நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மகன் காலிப் குரு. இவர் ஜம்மு காஷ்மீர் வாரியம் நடத்திய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார். காலிப் 500 மதிப்பெண்களுக்கு 474 மதிப்பெண்கள் எடுத்தும், ஐந்து பாடங்களில் ‘A1’ grade தக்கவைத்தும் சாதனை படைத்துள்ளார்.
அதிக குழந்தை தொழிலாளிகளை கொண்டதும், 60 % கல்வியறிவு மட்டுமே இருக்கும் காஷ்மீர் மாநிலத்தில், காலிப் குருவின் வெற்றி கல்விக்கான முக்கியவத்துவதை பறைசாற்றி உள்ளதாக அங்குள்ள பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அப்சல் குரு அடைக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திப்பதற்காக சென்ற தருணங்களில் எல்லாம், படிப்பின் முக்கியத்துவத்தை அவர் தன்னிடம் வலியிருத்தியதாக காஷ்மீர் மானிட்டர் என்ற பத்திரிக்கைகைக்கு 15 வயது காலிப் குரு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தந்தை தூக்கிலிடப்பட்ட மோசமான சூழலை கடந்தும், காலிப் குரு பெற்றுள்ள வெற்றி, நாடு முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கிறது. “துப்பாக்கி குண்டுகள் அல்ல. கல்வி மட்டுமே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு தேடி தரும்” என்றும் வாழ்த்து கூறுபவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.