ராஜா vs ரஹ்மான்: ரஹ்மானைக் கொண்டாடும் ஒருவர் ஏன் இளையராஜாவை அவமதிக்கிறார்?

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மாக்ஸ்
கார்ல் மார்க்ஸ்

ரஹ்மானின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நிறையப் பதிவுகளை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. முத்தாய்ப்பாக ”என்னை விமர்சிப்பவர்களைத் திட்டாதீர்கள்” என்ற ரஹ்மானின் கோரிக்கையையும். அவரை விமர்சித்தது விஜய் ரசிகர்களாகவோ, அஜித் ரசிகர்களாகவோ இருக்க முடியாது. வேறு யார்? அவர்கள் இளையராஜா ரசிகர்கள். ஏன் விமர்சிக்கிறார்கள்? ரஹ்மானை வாழ்த்திய சிலர், இளையராஜாவை சீண்டி விட்டார்கள். பொறுக்க முடியுமா ராஜா ரசிகர்களால்? பொங்கிவிட்டார்கள்.

”நல்ல இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல், நல்ல மனிதராகவும் இருக்கும் ரஹ்மானுக்கு வாழ்த்துகள்” என்ற ஒரு வாழ்த்தையும் பார்த்தேன். இந்தத் தர்க்கம் எனக்குப் பிடிபடவே இல்லை.

உலகமெங்கும் சிறந்த இசையை வழங்குபவன் நல்ல இசையமைப்பாளன். இங்கே அவன் கூடுதலாக, நல்லவனாகவும் இருக்க வேண்டும். இந்த எதிர்பார்ப்பிற்குப் பின்னால் ஒரு பிரத்யேக மனநிலை இருக்கிறது. அது அடிப்படையான இசைத்தன்மைக்கு எதிரானது என்பது தான் விஷயம்.

இதைப்புரிந்து கொள்ள வேண்டுமானால், இசை என்பது என்ன, அது நமக்குள் நிகழ்த்தும் ரசவாதம் என்ன, அது நம்மிடம் கோருவது என்ன என்ற புரிதலுக்குள் நாம் நுழையவேண்டும்.

இசையின் ஆதார உச்சம் அது நம்மிடம் நிகழ்த்தும் விடுதலையுணர்வு. கொண்டாட்டம். அந்தக் களிப்பின் மூலம் அது பெருகச் செய்யும் அன்பு. தன்னைத் திறந்துகொள்ளச் செய்வதன் மூலம், சக உயிரைத் தழுவிக்கொள்ளும் முனைப்பை உருவாக்குவது. அற்ப சந்தோஷங்களைக் கடந்து, கட்டற்ற அன்பின் சாத்தியங்களை உருவாக்கிக் கையளிப்பது. அதிகாரத்தின் சுவையில் திளைக்கும் மானுட மனதின் கீழ்மையை, தனது இன்பத்தின் மூலம் பதிலீடு செய்து ஆற்றுப்படுத்துவது.

இது வெறும் புற அதிகாரம் மாத்திரம் அல்ல. நாம் மனதினுள் எப்போதும் உருவாக்கி நிறுத்துகிற அக அதிகாரத்தையும் இல்லாமலாக்குவதுதான். முக்கியமாகத் தன்முனைப்பு.

இப்போது விஷயத்துக்கு வருவோம். ரஹ்மானைக் கொண்டாடும் ஒருவர் ஏன் இளையராஜாவை அவமதிக்க முயல்கிறார்? அல்லது ரஹ்மான் கொண்டாடப்படுவதை, ஒரு ராஜா ரசிகரால் ஏன் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை? இதற்குப் பின்னால் இருப்பது ஒரு அடிமை மனோபாவம். இசையின் கொண்டாட்டத்தில் தன்னைக் கரைத்துக்கொள்ளாத  அற்ப மனம்.

”அன்னக்கிளியில்” இளையராஜா வெளிப்படுத்திய கொண்டாட்ட உணர்வுக்கு தன்னை ஒப்புக்கொடுத்த ஒருவனால், ”ரோஜாவில்” ரஹ்மான் வெளிப்படுத்திய, மானுட அன்பையும் புரிந்துகொள்ள முடியும். பிறகு என்ன அபத்தம் நிகழ்கிறது இங்கே?

இசை எதைச் செய்ய வேண்டுமோ அதை நம்மில் செய்யவில்லை. அல்லது நாம் அதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கவில்லை. ஆம். இசையில் ஒப்பீடு என்பதே முதலில் கிடையாது. நமது இதயத்தைக் கசியச் செய்யும் எந்த இசையும் ஒப்பீட்டைக் கோராது. நாம் ஒப்பிடுகிறபோது இசையின் கொண்டாட்டத்தைக் கைவிடுகிறோம். மட்டுமல்லாமல், இசையமைப்பாளனைக் கடவுளாக்குகிற போது, நாம் கட்டமைப்பது ஒரு அதிகாரத்தை. அது நம்மை மண்டியிடத் தூண்டுகிறது. அந்த மண்டியிடலில் இழக்கும் அதிகாரத்தின் சுவையை, இன்னொரு இசையமைப்பாளனை நிந்திப்பதன் மூலம் சமன் செய்கிறோம். ஆக, இங்கு நிகழ்வது இசைக்கு எதிரான ஒரு செயல்பாடு.

