Thamizh Thamizh

ஜல்லிக்கட்டு பற்றி பெரியார் திடலில் பேசிய எனது உரையின் விரிவான சுருக்கம்!
அரங்கத்தில் திரண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம். வேலை விசயமாக சென்னை பணி மாற்றல் ஆனாலும் அதில் இன்னொரு தனிப்பட்ட விருப்பமும் இருந்தது. அது தந்தை பெரியாரின் திடலுக்கு அடிக்கடி செல்லலாம், கருத்துக்களை கேட்கலாம்…அய்யா வாழ்ந்த இடத்தை அவ்வப்போது பார்க்கலாம் என்பதுதான். அப்படிப்பட்ட பெரியார் திடலில் எனக்கு மேடை அமைத்து கொடுத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. தோழர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
முதலில் இந்த அரங்கத்தில் பேசுவது தான் எனக்கு ஜல்லிகட்டை சந்திப்பது போல’ (என்றபோது ‘எங்களை காளைகள் என்குறீர்களா?’ என்றனர் தோழர்கள் சிரித்தபடியே..).’ஆம் அறிவு ஜீவிகள் நிறைந்த அரங்கில் மேடைக்கு புதிதான நான் பேசுவது அவ்வகைபட்டதாகவே இருக்கு. குறிப்பாக தோழர் அ.குமரேசன் அவர்களின் எழுத்துக்களையும் படித்து தான் எனக்குள் சிந்தனை ஏற்றம் ஏற்பட்டது. இன்று அவர் முன்பேவும் பேசுவது மகிழ்ச்சிக்குறியது.
சரி விசயத்திற்கு வருகிறேன்…ஜல்லிக்கட்டு. பற்றி பேசவுள்ளோம்….சின்ன வயதில் என் அம்மா தமிழ் தமிழன் என்று சொல்லித்தான் வளர்த்தார். எங்க ஊர் சேலம் என்பதால் சிறிது தூரத்தில் கிராமத்தன்மை வந்துவிடும். தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற பலகையை பார்க்கும்போதெல்லாம் சைக்கிளில் போனாலும் உடனே நெஞ்சை நிமிர்த்தி மிதிப்பேன். அப்போது ஒரு தி.மு.க கூட்டத்திற்கு போயிருந்தேன். அங்கே ‘தமிழ் இனத்தில் குழந்தை பிறந்ததும் நெஞ்சில் நெல் மணி கொண்டு கீறி வீரத்தை விதைப்பார்கள். அவனே வீர தமிழன்’ என்று முழங்கியதை கேட்டேன். உடனே வீட்டுக்கு போயி நம்ம நெஞ்சுல வீரம் இருக்கான்னு பார்க்க சட்டையை அவிழ்த்துவிட்டு பார்த்தால் ஒன்றையும் காணோம். ‘என்னடா இது நமக்கு வீரமில்லையா அப்போ நாம தமிழனில்லையா?’ என்று நினைச்சுகிட்டே நெஞ்சை அறுத்துக்கலாம்ன்னு ஒரு ப்ளேடு எடுத்தேன். ஆனாலும் பயம். சரி நாளைக்கு அறுத்துக்கலாம்ன்னு யோசிச்சு நாளைக்கு நாளைக்கு நாளைக்குன்னு இத்தோட 35 வருசமாச்சு. இன்னும் அறுத்துக்கலை.
இப்படி வீரம் என்றாலே தமிழன், தமிழன் என்றாலே வீரம்ன்னு சொல்லும்போது ஜல்லிக்கட்டை தான் பிரதானமா உதாரணம் காட்டுவார்கள். அவ்வகையில் எனக்கு ஜல்லிக்கட்டு ரொம்ப பிடிக்கும். ஆனாலும் எங்க ஊருல நேர்ல பார்த்ததே இல்லை. சினிமா தான் ஜல்லிக்கட்டை அறிமுகம் செய்தது. சேரன் பாண்டியன்ல சரத்குமார் ,முரட்டு காளையில ரஜினிகாந்த் அடக்குறதை பார்த்தேன். ஆனாலும் வருத்தம். என்னடா இவ்ளோ சூப்பரான ஜல்லிக்கட்டை நம்மாளு இன்னும் அடக்கலையேன்னு..ஆமா நான் கமல் ரசிகன்…அந்த குறையை ரொம்ப வருஷம் கழிச்சு விருமாண்டியில தீர்த்தாரு. எனக்கு ‘நம்மாளும் அடக்கிட்டார்னு’ ரொம்ப பெருமையா இருந்தது.
