ஜல்லிக்கட்டு: முக்குலத்தோரின் வீர விளையாட்டா?

ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்

ஜல்லிக்கட்டு பற்றி பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. அவற்றிலொன்று அதில் வெளிப்படும் சாதியம். இதைக் கவனப்படுத்திய தொடக்க நிலைப் பதிவுகளில் ஒன்றாக நான் ஜனவரி 2008 தீராநதி இதழில் எழுதிய “ஜல்லிக்கட்டு : புலப்படாத உண்மை” என்ற கட்டுரையும் அடங்கும். இப்படியொன்று இருப்பதே இப்போதுதான் தெரியுமென்று பலரும் பேசினார்கள். அடுத்த மாத இதழில் பரவலான வாசகர் கடிதங்களும் வந்திருந்தன. இக்கட்டுரை என்னுடைய சாதியம்:கைககூடாத நீதி நூலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. (காலச்சுவடு வெளியீடு டிசம்பர் 2011)ஆதரவு எதிர்ப்பு என்கிற முடிபுகளுக்குச் செல்லாமல் ஜல்லிக்கட்டைப் பற்றி விவாதிக்கும் போது இவற்றைக் கணக்கிலெடுக்க வேண்டும் என்ற நோக்கில் அக்கட்டுரை எழுதப்பட்டது. இப்போது எழுதியிருந்தால் இதிலிருக்கும் வேறு விசயங்களையும் பண்பாட்டு நோக்கில் எழுதியிருக்கலாம். நேரம் வாய்க்கும்போது எழுதலாம் என்ற நிலையில் முந்தைய கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன்.

ஜல்லிக்கட்டு: புலப்படாத உண்மை
—————————————————
(ஜனவரி 2008 தீராநதி)

இரு வாரங்களுக்கு முன் ஜல்லிக்கட்டு விழாவைத் தடைசெய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான பின்பு தமிழகத்தில் உணர்ச்சிமயமான சூழல் உருவாகின. அலங்காநல்லூர் போன்று ஜல்லிக் கட்டுக்குப் பேர்போன ஊர்களின் கிராம மக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ச்சியான எதிர்ப்பில் இறங்கினர். பாரம்பரியமான விழாவைத் தடைசெய்வதன் மூலம் தமிழ்ப்பண்பாட்டையே இல்லாமல் ஆக்குகின்றனர் என்று பாரம்பரியம், மரபு, பண்பாடு போன்ற உணர்ச்சிகரமான உபகரணங்களோடு இப்பிரச்சினையை இணைத்துப் பேசியதால் கொதிப்பு நிலை மேலும் கூடிப்போனது. பெரும்பான்மை மக்களின் மனோபாவம் உணர்ச்சிமய சூழலோடு ஒத்திசைந்து போவதால் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டு இத் தடையை எதிர்த்தன. மக்களுடைய ‘நம்பிக்கை’க்கு இணங்கிய தமிழக அரசு இத்தீர்ப்பு குறித்த பரிசீலனை மனுவை உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இறுதியாக சில நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு விழாவை நடத்தலாம் என்று நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்த மகிழ்ச்சி மாடுவிட்டுகொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இறந்த ஒருவரின் தந்தையார் செய்த முறையீட்டின் பேரில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுவிடுமோ என்ற பேச்சு கடந்த இரண்டாண்டுகளாகவே எழுந்தவண்ணமிருந்தன. இதனால் ஜல்லிக்கட்டு விழாவிற்கான நாள் நெருங்கும்போதெல்லாம் அதற்கு ஆதரவான போராட்டங்களும் குரல்களும் முனைப்பாக வெளிப்படும்.