இந்த அற்பக் கூக்குரல், அவர்களையும் எட்டுகிறது என்பது தான் துயரம். இளையராஜா தன்னை ஞானி என்றே நினைத்துக்கொள்கிறார். உண்மையில் அதுவொரு சுமை. ”அறிவிருக்கா” என்ற ஒரு எதிர்வினையின் மூலம் அவர் அந்தச் சுமையை உதறுகிறார். நம்மைப் போல தத்தளிப்புகளுள்ள ஒருவனாலும், உச்ச இசையைப் படைக்க முடியும் என்று நேர்மறையாகப் புரிந்துகொண்டு, அவரைத் தழுவிக்கொள்வதற்கு மாறாக, தவித்துப் போகிறார்கள் ராஜா ரசிகர்கள். ஏனெனில் அவர்கள் இசையைக் கொண்டாடுவதை விடுத்து, அதைத் தொழுகிறார்கள். தொழுகை என்று வருகிறபோது அதற்கு ஒரு புனித பிம்பம் தேவைப்படுகிறது. தன்னை ஞானியாக்கி முன்வைப்பதன் மூலம் இளையராஜாவும் அவர்களை திருப்திப் படுத்துகிறார்.

இதே பிம்பத்தைத் தான் ரஹ்மான் ரசிகர்கள் ‘அவர் நல்லவர்’’ என்ற சொல்லாடல் மூலம் உருவாக்குகிறார்கள். அவரது மதப்பற்றின், மனித நேயத்தின் மாண்பில் நெகிழ்கிறார்கள்.

ஒரு இசையை ரசிப்பதற்கு இந்த புறக்காரணிகள் எதற்குத் தேவையாக இருக்கின்றன? ஏனெனில் நாம் ரசிப்பது இசையையோ, அதன் கொண்டாட்டதையோ, அது உருவாக்கும் மானுட அன்பையோ அல்ல. இந்தப் புனிதக் கட்டமைப்பை. ரஹ்மான் நல்லவராக இருப்பதால் தான், நல்ல இசையை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்; அல்லது நல்லவர்கள் உருவாக்குவது தான் நல்ல இசை என்று நினைக்கிறோம். அவர்களும் இந்த பிம்பம் சிதையாமல் இருக்கத் தொடர்ந்து முயல்கிறார்கள்.

எதார்த்தத்தில் இசை, இந்த அற்ப வேறுபாடுகளைக் கடந்தது. கேட்பவனைப் போல அதை உருவாக்குபவனும் ஹிந்துவாக, முஸ்லிமாக, கிறிஸ்தவனாக, குடிப்பவனாக, ஓரினச் சேர்க்கையாளனாக எப்படி வேண்டுமானாலும் இருக்க முடியும்.

அது விடுதலையுணர்வைத் தருகிறதா என்பதே முக்கியம். ஆக, இளையராஜாவா, ரஹ்மானா என்ற விவாதத்தில் இசைக்கும், அது தரும் உணர்வுக்கும் இடமே இல்லை. இருக்கவும் முடியாது.

ரஹ்மானின் வரவு, தமிழ்ச் சூழலில் ஒரு புதிய அலை. இதை ஒத்துக்கொள்வதில் என்ன தயக்கம்? அவரைத் தாண்டியும் அது போகவேச் செய்யும். இசையுலகத்தை ராஜாவுடன் மட்டுமே சுருக்கிப்பார்க்க விரும்புபவர்கள்தான் ரஹ்மானை வெறுக்க முடியும். ரஹ்மான் ஏதோ ராஜ்ஜியத்தை கைப்பற்றிவிட்டதாக நினைப்பவர்களால் மட்டுமே ராஜாவை நிந்திக்க முடியும்.

இசை என்பதே இந்த மன நிலைக்கு எதிரானது. இசை ரசனையில் தேர்வுகள் இருக்க முடியும். வெறுப்பின் சாயல் இருக்கவே முடியாது.

கார்ல் மார்க்ஸ், அரசியல்-சமூக விமர்சகர்.

 

5 thoughts on “ராஜா vs ரஹ்மான்: ரஹ்மானைக் கொண்டாடும் ஒருவர் ஏன் இளையராஜாவை அவமதிக்கிறார்?

  1. Rahman ku vyaabaram mukkiyam. Raja ku vera baaram mukkiyam. Manadhil kuppai irundhal.. isai varaadhu. Iruvarum maaa medhaigal. Avargal velai ai sarigaaa seigiraargal. Naanum rasithu nam velai mattum seivom. Kuppai ku solvom good bye

    Like

  2. ரோஜா படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து ஆனந்த விகடனில் இளையராஜாவின் பேட்டி. அதில் ரஹ்மானின் இசையைப்பற்றிய கேள்விக்கு ஞானியின் பதில் இதோ. “ஒரு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது ஒரு சினிமா நடிகர் உள்ளே வருகிறார் உடனே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அந்த நடிகரின் பக்கம் திரும்புகிறது. ஆனால் அது சிறிது நேரம் தான் நீடிக்கும். பார்வையாளர்களின் கவனம் மறுபடியும் கிரிக்கெட் போட்டியின் மீது திரும்பும். அதுபோலத்தான் இதுவும்.” யார் நடிகன் என்று காலம் பதில் சொல்லி விட்டது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.