கார்ல் மார்க்ஸ்

ஜல்லிக்கட்டு’ தொடர்பான விவாதங்களை உற்று நோக்குகையில் அது பலரை முட்டுச்சந்தில் கொண்டுபோய் நிறுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் தலித்தியம் பேசுபவர்களும் அடக்கம். இப்போது பெரியார் இருந்திருந்தால், ஜல்லிக்கட்டை ஆதரித்திருப்பாரா அல்லது எதிர்த்திருப்பாரா என்ற சுவராஸ்யமான விவாதத்தையும் பார்க்க முடிந்தது.
ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. இந்தப் பாரம்பரியத்தில் தலித்துகளின் இடம் என்ன என்ற கேள்விதான் தலித்தியர்கள் எதிர்கொள்ள விழைவது. அதை ஒரு பாரம்பரியம் இல்லை என்று அவர்களால் முழுக்கவும் நிராகரிக்க முடியவில்லை. ஏன்? சில ஊர்களின் ஜல்லிக்கட்டில், பறையர்களும் கூட பூசாரிகளாக இருக்கிறார்கள். அதனால் ஊசலாடுகிறார்கள்.
தான் பண்ணையடிமையாக வேலை செய்யும் ஆண்டைக்கு, ‘’பண்டிகை சீர் வரிசை’’ வைப்பது வட மாவட்டங்களில் இருந்த ஒரு பாரம்பரியம். அந்த பாரம்பரியத்துக்குப் பின்னுள்ளது, இரண்டு சமூகங்களுக்குள்ளான பண்பாட்டு உறவுதான். ஆனாலும் அதை நிலை நிறுத்துவது சாதி அடிமைத்தனம் மட்டுமே. அதைக் கைவிடுவது தான் ஒரு தலித் செய்ய வேண்டியது. சமத்துவமற்ற எந்த பண்பாட்டு நிகழ்வுகளில் இருந்தும் தலித்துகள் வெளியேறுவது தவிர்க்க முடியாதது. பாரம்பரியத்தின் சுமையைச் சுமக்க வேண்டிய எந்த அவசியமும் தலித்துக்கு இல்லை. இல்லாத ஒன்றை அவர்கள் மீது ஏற்றிச் சிந்திக்கும் அறிவு ஜீவிகளேத் தத்தளிக்கிறார்கள்.
இந்த ஜல்லிக்கட்டில் கூட, பங்கேற்பாளர்களாக மாற முடியாமல் பெரும்பான்மை தலித்துகள் ஏன் இன்னமும் பறையடிப்பவர்களாக மட்டும் இருக்க நேர்கிறது? இதற்குப் பின்னால் நிலவுடைமைச் சமூகத்தின் காரணிகள் இருக்கின்றன. எந்த விழாவும் அதனதன் அளவில், கொடையாளரையும், பங்கேற்பாளரையும், உதவி செய்வோரையும் கொண்டிருக்கிறது. விவசாயம் சார்ந்த சமூகத்தில் இதன் படிநிலைகள் என்ன என்பது எல்லாருக்கும் தெரியும். நிலமுள்ளவன் தான் கொடையாளன். இந்தக் கணக்கின்படி, ஒப்பீட்டளவில் நிலமற்ற தலித் தான் இந்தப் பட்டியலில் ஆகக் கடைசி.
இப்போதைய வளர்ச்சிப்போக்கில், இந்தப் படிநிலையில் நிறைய குறுக்கீடுகள் நிகழ்ந்துள்ளன. சமூகநீதிப் போராட்டங்கள் முதல், முதலாளித்துவப் பொருளாதாரம் செலுத்தும் ஆதிக்கம் வரை. அது தான் இங்கே தலித்துகளின் பங்கேற்பு குறித்தப் போராட்டமாக வடிவமைகிறது. இதில் தலித்துகளின் சம உரிமையைத் தடுப்பதில் ஆதிக்க சாதி மனநிலை செயல்படுகிறது. இந்த மனநிலையைத் தக்க வைப்பதில் நமது பாரம்பரியத்துக்கு பங்குண்டு.
