’அரசியல் தொடர்பு; நீதிமன்றம் செல்வது வேண்டாம்’: பூவுலகின் நண்பர்களுக்குள் பிரிவா?!

வெற்றிச்செல்வன் முத்துராஜ்

பூவுலகின் நண்பர்களின் நண்பர்களே

சில தினங்களுக்கு முன்பு பூவுலகின் நண்பர்களை சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கீழ்கண்டவற்றை கூறியிருந்தார் :


“பூவுலகின் நண்பர்கள் அமைப்பானது, அம்பேத்கர் வடிவமைத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டு, சோசியலிச ஜனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்டு, செயல்படும் அமைப்பு. அரசியல் கட்சிகளை சந்தித்து அவர்களை சூழல் அரசியல் பக்கம் ஈர்ப்பது, தமிழகத்தில் கொண்டு வரப்படும் அழிவு திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்வது, புத்தகங்கள் வெளியிடுவது, தேவைபட்டால் சட்ட போராட்டம் நடத்துவது என்று ஒரு “think tank ” அழுத்த குழுவாக செயல்படுவது என்று தான் இருந்தோம், அப்படியே செயல்படுவோம். இப்படி செயல்படுகிறோம் என்று தெரிந்து தான் நிறைய பேர் எங்களுடன் பணியாற்றுகிறார்கள். ஒரு சில தனி நபர்களின் சாகச விசயங்களுக்கு துணை போக முடியாது, அவர்களுடைய “poltical extremism” செயல்பாடுகளுக்கும் பொறுப்பு ஏற்க முடியாது. பூவுலகு சூழல் சார்ந்து இயங்க கூடிய ஒரு “pressure group” என்கிற அளவிலே பயணப்பட விரும்புகிறோம்.”

இதனை தொடர்ந்து பல நண்பர்களும், பூவுலகின் நண்பர்கள் தன்னாவலர்களும் என்னிடம் சுந்தர்ராஜன் வெளியிட்ட கருத்து குறித்து விளக்கம் கேட்டு வருகின்றனர்.

குழப்பங்கள் நீங்க இந்த பதிவு.

2008ம் ஆண்டு டாக்டர் சிவராமன், சீனிவாசன், வள்ளியப்பன், தேவநேயன், பெறியாளர் சுந்தரராஜன், வழ சுந்தரராஜன் மற்றும் நான் அடங்கிய குழு பூவுலகின் நண்பர்கள் அமைப்பாக செயல்பட துவங்கினோம் (முன்னாள் பூவுலகின் நண்பர்கள் குழுவின் அனுமதியோடு).

2009ம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் குழு மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிராக செயல்பட துவங்கினோம். இதில் பெரும் பங்கு ஆற்றியவர் மருத்துவர் சிவராமன். அன்றைய முதல்வரை சந்தித்தது, ஜெய்ராம் ரமேஷை சந்தித்தது என்று மருத்துவர் பல களப் பணிகளை மேற்கொண்டார். இதற்கு பக்கத் துணையாக பணியாற்றியவர் வழ சுந்தரராஜன். வள்ளியப்பன் எழுத்து பணிகளை மேற்கொண்டார். இது தொடர்பான அரங்கக் கூட்டங்கள், புத்தக வெளியீடுகள் என்று அப்போதைய பணிகள் இருந்தன. இந்த செயல்பாடுகள் பரவலாக பூவுலகின் நண்பர்கள் குழுவை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

பின்பு பல வெளியீடுகள், பத்திரிக்கை எனப் பல பணிகள் நடைபெற்றன. இவற்றை ஆர்.ஆர்.சீனிவாசன் ஒருங்கிணைத்தார்.

பின்பு 2011ம் ஆண்டு துவங்கிய கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம் பூவுலகின் நண்பர்கள் செயல்பாட்டை வேறு தளத்திற்கு மாற்றியது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவாக பலர் செயல்பட்டார்கள்,எழுதினார்கள், கூட்டம் நடத்தினார்கள், இருப்பினும் பூவுலகின் நண்பர்கள் மட்டுமே அதிகமாக அந்த போராட்டத்தோடு இணைத்து பார்க்கப்பட்டார்கள். அதற்கு காரணம் பூவுலகின் நண்பர்கள் மேற்கொண்ட சட்டப்போராட்டம். இந்த பணியில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், பொறியாளர் மற்றும் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் மற்றும் நான் பங்காற்றினோம்.

புதிய செயல்பாட்டாளர்கள் வர துவங்கினர். இதன் பின்பாக பூவுலகின் நண்பர்களுக்கான எல்லை விரிய துவங்கியது.

இதனிடையே பூவுலகின் நண்பர்கள் குழுவை நிர்வகிக்க ஒரு சட்டபூர்வமான அமைப்பு முறை தேவைப்பட்டது. அதன் காரணமாக பூவுலகின் நண்பர்கள் டிரஸ்ட் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலாளராக மருத்துவர் சிவராமன் நியமிக்கப்பட்டார். ஆர்.ஆர்.சீனிவாசன், மற்றும் வள்ளியப்பன் டிரஸ்ட் உறுப்பினர்களாக இருந்தனர். பின்பு பொறியாளர் சுந்தர்ராஜன் நிர்வாக அறங்காவலராக நியமிக்கப்பட்டார். நானும் வழக்கறிஞர் சுந்தர்ராஜனும், மேற்குறிபிட்ட ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் வள்ளியப்பன் ஆகியோருடன் டிரஸ்ட் உறுப்பினராக நியமிக்கப்பட்டோம்.

பூவுலகின் நண்பர்கள் குழுவை பொருத்தவரை சூழலியல் தொடர்பான பிரச்சனைகள், விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. சூழலியல் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை அரசு எடுக்க வலியுறுத்துவது. அரசியல் கட்சிகள் சூழலியல் தொடர்பான கொள்கைகளை வகுக்க வலியுறுத்துவது. சூழலியல் சீர்கேடுகளுக்கு எதிராக வழக்காடுவது என்று இருக்கிறது.

தற்போது அரசியல் கட்சிகளை சந்திப்பதும், நீதிமன்றத்தை நாடுவதும் விவாதமாகியுள்ளது. குறிப்பாக வள்ளியப்பனும் சீனிவாசனும் இந்த நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். பொறியாளர் சுந்தர்ராஜன், வழக்கறிஞர் சுந்தரராஜன் மற்றும் நான் மேற் கூறிய செயல்பாடுகள் தொடர விரும்புகிறோம். மேலும் சில கருத்துகளின் வள்ளியப்பன், சீனிவாசன் ஒருநிலையிலும் பொறியாளர் சுந்தர்ராஜன், வழக்கறிஞர் சுந்தரராஜன் மற்றும் நான் வேறு நிலையிலும் உள்ளோம். மருத்துவர் சிவராமன் பல கருத்துகளில் நடுநிலையாளராக உள்ளார்.

இந்தநிலையை நீக்க வருகின்ற 17.01.2016 அன்று பூவுலகின் நண்பர்கள் டிரஸ்ட் கூட்டம் கூடயுள்ளது. அங்கு பூவுலகின் நண்பர்கள் அடுத்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் விவாதிக்கப்பட உள்ளன.

குழப்பங்கள் நீங்கிய பின் பூவுலகின் நண்பர்கள் அடுத்தகட்ட நகர்வு அறிவிக்கப்படும்.

– வழக்கறிஞர் மு.வெற்றிச் செல்வன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.