எழுத்தாளர் ம வே சிவக்குமார் இன்று காலை 3 மணிக்கு இறந்த செய்தி காலை நேரத்தை மிகவும் இறுக்கமாக்கிவிட்டது அவரது நாயகன் சிறுகதை தொகுப்பால் உந்தப்பட்டு செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு கடிதம் எழுதி நேரில் சென்று சந்தித்த முதல் எழுத்தாளன். இரவு வீட்டிலேயே தங்க வைத்து விடிய விடிய கதைகள் பேசி என் எழுத்துலக வாழ்க்கைக்கு தூண்டுகோலாய் இருந்தவர் அவரது கிண்டலும் கேலியுமான் எம் ஆர் ராதா போல குரலை அடிக்கடி மாற்றிபேசும் கேலிப்பேச்சால் வசீகரிக்கப்பட்டு மறுநாள் முழுக்க அவரைபோலவே பேசித்திரிந்தேன் இரண்டு வருடங்களுக்கு முன் அவரது புத்தக வெளியீட்டிற்கு என்னை சிறப்பு விருந்தினராய் அழைத்து அனைவர் முன் கர்வத்துடன் எங்களது முதல் சந்திப்பின் போது நடந்த நிகழ்வுகளை கூறி அறிமுகப்படுத்தினார் . அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ..
கே. என். சிவராமன்
கண்ணைக் கட்டியது போல் இருக்கிறது. எழுத்தாளர் ம.வே.சிவக்குமார் இன்று காலை 3 மணிக்கு காலமாகிவிட்டாராம். நண்பர் அஜயன்பாலா பதித்த நிலைத்தகவலை வாசித்ததில் இருந்து ஒருவகையான தவிப்பு சூழ்கிறது. கமல் நடிப்பில் பரதன் இயக்கிய ‘தேவர் மகன்‘ படத்துக்கு வசனம் எழுதியது தான்தான் என்றும் ஆனால், தனது பெயரை கமல் இருட்டடிப்பு செய்து விட்டார் என்றும் அவர் குமுறி அழுத காட்சிதான் கண்முன் இப்போது வருகிறது. ‘தேவர் மகன்‘ அனுபவம் குறித்து ஒரு தொடர் எழுத விரும்பினார். பல பத்திரிகைகளிலும் தொடர்பு கொண்டார். இறுதியில் வெகுஜன எழுத்தாளர்களை அரவணைப்பதற்காகவே பிறவி எடுத்திருக்கும் அண்ணன் அசோகன்தான் அதை வெளியிட்டார்.
சந்திக்கும்போதெல்லாம் ‘உன் கண் முன்னாடி ஒரு படத்தை இயக்கி நான் யாருன்னு காட்டறேன் பார்…‘ என கமலிடம் சவால் விட்ட தருணத்தை உணர்ச்சியுடன் நடித்துக் காட்டுவார். கூடவே படத்துக்காக, தான் எழுதியிருக்கும் கதையை காட்சிகளுடன் விவரிப்பார். தயாரிப்பாளர்களை சந்தித்தது / சந்தித்து வருவது குறித்தும் சிகரெட்டை ஊதியபடி சொல்வார்.
நக்கல் அதிகம். நையாண்டியும்தான். 1970களின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த பலரிடமும் இந்த குணங்களை பார்த்திருக்கிறேன். இந்தி எதிர்ப்பு / நக்சல்பாரி எழுச்சி / எமர்ஜென்சி காலகட்டம் ஆகியவற்றை தங்கள் இளம் பருவத்தில் சந்தித்தவர்கள் என்பதால் ஒருவகையான அலட்சியம் அவர்களிடம் தென்படும். அதே நேரம் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். துரோகத்தை தாங்க முடியாதவர்கள்.
சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியத்துக்கும் / வெகுஜன எழுத்துக்கும் இடையில் பாலமாக திகழ்ந்தவர்களில் ம.வே.சிவக்குமாரும் ஒருவர். அபாரமான நடை. நேரில் எப்படி இருப்பாரோ அப்படித்தான் எழுத்தும்.
அவரது முக்கிய நாவலான ‘வேடந்தாங்கலை்‘ 1980களில் படமாக எடுக்க பலரும் முயன்றிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் வகையில் ‘நாயகன்‘ இருக்கும்.
