ஜல்லிக்கட்டு: கவனிக்கப்படாத 10 உண்மைகள்!

senthil kumar
செந்தில் குமார்
1.  ஜல்லிக்கட்டு நிகழ்வைக் குறிப்பிடும் போது ஆங்கில பத்திரிகைகளில் bull taming என்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் காளைகளை அடக்குதல் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது தவறான பிரயோகம். தமிழில் அதைப் பற்றிய சரியான குறிப்புகள் ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்றுதான் கூறுகின்றன. வாடிவாசலிலிருந்து கிளம்பும் காளைகளின் திமிலின் மீது குறிப்பிட்ட தூரம் தொங்கிச் செல்வதுதான் இந்த நிகழ்வு. காளைகளின் இரு கொம்புகளையும் இணைக்கும் வகையில் அதன் அடிப்பகுதிகளில் கட்டப்பட்ட பொருளை எடுப்பதை வைத்து இதை சல்லிக் கட்டு என்றும் அழைத்திருக்கிறார்கள். இது எந்த வகையிலும் காளையை அடக்கும் நிகழ்வு அல்ல. ஒரு டன் எடையுள்ள காளையை அதில் பத்தில் ஒரு பங்கு எடை கொண்ட ஒரு மனிதன் எப்படி அடக்க முடியும். கும்பலாக காளையின் மீறி குதிக்கும்போதுகூட பலவீன காளைகள் மட்டுமே சரிந்து விழும். அப்படி செய்வது ஜல்லிக்கட்டு விதிகளின்படி தடை செய்யப்பட்ட ஒன்று. ஆங்கிலத்தில் இதை bull handling, embracing the bull என்று கூறினால் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. இதை bull taming என்று கூற ஆரம்பித்ததால்தான் இதைப் பற்றி அறியாதவர்கள் ஸ்பெயினின் கொடூரமான காளை விளையாட்டுடன் தவறான புரிந்துகொண்டிருக்கும் வாய்ப்புண்டு. தமிழர்கள் எதையும் மிகைப்படுத்தித்தான் சொல்வார்கள் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்க.
2. இது ஒரு மிருக வதை, விலங்கு உரிமைப் பிரச்சனை என்கிறார்கள். முற்றிலும் தவறு. உண்மையில் இது ஒரு மனித உரிமைப் பிரச்சனை. மனித உயிர்ப் பிரச்சனை. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் டஜன்கணக்கில் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். காளைகளின் கண்களில், பிற உறுப்புக்களில் மிளகாய் பொடி தூவுதல், மது ஊற்றிக் கொடுத்தல், அவற்றுக்கு ஏற்படும் காயம், வாடி வாசலில் பாய்ந்து செல்லும் போது அவற்றுக்கு ஏற்படும் பீதி ஆகியவற்றைத் தாண்டி இது ஒரு சீரியஸான பிரச்சனை.
3. விலங்குகளின் மீது கொண்ட அன்பின் காரணமாக, காளைகளை காப்பாற்றுவதற்காக ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு தடை கோருவதாக விலங்கு நல அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் அவர்கள் சொல்வது போல், இந்தக் காளைகளும் அரிய இனங்களான ஓங்கோல், காங்கேயம் இனங்களும் காக்கப்பட வேண்டுமானால் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும். விவசாயத் தொழிலுக்கு நவீன டிராக்டர்கள் வந்த பிறகு, மாட்டு வண்டிகள் வழக்கொழிந்த பிறகு காளைகளுக்கு உழைப்பிற்கு இங்கு தேவை பெரிதாக இல்லை. அதே நேரத்தில் குஜராத்திற்கு அடுத்தபடியாக பால் உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் தமிழகத்தின் பால் மாடுகளின் சிறந்த இனப் பெருக்கத்திற்கு சிறந்த இன காளைகள் அவசியம் தேவை. ஜல்லிக்கட்டுக்கான காளை வளர்ப்பும் அது சார்ந்த பொருளாதாரமும்தான் அத்தகைய காளை இனங்களை காப்பாற்றுவதற்கான பொருளாதார சுழற்சியை உருவாக்குகிறது.
4. பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு எப்படி இருந்ததோ தெரியவில்லை. சமகாலத்தில் அதில் ஒரு சாதிய அம்சம் உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள் சாதி அடுக்கில் மேலே இருப்பவர்களாக, சாதிய ஒடுக்குதலை செய்வர்களாக இருக்கிறார்கள். அந்தக் காளைகளை வாடிவாசலில் எதிர்கொள்பவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக, தலித்துகளாக, சாதி அடுக்கில் கீழே உள்ளவர்களாகத் திகழ்கிறார்கள். இந்த உண்மையை புறந்தள்ளிவிட்டு இந்த விவாதம் முழுமையடையாது. காளைகளுக்கு கொம்பு சீவிவிடுவது முதல் அவற்றை ஆக்ரோஷமாக, ரத்த வெறி கொண்டதாக மாற்ற முனைவது வரை உள்ள சூட்சுமம் இந்த சாதிய மனோபாவமே. உயர் சாதிக்காரன் மாட்டை கீழ் சாதிக்காரன் தெடலாமா. தொடுகிறவன் உயிரோடு திரும்பலாமா. எல்லா மாடு பிடி வீரருக்கும் டிமிக்கு கொடுக்கும் அல்லது பயங்கொடுக்கும் காளைகளைப் பற்றிய வீரக் கதைகளை இந்த சாதிய பார்வை கொண்டு பார்க்கவும்.
5. தங்களை ஜீவகாருண்ய ஆர்வலர்களாக சொல்லிக்கொள்பவர்களுக்கு ஒரு சிறிய உண்மை. கசாப்புக் கடைக்கு போகும் மாடுகளை மீட்டு நீங்கள் வைக்கும் விலங்கு மையத்தில் அந்த விலங்குகளுக்கு குறைந்தபட்ச வசதிகளையும் உணவுகளையும்தான் கொடுக்கிறீர்கள். ஆனால் நான் அறிந்தவரை காளைகளும் பால் மாடுகளும் விவசாயிகளின் வீடுகளில் அவர்களின் பிள்ளைகளில் ஒருவராக, ஓரளவுக்கு இயல்பான சூழலில் வளர்கின்றன, வாழ்கின்றன. விவசாயிகள் பொதுவாக கன்றுகளை கசாப்புக் கடைக்கெல்லாம் விற்க விரும்புவதில்லை. பூமியில் பதிந்திருக்கும் சிறந்த பச்சை தலைகளையும் மாடுகளுக்கு நாஊர வைக்கும் களனித் தண்ணியையும் குடித்து அவை வாழ்கின்றன. ஆனால் உங்கள் வீட்டு உலையில் கொதிக்கும் அரிசியை உற்பத்தி செய்து கொடுத்துவிட்டு, விவசாயிகள் ரேஷன் அரியை வாங்கித் தின்னும் அவலத்திற்கு ஆளானதுதான் கன்றுகள்கூட கசாப்புக் கடைக்கு லாரியில் பயணமாகும் அவலத்திற்கு முக்கிய காரணம். ஆனால் மாடுகளைக் காப்பதில் விவசாயிகளை தங்களின் பங்குதாரர்களாக (stakeholders) எடுத்துக்கொள்ள வேண்டிய ஜீவகாருண்யவாதிகள் அவர்களை எதிரிகளாக்கி நீதிமன்றத்தில் கேஸ் போடுகிறார்கள். கசாப்புக் கடைக்கு ரோட்டில் கடத்திச் செல்லப்படும் மாடுகளைக் கொண்ட லாரியை விரட்டிப் பிடிக்கும் ஹீரோயிஸத்திற்கு பதில் கிராமப் பொருளாதாரத்திற்கும், விவசாயப் பொருளாதாரத்திற்கு விலங்கு நல ஆர்வலர்கள் ஏதேனும் அர்த்தபூர்வமான பங்களிப்பு செய்யலாம். மாடுகள் கசாப்புக் கடைக்கு வருவது அதன் முதல் சங்கிலியிலேயே கட்டுப்படுத்தப்படும்.