ஜல்லிக்கட்டுத் தடையை ஆதரிப்போர் பிராணி வதை தடுப்பு, மாடு முட்டி மனிதர்கள் இறந்து போவதைத் தடுத்தல் போன்ற நடைமுறை காரணங்களின் அடிப்படையிலேயே தடையை ஆதரித்தனர். தடையை எதிர்ப்போர் பண்பாடு, மரபு போன்ற சொற்களைக் கையாண்டனர் என்றால் ஆதரிப்போர் ஜீவகாருண்யம் மற்றும் அதனோடு தொடர்புடைய சொற்களைப் பயன்படுத்தினர். கிரிக்கெட் போன்ற மேலை நாட்டு விளையாட்டு அதனூடாகப் பரப்பப்படும் கோக், பெப்ஸி உள்ளிட்ட பொருட்களுக்கான விளம்பரங்கள் திணிக்கப்படுவதை ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் தடுத்து நிறுத்துகின்றன என்று ஒரு புறமும் உயிர்களை வதைக்காதிருத்தல், அதனூடாகப் பேணப்படும் அகிம்சை என்று மறுபுறமும் காந்தியின் சுதேசியம் சார்ந்த கருத்துகள் இருதரப்பிலுமே கையாளப்பட்டுள்ளன. இதையெல்லாம் கடந்து இந்துக்களின் நம்பிக்கையான ராமர் பாலத்தை ஏற்காத திமுக தலைமையிலான தமிழக அரசு ஜல்லிக்கட்டு எனும் நம்பிக்கையை ஏற்றது எப்படி என்றும் அரசியல்ரீதியான கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. திமுக அரசின் சாதனையாக மாறிவிடும் என்பதால் ராமர்பால பாதுகாப்பின் பேரில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் அதிமுககூட பெரும்பான்மை மக்களின் உணர்வுக்குப் பணிந்து இது பற்றி கருத்து ஏதும் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஜல்லிக்கட்டு விழா மாடுவிடுதல், எருது விடுதல், மஞ்சு விரட்டு போன்ற பல்வேறு பெயர்களில் தமிழகத்தின் தொண்ணூறு சதவீத கிராமங்களில் நடத்தப்படுகின்றன. சில பகுதிகளில் மாட்டுப் பொங்கலன்றே நடத்தப்படும் இவ்விழா பல பகுதிகளில் காணும் பொங்கலன்றும் தை மாதத்தின் வேறு நாட்களிலும் நடக்கின்றன. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு கிராமத்தாரும் ஒரே இடத்தில் கூடி பார்க்கும்படியான வகையில் வெகு விமர்சையாக இவ்விழாக்கள் நிகழ்த்தப்படுகின்றன. மாடு பிடிப்பதால் பலருக்குக் காயங்களும் மரணமும் நேர்கின்றதென்றாலும், இதை வீரம் சார்ந்த விளையாட்டாகவே அடையாளப்படுத்த விரும்புகிறது நம் சமூகம். இவ்விழாக்களை ஒட்டி விழா நடத்தும் ஊரார் மாடு வளர்த்தவர், மாடு பிடி வீரர் என்றும் சமூக மரியாதை வழங்கப்படுவதும் வருடந்தோறும் அம்மரியாதைப் புதுப்பிக்கப்படுவதும் மேலெழுகின்றன.

ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் காண மறுக்கும் வேறு சில முக்கிய அம்சங்களும் இதிலுள்ளன. அதாவது இவ்விழாவை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் சாதி சார்ந்த மரியாதைகளும் அம்மரியாதையோடு சேர்த்து அடையாளப்படுத்தப்படும் வீரமும் ஆதிக்க சாதியினர் சார்பானதாகவே இருப்பதுதான் அது சாதியை அடிப்படையாகக் கொண்டியங்கும் நம் சமூகத்தில், அதிலும் கிராமங்களில் அப்பாகுபாட்டின் நீட்சி ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களிலும் இருப்பதை யாரும் கவனிப்பதில்லை. முதலில் ஜல்லிக்கட்டில் எல்லாச் சமூகத்தவரின் மாடுகளும் கலந்துகொள்ள முடியாது. ஊரின் பொதுமந்தை, பொதுக்கோவில், திருவிழா என்பவை ஆதிக்க சாதியினருக்கானதே. இவை சார்ந்த விழாக்களில் ஊரோடு தலித் மக்கள் சமமாக கலந்துகொள்ள முடியாது. கோயில் திருவிழா போன்ற சூழல்களில் பறையடித்தல், பந்தல் போடுதல், சுகாதாரப் பணிகளைச் செய்தல் என்றெல்லாம் நிர்ப்பந்திக்கப்படும் இம்மக்கள் வேண்டுமானால் பார்வையாளர்களாக இருக்க முடியும். பார்வையாளர்களாக அவர்கள் எங்கே நிற்க வேண்டும் என்பதற்கு வரையறைகளும் உள்ளன. இந்நிலையில் அனைத்து மக்களுக்குமான பொதுவான விழா என்ற அமைப்பே இங்கில்லை. அந்த வகையில் ஜல்லிக்கட்டும் ஊரின் ஆதிக்க வகுப்பினருக்கே உரியதாக இருந்து வருகிறது. மக்களின் உணர்வு, பண்பாடு என்ற சொல்லப்படுவதெல்லாம் பெரும்பான்மைச் சாதிசார்ந்ததே ஆகும். இதனாலேயே அரசும் அரசியல் கட்சிகளும் இதற்காகக் காவடி எடுக்கின்றன.