இப்படி ஜல்லிக்கட்டு தான் நம்ம வீரத்தின் அடையாளம்ன்னு இருந்தேன். தமிழன்ன்னு பெருமைப்பட்டேன். ஆனாலும் இவ்ளோ சூப்பரான ஜல்லிக்கட்டில் ஏன் தலித்கள் பரவலா கலந்துக்க முடியலை என்று ஒரு கேள்வி எழும்பிக்கொண்டே இருந்தது. அதுதான் என்னை ஜல்லிகட்டை ஒட்டி தீவிர வாசிப்பிற்கு கொண்டு வந்தது. வரலாற்றை படிக்கும்போது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தான் மாடு அடக்கும் முறை உருபெற்றதாக உணர்ந்தேன்.
ஜமீன்தார்கள் தங்கள் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் நிறுவ, உருவாக்கிய அடையாளம் தான் ஜல்லிக்கட்டு என்பது தெரிய வந்தது. ஒரு பண்பாடு என்பது நிலவுகின்ற சமூகத்திற்கு ஏற்ப வெளிப்படுவதாகும். தமிழன் வீட்டிற்கு முன் திண்ணை கட்டி வைத்தான் பரந்த மனப்பான்மை உள்ளவன் என்று பெருமையடிக்கின்றன. ஆனால் அதே திண்ணையில் தான் தாழ்த்தப்பட்ட மக்களை நெருங்க கூட விட்டதில்லை என்பதும் இதே தமிழனின் பண்பாடாக தான் இருந்தது. தமிழர்கள் ‘நாய், பூனை வளர்த்தார்கள் உயிர்களிடத்தில் அன்பு செலுத்தியவர்கள்..’ என்றெல்லாம் சொல்கிறார்கள்.
சேமித்துவைத்த நெல் மூட்டைகளை எலிகளிடம் இருந்து காப்பாற்ற தான் பூனைகள் வளர்க்கப்பட்டன. கொள்ளையடிப்பவர்கள் வந்தால் எச்சரிக்கை செய்யவும், வேவு பார்க்கவும் தான் நாய்கள் வளர்த்த தொடங்கினார்கள். அப்படியென்றால் அங்கே தமிழன்களில் ‘சுரண்டும் தமிழன் சுரண்டப்படும் தமிழன், வியாபார தமிழன், கொள்ளையடிக்கும் தமிழன்’ என்ற பல்வேறு வர்க்க பிரிவுகள் உள்ளன என்பது தான் விளங்குகிறது. இபப்டி வர்க்க ரீதியாக பிளந்துள்ள சமூகத்தில் எப்படி ஒரு பொது பண்பாடு விளங்கியிருக்கும்? தமிழன் பண்பாடு என்றால் ஏன் ஜல்லிக்கட்டு தமிழகம் முழுக்க நடக்கவில்லை. அப்படியென்றால் அது தமிழக பண்பாடா? வட்டார பண்பாடா? ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் பெருமளவு பங்கேற்க முடியவில்லை. அப்படியென்றால் அது தமிழன் பண்பாடா? இல்லை சாதிய பண்பாடா? இந்த பின்னணியில் ஜல்லிக்கட்டை காணும் போதுதான் இதன் பின்னுள்ள அரசியல் விளங்குகிறது.
மத்திய அரசு அனுமதிக்கணும் என்று ஜெ கடிதம் போடுகிறார். தி.மு.க போராட்டத்தை அறிவிக்கிறது.. பா.ம.க , வி.சி உட்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கிறார்கள். போன வருடம் வரை அமைதியாக இருந்த பா.ஜ.க திடீர் குரல் எழுப்புகிறது. ஆக ஜல்லிக்கட்டு என்பது வாக்கு அரசியலுக்கு பயன்படும் ‘டூலாக’ பயன்படுத்துகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இவை கடந்து இந்துத்வாவாதிகள் இதை கையில் எடுக்கிறார்கள். திருவள்ளுவர் விழா, ராஜ ராஜ சோழன் விழா என்று நடைகட்டி வருகிறார்கள்.
