சங்கு ஊதினால் நோய் குணமாகும்;சிவனே சூழலியல் முன்னோடி: இந்திய அறிவியல் மாநாடா? இந்திய ஆன்மீக மாநாடா?

“தினமும் இரண்டு நிமிடம் புனித சங்கை ஊதினால், எல்லா நோய்களும் நம்மை விட்டு ஓடிப்போய்விடும்” இதைச் சொல்வது ஏதோ மரத்தடி சாமியார் அல்ல, ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவர் பெயர் ராஜுவ் சர்மா. சொன்ன இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது சமீபத்தில் மைசூருவில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு.

அகிலேஷ் கே. பாண்டே என்ற பேராசிரியர் சமர்பித்த ஆய்வுக்கட்டுரை எதைப்பற்றியது தெரியுமா? இந்துக் கடவுள் சிவன் தான், முன்னோடி சூழலியலாளராம். “கைலாய மலையில் இருக்கும் சிவன், அங்கே உற்பத்தியாகும் நீரை சுத்திகரித்து கீழே கங்கையாக மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அளிக்கிறார். எனவே அவர்தான் உலகின் மூத்த சூழலியலாளர்” என்கிறது அவரது ‘ஆய்வு’அறிக்கை.

இப்படி நான்கு நாட்கள் நடந்த அறிவியல் மாநாடு முழுக்க பல அபத்த ஆய்வுக் கட்டுரைகள் அரங்கேறின. அறிவியல் மாநாட்டில் எப்படி மதத்தை முன் வைக்கும் அறிவியலற்ற கற்பனைகள் ஆய்வறிக்கைகளாக முன்வைக்கப்பட்டன என்று இந்தியாவின் ‘உண்மையான’ அறிவியலாளர்கள் உட்பட பல வெளிநாட்டு அறிவியலாளர்களும் கொதித்து போய் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்திய நோபல் அறிவியலாளரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், “இந்திய அறிவியல் மாநாடு ஒரு சர்க்கஸ் போல நடந்துகொண்டிருக்கிறது. இனி ஒருபோதும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டேன்” என்று கடுமையாக பேசியிருக்கிறார். “அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஹோமியோபதி, ஜோதிடம் போன்றவற்றை அறிவியல் என்கிறார்கள். இவை இரண்டும் ஏமாற்று வேலைகள். நட்சத்திரங்களும் கோள்களும் உங்களுடைய வாழ்க்கையை பாதிக்கக்கூடியவை என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை. ஹோமியோபதி லேகியத்தால் எந்த பலனும் உங்கள் உடலில் ஏற்படாது. எல்லாம் ஏமாற்று வேலை” என்று எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டார் ராமகிருஷ்ணன்.

“உலகில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே அறிவியல் ரீதியிலான அங்கீகாரத்தை வலியுறுத்துகிறது. அந்த வகையில் இந்தியர்கள் பகுத்தறிவோடு இதுபோன்ற மூடத்தனங்களை அணுக வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

சென்ற ஆண்டு நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் விமானத்தை புராண கால இந்தியர்கள்தான் முதன் முதலில் பயன்படுத்தினர் என்று ஒருவர் அடித்துவிட்டார். அறிவியலாளர்கள் கேட்பதெல்லாம்…அப்படி புராண காலத்தில் விமானம் பயன்படுத்தப்பட்டதற்கான தொல் எச்சங்கள், மாதிரிகள், கல்வெட்டு ஆதாரங்கள் ஏதாவது இருக்க வேண்டும் இல்லையா, அவை எங்கே? உலகின் பழமையான பல நாகரிங்களில் இப்படியான பறக்கும் விமானங்கள் பற்றி எழுதப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போது இந்தியர்கள்தான் விமானத்தை கண்டுபிடித்தார்கள் என்று எதை வைத்து சொல்ல முடியும்? என்று கேட்கிறார்கள்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் டேவிட் ஜெ. கிராஸ், “இந்திய பிரதமர் மூச்சுக்கு மூச்சு, மேக் இன் இந்தியா என்று பேசுகிறார். எதையும் சுயமாக உருவாக்காமல், கண்டுபிடிக்காமல், எதை இந்தியாவில் செய்ய முடியும்?” என்று கேட்கிறார்.

ஒரு நாட்டின் பிரதமரே, அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்திய அறிவியல் ரீதியிலான அணுகுமுறையை உதறிவிட்டு, விநாயகர்தான் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டவர் என்று பேசுகிறார். மத ரீதியிலான ஆட்சியை நிறுவ முற்படும் பிற்போக்குவாதிகள் கையில் ஆட்சி சென்றால் என்னவெல்லாம் நடக்குமோ அதுதான் தற்போது இந்தியாவில் நடக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்தச் சம்பவங்கள்.

மேலை நாடுகளின் கண்டுபிடிப்புகளை அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி செய்துகொடுக்கும் மூளையற்ற பணியாட்களாக இந்தியர்களை ஆக்க வேண்டும் என்பதே மோடி முன்னெடுக்கும் மேக் இன் இந்தியாவின் பொருள். நம்மை மூளையற்ற முட்டாள்களாக்கவே மதம் என்னும் போதையை ‘அறிவியல்’ என்ற போர்வையில் மோடி பக்தர்கள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பகுத்தறிவு பகலவன் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்!

2 thoughts on “சங்கு ஊதினால் நோய் குணமாகும்;சிவனே சூழலியல் முன்னோடி: இந்திய அறிவியல் மாநாடா? இந்திய ஆன்மீக மாநாடா?

  1. சங்கு முழங்க சபைகள் கூடியதால் சங்கம் ஆனது. பேரொலி எழுப்பும் அலைக் கடல்களும் ஆறுகளும் இணைவது சங்கமம் ஆனது.காற்றை உள்வாங்கி நாதத்தை வெளிப்படுத்தி சுயமாக உருவான முதல் இசைக் கருவி சங்கு.இசைக்கு நோய் தீர்க்கும் வலிமை உண்டு என்று ஆய்வுகள் கூறுவது உண்மையென்றால் அதில் சங்கு மட்டுமே முதலிடம் பெற தகுதிபெற்றது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.