பல்வேறு கிராமங்களிலும் ஊர் வேறு, சேரி வேறு என்றுதான் விழாக்கள் நடந்து வருகின்றன. ஜல்லிக்கட்டும் அப்படித்தான். ஊரார் நடத்தும் ஜல்லிக்கட்டைப் போல தலித் மக்களும் தம் குடியிருப்புப் பகுதிகளில் தனியாக மாடுவிட்டுக்கொள்கின்றனர். இதுவே யதார்த்தமாக உள்ளது. இன்றைக்கு அரசு அறிவித்துள்ள சமத்துவப் பொங்கல் விழா சமத்துவமற்ற போக்கை ஏற்றுக்கொண்டு அதை மாற்றியமைக்கும் முகமாக செயல்படுத்தப்படுகின்றன. வரவேற்கத்தக்க இந்த அறிவிப்புகூட அரசுசார்ந்த சடங்காக மட்டுமே நடக்கின்றது. கோயில், ஊராட்சிமன்றக் கட்டிடங்கள், பொது மந்தை போன்ற இடங்களில் ஊராட்சி உறுப்பினர்களால் நடத்தப்படும் இவ்விழா சேரியிலோ அனைத்து மக்களின் பங்கேற்பிலோ நடப்பதில்லை. இது அரசும் கட்சிகளும் அறியாத விஷயமுமல்ல.

ஜல்லிக்கட்டின்போது வழங்கப்படும் முதல்மரியாதை போன்ற அம்சங்கள் சாதி சார்ந்தவையாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மாட்டை அழைத்துச் செல்லத் தொடங்குவது முதல் வெறியூட்டி விரட்டுவது வரை தலித்தொருவர் மேளம் அடிக்க வேண்டும். சாமி கைங்கரியமான அதற்கு கூலியும் பெற முடியாது. கிராமக் கோயில்களில் மாட்டின் கொம்பில் புதுவேட்டி கட்டி விரட்டும்போது கொட்டு அடிக்க வேண்டும். இதற்கு மறுப்பு எழுந்தால் வன்முறை கட்டவிழ்த்து விடப்படும். மாடு விடப்படும் விழா நடை பெறும் ஒவ்வொரு கிராமத்திலும் இந்நடைமுறை வழக்கில் உள்ளது. இப்பாகுபாட்டிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

ஆனால் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நிலைமை பிற பகுதிகளின் நிலைமைக்குச் சற்றே வேறுபட்டது. தீர்க்கமான சாதிக்கோடுகளால் பிரிக்கப்படாத இவ்வூர் விழாக்களில் மாடுபிடி வீரர்களாகவும் மாட்டுக்குச் சொந்தக்காரர்களாகவும் தலித் மக்கள் இருப்பதுண்டு. இந்து அறநிலையத் துறை சுற்றுலாத் துறை மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடத்தும் இவ்விழாவில் வாடிவாசலுக்கு எதிரிலுள்ள காளியம்மன் கோயிலில் ஆசாரி சமூகத்தினர்தாம் பூசாரி. முதல் மாடு விடுவதற்கு முன் விபூதி போடும் முனியாண்டி கோயிலின் பூசாரி பறையர் சமூகத்தவர். இவ்விரண்டு கோயிலின் பூஜைக்குப் பிறகே ஜல்லிக்கட்டு தொடங்கும். ஆனால் இக்கோயில்சார்ந்த நாட்டாமையாக நாயக்கர் மற்றும் தேவர் உள்ளிட்ட சமூகத்தினர்தாம் உள்ளனர். பாரம்பரியமாக இருந்துவந்த மரபின் தொடர்ச்சி காரணமாகப் பூசாரிகளாக உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான இந்த உரிமையைக்கொண்டு சமத்துவமான நிலைமை நிலவுவதாகக் கருதமுடியாது. கோயில் எனும் வெளிக்கு புறத்தே இப்பூசாரிகள் ஒடுக்கப்பட்ட சாதியினர்தாம்.

இப்பகுதி ஜல்லிக்கட்டு விழாக்களின்போது வேறுவகையான சமூக வன்முறைகள் நடந்துவருகின்றன. அதாவது இவ்விழாக்களை ஒட்டிய ஆதிக்க சாதியினரின் களிப்பு ஒடுக்கப்பட்ட மக்கள்மீதான வன்முறையாக உருமாறிவிடுகின்றன. இவ்வாறு பல சம்பவங்களைச் சொல்லமுடியும். 1983ஆம் ஆண்டு சனவரி 17ஆம் நாள் பாலமேடு மாணிக்கப்பட்டியைச் சேர்ந்த காட்டுராஜா என்பவர் கொல்லப்பட்டார். இந்நாளில் அங்கு ஜல்லிக்கட்டு நடந்தது. இப்படுகொலைக்கு எதிராக பாரதிய தலித் பேந்தர் அமைப்பு, அம்பேத்கர் மக்கள் இயக்கம் போன்றவை எதிர்ப்பு பேரணி நடத்தின.