ஆனால் இந்த விவாதத்தில் எல்லாருமே, குறிப்பாக பாரம்பரியம் என்று பேசுகிறவர்கள், சாதியை வெளியே எடுத்துவிட்டேப் பேச முயல்கிறார்கள். நமது சூழலில் பாரம்பரியம் என்றால் அது சாதிப் பாரம்பரியம் தான். ஏனெனில் நமது சமூக அமைப்பு சாதியால் பிணைக்கப்பட்ட அமைப்பு. நாம் முதலாளித்துவ சமூகமாக மாறத்தொடங்கினாலும், நமது கிராமிய விழாக்கள் இன்னும் சாதிப் பாரம்பரியத்தின் விழாக்கள் தான். நாம் ஒவ்வொரு முறை பாரம்பரியம் என்று பேசுகிறபோதும் அது சுட்டுவது சாதியை உள்ளடக்கிய ஒரு பாரம்பரியத்தைத் தான். ஜல்லிக்கட்டிலும் அது தான் நிகழ்கிறது.
இந்த பாரம்பரியம் தான் ஆகமத்தைக் காரணமாக வைத்து பார்ப்பனர்கள் தவிர்த்த மற்றவர்களை கருவறைக்கு வெளியே நிறுத்துகிறது. ஜல்லிக்கட்டில், இது தான் உன் இடம் என்று தப்பை தலித்தின் கையில் திணிக்கிறது.
இந்த இடத்தில் பெரியார் குறித்து பொதுவாக வைக்கப்படும் விமர்சனம் என்ன என்று பார்ப்போம். சமூக நீதி என்ற பெயரில், தமிழர்களின் பண்பாட்டை அழித்துவிட்டார் என்பது அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஜல்லிக்கட்டின் வழியாக, வேளாண் சமூகம் மரபு ரீதியாக உருவாக்கிப் பேணிய கால்நடைகளின் மரபணு வீரியம் போன்றவையெல்லாம் விவாதத்துக்கு வருகின்றன. விழாக்களில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை சீர் செய்வதை விடுத்து, அந்த விழாக்களைப் புறக்கணிக்கும் அறைகூவலை விடுத்ததன் மூலம், அந்த கொண்டாட்டங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்தி அவர்களிடம் பாரம்பரியத்தின் மீதான தாழ்வுணர்ச்சியை உருவாக்கியது என்பதாகவும் அந்த விவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது.
கால்நடைகளின் பயன்பாடு முற்றிலும் அவசியமில்லாது ஆக்கப்பட்டுள்ள இந்த பொருளாதார மய சூழலில், ஜல்லிக்கட்டில் மிஞ்சியிருப்பது, விழாக்கால கொண்டாட்ட மன நிலையும், காளை வளர்ப்போரின் சிறிய பொருளாதாரா நலன்களும் மாத்திரமுமே. இதில் ஊடும் பாவுமாக பொருந்தியிருக்கும் சாதிய மனநிலையைக் களைவதும், பாரம்பரியத்தைக் கைவிடுவதும் வேறு வேறல்ல. எந்த ஒன்று சுயமரியாதைக்கு எதிரானதாகவும், சமூக நீதிக்கு ஏற்புடையதாவும் இல்லையோ அவற்றைத் தயக்கமின்றி பெரியாரியம் கைவிடும் என்பது தான் எனது புரிதல்.
பிறகு, தமிழ்ப் பண்பாடு என்று உருகுகிறார்கள். சாதி என்று வந்தால், அது இந்துப் பண்பாட்டுடன் இணைந்தது தான். அதில் மயங்குவதற்கு ஒன்றும் இல்லை.
கார்ல் மார்க்ஸ், சமூக-அரசியல் விமர்சகர்.