6. விலங்கு நல, விலங்கு உரிமை ஆர்வலர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் மிகவும் சந்தர்ப்பவாதிகளாகத் தெரிகிறார்கள். விலங்குகளின் கறியையும் தோல்பொருட்களையும் வைத்து பல ஆயிரம் கோடி லாபம் பார்க்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இவர்கள் நேரடியாக சண்டை போடுவது கிடையாது. அதிகபட்சமாக தோல் பொருளை வாங்கும், அசைவம் சாப்பிடும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வார்கள். என்னுடைய உடம்பின் தோல் தவிர வேறு எந்த தோலையும் (skin) பயன்படுத்தப் போவதில்லை என்று ஏதாவது ஒரு பிரபலத்தை வைத்து பிரச்சாரம் மேற்கொள்வார்கள். அசைவம் சாப்பிடாதீர்கள் என்று இயக்கம் நடத்துவார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு விஷயத்தில் பின்புலமில்லாத, படிப்பறிவு அதிகமில்லாத விவசாயிகள்தானே இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு எதிராக நேரடியாக களமிறங்குகிறார்கள்.
7. காளைகளை கொன்று முடிக்கும் ஸ்பெயினின் காளை விளையாட்டிற்குக்கூட தடையெல்லாம் இல்லை. கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் அதற்கு விதிவிலக்கு பெற்றிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு சுமார் 2,000 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கிறது. பண்பாடு, பாரம்பரியம் என்ற பெயரில் கண்ணை மூடிக்கொண்டு எதையும் அனுமதிக்க வேண்டியதில்லை. அப்படிப் பார்த்தால் உடன்கட்டை (சதி) ஏறுவதும் பாரம்பரியம், கலாச்சாரம் என்றுதான் சொல்லப்பட்டது. நமது கலாச்சாரத்தின், பாரம்பரியத்தின் எந்த அம்சம் நீக்கப்படும் அளவுக்கு மோசமானது, எந்த அம்சங்களை நாம் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் தொடரலாம் என்பதை வெளி்ப்படையான மனோபாவத்துடன் விவாதிக்க வேண்டும். இப்போதுள்ள விவாதத்திலும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளிலும் எந்த வெளிப்படை மனோபாவமும் தெரியவில்லை. மாறாக முன்முடிவுகளே தெரிகின்றன.
8. கிரிக்கெட், கால்பந்து போன்ற எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும் விதிகள் இருப்பது போலத்தான் ஜல்லிக்கட்டு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கும் பாரம்பரியமாகவே விதிகள் உள்ளன. அதில் புதிய விதிகள் சேர்க்கப்படுவதில்கூட யாருக்கும் ஆட்சேபனை இருக்கக்கூடாது. அத்தகைய விதிகள் மீறப்படும் குறிப்பிட்ட ஜல்லிக்கட்டு நிகழ்வுகள், மாடு பிடி வீரர்கள் தடை செய்யப்படுவதிலும்கூட யாருக்கும் ஆட்சேபணை இருக்கக்கூடாது. ஒரு அணி அல்லது வீரர்கள் போதைப் பொருள் எடுத்துக்கொண்டதால் ஒட்டுமொத்த விளையாட்டையும் யாரும் தடை செய்வதில்லையே. ஆனால் ஜல்லிக்கட்டு நிகழ்வை மீண்டும் கொண்டு வந்தது தாங்கள்தான் என்று ஓட்டுக்காக போட்டி போடும் பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகள் காளையோடு விளையாடி குடல் சரிந்து கிடக்கும் பங்கேற்பாளருக்கு உயிர் காக்கும் சேவைகளைக் கொடுப்பது பற்றி ஏதேனும் செய்கிறதா. இன்று வரை ஜல்லிக்கட்டு நடக்கும் பெரும்பாலான இடங்களில் மேல் சிகிச்சைக்கான மருத்துவ வசதிகள் இல்லை. மாட்டின் கொம்பு வயிற்றைக் கிழிப்பதால் குடல் சரிந்து பாதிக்கப்படும் ஜல்லிக்கட்டு பங்கேற்பாளர்களை சிகிச்சை பல மணி நேர பயண தூரத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதிலேயே பெரும்பாலான உயிரிழப்பு ஏற்படுகிறது. அதைச் செய்ய துப்பில்லாத கட்சிகள், அரசுகள்தான் ஜல்லிக்கட்டு நிகழ்வைத் திரும்பக் கொண்டு வந்து பிணங்களின் மீதாவது ஓட்டு வாங்கி ஆட்சியைப் பிடிக்க நினைக்கின்றன.
9. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு துன்புறுத்தல்கள் நிகழ்கிறது. அது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அது தடுக்கவே முடியாத ஒன்றா. அத்தகைய விதிமீறல்கள் கண்டறியப்படும் போது குறிப்பிட்ட காளைகளை, காளை வளர்ப்பாளர்களை தடை செய்வது சாத்தியமில்லாத ஒன்று என்று சொல்ல முடியுமா. கட்டுப்படுத்தக்கூடிய காளைகளுக்கான துன்புறுத்தல், வாடிவாசலிருந்து கிளம்பும்போது காளைகளுக்கு ஏற்படக்கூடிய பயம், குழப்பம், மிரட்சி Vs கலாச்சாரம், பாரம்பரியம், விவசாயிகளின் எஞ்சியுள்ள எளிமையான கொண்டாட்டம்… இதில் எதில் அனுமதிக்கத்தக்கது என்று திறந்த மனதுடன் அலச வேண்டாமா. இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமயமாதல் நிகழும் தமிழகத்தில் கிராமங்கள் அழிந்து, அதிக நகர்ப்புறங்கள் ஏற்பட்டு வருகின்றன. கூடவே கிராமத்து மக்களின் எளிய கொண்டாட்டங்களும் கலாச்சார நிகழ்வுகளும் அழிந்து, உலகமயமாக்கலால் திரிந்து வருகின்றன. அவர்களுக்கு எஞ்சியுள்ள சில முக்கியமான பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்று என்ற முறையில் ஜல்லிக்ட்டு நிகழ்வை அனுமதிக்க முடியாதா.
10. இந்த வாதங்களைப் படிக்கும் போது ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு ஆதரவாக பேசுவது போல் தெரியலாம். ஆனால் உடன்கட்டை (சதி) என்ற கொடிய சமூக வழக்கத்திற்கும் ஜல்லிக்கட்டும் ஒரு நேரடித் தொடர்பு உள்ளது. இளம் வயதில் மணம் முடித்த இளம் விதவைகள் உள்ளிட்ட பலர் கொடிய முறையில் தீயில் மரணித்தது உடன்கட்டையில் நிகழ்ந்தது. ஜல்லிக்கட்டில் வாழ வேண்டிய வயதில், சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரிதும் பங்களிக்க வேண்டிய பருவத்தில் ஜல்லிக்கட்டு மரணங்கள் நிகழ்கின்றன. அத்தகைய உயிரிழப்புகள் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சாதியினர் மத்தியில் அதிகம் நிகழ்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இது ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்பை அலசி ஆராய்ந்திருக்கிறோமா. சேவல் சண்டையில் ஒரு பார்வையாளர் இறந்தது பெரிய பிரச்சனையாகிறது. ஜல்லிக்கட்டு இப்போதுள்ள பாணியில் தொடர்ந்தால் ஆண்டுக்கு 25 இளைஞர்களாவது இறப்பார்கள். இது ஒரு கொடிய இழப்பு அல்லவா. இப்போது மத்திய அரசின் அறிவிக்கையில் சொல்லப்பட்டிருப்பது உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளை பலப்படுத்திய பிறகும் இத்தகைய மரணங்கள் தொடருமானால், ஜல்லிக்கட்டு நிகழ்வை ஒழுங்குபடுத்தியும், சாவுகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், மரணங்கள் அதிகம் நிகழும் குறிப்பிட்ட ஊர்களின் ஜல்லிக்கட்டு நிகழ்வையோ, ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டு நிகழ்வையோ தடை செய்தால் அது நியாயமான நடவடிக்கையாகவே இருக்கும்.
செந்தில்குமார், ஃபெமினா இதழில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.