ஒரு கட்டிடம் கட்ட ஒரே சூளையில் சுட்ட கற்கள் தான் பயன்படுத்தணும். ஆனால் அத்வானி ராமர் கோயில் கட்ட வீட்டுக்கு ஒரு செங்கல் கொடுங்கள் என்றார். இந்தவகையில் தான் செயற்கையான ஒர்மையை உருவாக்கி பாபர் மசூதியை இடித்தார்கள். அப்படிதான் எம்.பி தருண் விஜய் திருக்குறளுக்காக தெற்கிலிருந்து வடக்கிற்கு பாதயாத்திரை போனது. சில நாட்கள் முன்பு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வந்தது. அதாவது தமிழகத்தில் பா.ஜ.க வை வளர்க்க செயலுக்தியாய் அய்யனார் வழிபாட்டை கையில் எடுக்க வேண்டும் என அவர்கள் தலைமை முடிவெடுத்துள்ளதாக ஒரு செய்தி வந்தது. யோசித்து பார்க்க வேண்டும் ராமர், விநாயகர் என்று அரசியல் செய்தவர்கள் இதை கையில் எடுக்கிறார்கள். மாரியம்மன் பண்டிகைகளில் சம்மந்தமில்லாமல் சபரி மலை பாடல்கள் இடம் பெறுகின்றன.
இதே போல் தான் மகாராஸ்ட்ராவில் என்று நினைக்கிறேன் பழங்குடி மக்களை இந்து என்ற அடையாளத்திற்க்குள் கொண்டு வர அனுமார் வழிபாட்டை கையில் எடுத்தனர். தேர்தல் சமயத்தில் வானதி ஸ்ரீனிவாசன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் .’ தமிழ்நாட்டில் தமிழர்கள் அடையாளத்தோடு வந்தால் தான் சிறப்பாக இருக்கும் எனவே வேட்டி சட்டையில் வாங்க என்று மோடியிடம் கூறியதாக பேட்டி…
ஆக இவ்வளவு ஆண்டுகள் மதத்தை கையில் எடுத்தும் பெரியார் மண்ணில் எதையும் சாதிக்க முடியாததால் ‘தமிழ் தமிழ்’ என மொழியை கையில் எடுக்கிறார்கள். பண்பாட்டை கையில் எடுக்கிறார்கள். மொழி அரசியலில், தங்கள் மத அரசியலுக்கு சிக்கல் வராத விஷயத்தை மட்டும் கையில் எடுத்து உணர்ச்சிகளை தூண்டி விடுகிறார்கள். அது சரியாக நடக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் சுயத்தை திணிக்க முற்படுகிறார்கள். அதுதான் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஜவடேகர் ஆணை வெளியிட்ட உடனே ‘இதை மோடி பொங்கலாக தமிழர்கள் கொண்டாடுங்கள்’ என்றார். அமித்சாவை அழைத்து வரவும் உள்ளதாக கூறுகிறார். ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுப்பதாக கூறி ‘மாட்டு கறி சாப்பிடுகிறார்கள். அதில் துன்பப்படாத மாடுகள் இதில் மட்டும் துன்பபடுகிறதா? என இஸ்லாமியர்கள், தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொம்பு சீவி விடுகிறார். இதுதான் இந்துத்வம். நாம் எந்த உடை உடுத்தவேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று திணிக்கிறது இன்றைய மோடியிசம். ஆம் பாசிசம் போல உருவாகி வருகிறது மோடியிசம்.
இந்தவகையில் ஜல்லிக்கட்டை அவர்கள் தூக்கிப் பிடிக்க தொடங்கியிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் ஆகா ஓஹோ என ஜல்லிக்கட்டுக்காக முழங்குகிறார்கள். எனக்கு பூலோகம் படத்து வசனம் தான் நியாபகம் வருகிறது. ‘எந்த முதலாளியின் மகனாவது பாக்ஸிங்கில் பங்கேற்கிறானா?’ என்பார். ஆம் அதையேதான் கேட்கிறோம் ‘எந்த அரசியல்வாதியின் மகனாவது, அரசியல்வாதியாவது ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறார்களா?’ பல வருடங்களாக இளைஞர் என சொல்லிக்கொள்பவர்கள் கூட பங்கேற்க்கவில்லை. பங்கேற்ப்பதெல்லாம் பாமர தமிழர்கள் தான். முக்குலத்தோர் சமூகத்தில் குறிப்பாக கள்ளர் சமூகத்தில் உள்ள உழைக்கும் மக்கள் மிகுதியாக பங்கேற்கின்றனர். மாட்டிடம் குத்து பட்டு குடல், உடல் கிழிந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றன. அந்த பிரிவுகளில் உள்ள ஆண்டைகள் யாரும் இப்படி பங்கேற்று குத்துபடுவதில்லை. ஆண்டைகள் குதூகளப்பட நம் உழைக்கும் மக்கள் ஏன் குத்துப்பட்டு சாகனும்? ரோம் நகர க்ளாடியேட்டர் பண்பாட்டை போன்ற ஒரு பண்பாடு இது.
