்.
இப்படியாக நாடாண்டவர்கள், இறைக்கு இசைவாக இருந்த ஒரு இசைக்கருவியை குறிப்பிட்ட சமூகத்தின் இசையாக ஒதுக்கியதின் காரணம் என்னவாக இருக்கும்?.இறைக்கு இசைவான பறையிசையை இணையாக ஏற்று வாசிக்க முடியாதென மறுப்பதெல்லாம் அபச்சாரம் அநாச்சாரம் வரிசையில் வராதா?
(முனைவர் ஆ.பத்மாவதியின் தொல்லியல் ஆவணங்களில் இசைக்கலை நுட்பங்கள், ச.கிருஷ்ணமூர்த்தியின் இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புத்தகங்களில் இருந்த குறிப்புகள்)
அண்மையில் பிரபல தவில் இசைக் கலைஞர் வலையப்பட்டி சுப்ரமணியம் தால் கலந்துகொள்ளவிருந்த நிக்ழ்ச்சியில் பறை இசைக்கப்படுவதைக் கேட்டு, இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
அதைப் பற்றிய செய்தி இங்கே: ‘பறையும் தவிலும் ஒண்ணாக முடியுமா?’: நிகழ்ச்சியை ரத்து செய்த வலையப்பட்டியார்!