குறிப்பிடத்தகுந்த பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஆனால், கவனிக்கப்படாமல் அல்லது புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர்களில் அவரும் ஒருவராக இருந்ததற்கு தமிழ் சூழல் எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறதோ தெரியவில்லை. எடுத்தெறிந்து பேசும் அவரது குணமே மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டதோ? இருக்கலாம். ஆனால், எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களை திட்டுகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களை நேசிக்கவும் செய்வார்.
‘குமுதம்‘ வார இதழில் பணிபுரிந்த போது பா.ராகவன் வழியாக பழக்கமானார். அப்போது ம.செ., ஓவியத்துடன் ‘சோழன் காதலி‘ என்ற ஆறு வார சரித்திர குறுந்தொடரை ‘ரவிவர்மா‘ என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். அதன் முதல் அத்தியாயம் இர்விங் வேலஸ் எழுதிய ‘Second Lady’ நாவலின் மையம்தான். ஆனால், தொடரும் போடுவதற்கு முன்பே இளவரசியை அகற்றிவிட்டு அவரைப் போலவே தோற்றம் உடைய வேறொரு பெண்ணை அந்த இடத்தில் எதிரி நாட்டவர் அமர்த்தும் செயலை ஆதித்த சோழன் பார்த்து விடுவான் என முடித்திருந்தேன்.
பா.ரா.,வின் கேபினில் அத்தியாயத்தை படித்தவர் பக்கத்து கேபினில் இருந்த என்னை அழைத்தார். ‘நீ நேர்மையான திருடன். ஈயடிச்சான் காப்பி அடிக்கலை. இன்ஸ்பையர் ஆகியிருக்க. அதை வெளிப்படையாவும் ஒத்துக்கற. உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. i am ma.ve.sivakumar‘ என கைகொடுத்தார். அன்று ஆரம்பித்த பழக்கம். அதன் பிறகு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என தவறாமல் அவரிடமிருந்து வாழ்த்து SMS வரும்.
அவ்வப்போது சந்திப்போம். எழுத்து, சினிமா கனவு இந்த இரண்டையும் தவிர்த்து வேறு எதைக் குறித்தும் பேச மாட்டார்.கூடவே எழுத்தாளர்களை சுரண்டும் சமூகம் குறித்தும் தன் சீற்றத்தை வெளிப்படுத்துவார்…
தறிகெட்டு ஓடும் நினைவுகளை அடக்கி ஒழுங்குப்படுத்த முடியவில்லை. இந்த நிலைத்தகவலில் என்ன எழுதியிருக்கிறேன் என்றும் தெரியவில்லை…ஆழ்ந்த இரங்கல். ‘தேவர் மகன்‘ படத்தை நிச்சயம் இன்றிரவு பார்க்கிறேன்…
பால்நிலவன்
ம.வே.சிவக்குமார் மறைந்தார்
வேடந்தாங்கல், நாயகன் கதைத்தொகுப்புகளின் வழியே நகைச்சுவை இழையோடிய சிறந்த நடையம்சம் மிக்க கதைகளை எழுதிய அற்புத எழுத்தாளன். வாழும்போது தன் இருப்பைக் குறித்து தனது கவலைகளை பகிரங்கப்படுத்திய நம் காலத்திய இந்த எழுத்தாளனுக்கு நாம் செய்த மரியாதை என்ன?
சிவக்குமார் உங்கள் எழுத்துக்களை முதலில், உங்களை தூரத்திலிருந்து பின்னர், உங்களை வெகுஅருகில் ஒவ்வொருநாளும் உரையாடும் வாய்ப்போடு இருந்தும் தங்கள் அரிய முக்கியத்துவத்தைப் பற்றி சிறிய அளவிலாவது பேசத் தவறிய என்னை மன்னியுங்கள். தங்கள் உயிர் இந்த உலகத்தைவிட்டு இனிதே பிரிந்துசெல்லட்டும்.
எழுத்தாளர் ம.வே.சிவ குமார் இன்று அமரரானார். அவரது ‘கடைச் சங்கம்’ குறுநாவல் படித்து, சிரித்தும் மகிழ்ந்தும் வியந்தும் போய் அவரை, தொடர்ந்து வாசித்திருக்கிறேன். கொஞ்சம் குறும்புக்காரரும் கூட. ஒரு சிவகுமார் இப்போது இல்லையென்பது கவலையாக இருக்கிறது.