அதே மதுரையில் மேலவளவு முருகேசன் சாதியின் பெயரால் வெட்டிக்கொல்லப்பட்டார். அப்போது தமிழ் தமிழன் என்றவர்கள் இதே போன்று திரண்டு குரல் கொடுத்தார்களா? எங்கள் ஊருக்கு அருகில் தருமபுரி இளவரசனுக்கு மர்ம மரணம் ஏற்பட்டது. கோகுல்ராஜ் கொல்லப்பட்டார். இவர்கள் மரணத்திற்கு காரணம் சாதி. இங்கே தமிழ் தமிழன் என்பவர்கள் இதற்க்கெதிராக திரண்டு குரல் கொடுத்தார்களா? முற்போக்கு, பகுத்தறிவு, இடதுசாரி அமைப்புகள் தான் குரல்கள் கொடுத்தன. முதலில் சாதிய கட்சிகளிடம் இருந்து பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் இவர்களை காப்பாற்றனும். தங்கள் போஸ்டர்களில் அவர்களை போட்டுக்கொண்டே மறுபக்கம் சாதிய ஆதிக்கத்தை நிறுவுகின்றனர். தமிழன் வீரன், தமிழர் வீர மரபு என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் வரலாற்றில் ஒரு தமிழ் பெண் காளை அடக்கியதாகப் பார்க்கவில்லை. அப்படியென்றால் இது ஆணாதிக்க பண்பாடு இல்லாமல் வேறு என்ன? பெண்களை தடுக்கும் பண்பாடு தான் தமிழர் பண்பாடா?
பெண்கள், தலித்துகள் முழுமையாக பங்கேற்றால் கூட இந்த ஜல்லிக்கட்டு வேண்டாம் என்கிறோம். பழைய காலத்தில் இருந்திருக்கலாம் இன்று உலகம் மாறிவிட்டது. உலகமயம் என்ற பெயரில் தாராளமயம் நாட்டில் நுழைந்துவிட்டது. எல்லாமே சந்தை தான் வியாபாரம் தான். போராளி சேகுவேரா அமெரிக்காவை எதிர்த்தார். முதலில் எதிர்த்த அமெரிக்கா சே வின் உலக புகழை கண்டு அவரை பனியனாக்கி டி ஷர்ட்டாக விற்க தொடங்கி சந்தையை உருவாக்குகிறது. இதுதான் இப்படிதான் உலகமயம். அதற்கு எல்லாமே சந்தை தான். உலக முதலாளியம் மதவாதத்தோடு கைகோர்த்து வரும். தன் சுரண்டலுக்கு பயன்படுத்திக்கொள்ளும். அந்தவகையில் தான் உணர்ச்சிகளை தூண்டிவிடும் அரசியலை கையில் எடுத்து மறுபுறம் சந்தை சுரண்டலை விரிவுபடுத்துகிறது. இப்படிப்பட்ட சூழலில் வீரம், ஜல்லிக்கட்டு அடையாளம் என்கிறோம்.
காளையிடம் மோதுவதில் தான் வீரம் உள்ளதா? சாதி ஆணவ கொலைகளால் நிரம்பி உள்ளது தமிழகம். அதற்கு சம்மட்டி அடி கொடுப்பதுதான் வீரம். தமிழ் தமிழன் பண்பாடு என்று முழங்கியே சாதியை தூக்கிப்பிடிக்கும் வெள்ளாளிய பண்பாட்டை நிறுவுகின்றனர். சாதி மத பிரிவு ஒழிப்பதே பண்பாடு. சமத்துவத்தை உருவாக்குவதுதான் மனித பண்பாடு. அதுவே தமிழர் பண்பாடாக இருக்க வேண்டும்… இந்த சின்ன அரங்கில் நாமெல்லாம் பேசப்பட்ட கருத்துக்கள் வெளியே காற்று வழி பரவட்டும். அது ஒரு பவ்தீக சக்தியாக மாறட்டும். ஒருங்கிணைவை உருவாக்கி உண்மையான உழைக்கும் மக்கள் பண்பாட்டிற்காக திரளட்டும் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
(ஜல்லிக்கட்டு அவசியமில்லை என்ற நிலைபாட்டுக்கு வர உதவிய இடதுசாரி , புரட்சிகர இயக்க தோழர்கள், ம.க.இ.க புதிய ஜனநாயகம், கலாசாரம் இதழ்கள், திராவிடர் விடுதலை கழகம், வே.மதிமாறன் தோழர் உட்பட்ட தோழர்களுக்கு நன்றி)