இதேபோல 1994 சனவரி 17 பொங்கல் நாளில் அம்பேத்கர் பாடல் ஒலிபரப்பியதை ஒட்டி அலங்காநல்லூர் பகுதியின் எர்ரம்பட்டி சேரி சூறையாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2001இல் சோலைமலை என்பவர் கொல்லப்பட்டார். கடந்த 2007 சனவரி 17ஆம் நாள் மேலூர் தெற்கு தெருவை அடுத்துள்ள கத்தம்பட்டியில் பொங்கலை ஒட்டி நடந்த கிரிக்கெட் விளையாட்டில் தொடங்கிய தாக்குதலால் அந்த ஊரின் சேரி சிதைக்கப்பட்டது. தாக்குதலில் கத்தம்பட்டி மலைச்சாமி என்பவர் 19.01.2007இல் மரணமடைந்தார். இந்த ஊரில் கோயிலில் நுழைய முயன்ற தலித் மக்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டின் தைப்பொங்கல் தொடங்கி பங்குனி வரையிலும் திருவிழா நடைபெறும் காலங்களில் இங்கு கடும் பதட்டம் நிலவி வருகிறது. கோயில் நுழைவு போன்று ஏதேனும் நடந்து ‘அசம்பாவிதம்’ ஏற்பட்டுவிடாமல் தடுக்க காவல் துறை பாதுகாப்பு இருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக இதே நிலை தொடர்கிறது. இதேபோன்று பல்வேறு தாக்குதல்களைத் தமிழகமெங்கும் நாம் தொகுக்க முடியும் சாதி சமன்பாடுகளைக் குலைக்காத வகையிலேயே எந்த விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. மரபுரீதியான பண்டிகைகளும் விழாக்களும் சமூகத்தில் கட்டுணர்வை உருவாக்கவும் புதுப்பிக்கவும் நடத்தப்படுகின்றன. ஆனால் நம் சூழலில் சமூகம் என்பதே சாதியைச் சுட்டுவதாக மட்டும் இருக்கும் நிலையில் சாதிக் குழுவொன்றின் கூட்டுணர்வையே இவ்விழாக்கள் புதுப்பிக்கின்றன. மதம் சார்ந்த விழாக்கள் மட்டுமல்லாமல் மதம் கடந்ததாகச் சொல்லப்படும் நம் தமிழின (?) விழாக்களிலும் சாதி தான் உள்ளீடாக இருக்கின்றன என்றால், சாதி கடந்த விழா என்ற அம்சம் புலப்படுவது எப்போது?

jallikattu
படம்: ஸ்டாலின் தி

முக்குலத்தோரின் வீர விளையாட்டு? இது உண்மை தான். ஆனால் இதுவே முழு உண்மை என்றும் கூறமுடியாது.எல்லாவற்றையும் தங்களுடையதாக்கும் பெரும்பான்மை சாதியின் போக்காகவும் இதைப் பார்க்கலாம்.அடிப்படையில் ஜல்லிகட்டு வட்டாரம் சார்ந்தது.அதை பொதுமைப் படுத்தி பார்ப்பதை காட்டிலும் பகுதிகளுக்கேற்ப செயல்படுவதை குறிப்பாக பார்க்கலாம்.அந்த வகையில் சிலபகுதிகளில் முக்குலத்தோர் ஆதிக்கத்தில் இருக்கும் மாடுபிடி விழா வேறுபகுதிகளில் அவர்களின் செல்வாக்கில் இல்லாமலும் இருக்கிறது.அலங்காநல்லூர்,பாலமேடு போன்ற ஊர்களில் இவர்களின் விழா என்று கூறமுடியாது.இன்னும் சொல்லபோனால் வெவ்வேறு சாதி மாடு பிடி வீரர்களும் கூட இருக்கிறார்கள்.மதுரை சிவகங்கை வட்டாரத்தில் உள்ளடங்கிய உள்ளூர்களில் நடக்கும் விழாக்களில் நிலவும் பாகுபாடுகள் பற்றி யாரும் பேசுவதில்லை.


அதேவேளையில் ஒற்றை சாதிக்குறியதாக்க முடியாது என்ற இந்த வேறுபாடுகளையும் எடுத்து பேசவேண்டுமென்று நினைக்கிறேன்.பொதுவாக இதுபோன்ற விழாக்கள் பற்றி அரசியல்சக்திகளிடம் உள்ள முரண்களை எடுத்துச்சொல்வது ஒருபுறமிருந்தாலும் மோசமான சக்திகள் உரிமை கோருவதாலேயே அவர்களுடையதல்லாததை அவர்களுடையதாக ஆக்கி அவர்களின் மேலும் வலுவுடையதாக்குவதை தவிர்க்க வேண்டும்.இப்படி தானே பௌத்த கூறுகள் பலவற்றையும் தன்னுடையதாக்கிய வைதீகம் எல்லாமே தன்னுடையது போல் காட்டுவதை பார்க்கிறோம்.நவீன அரசியல் பகுத்தறிவு என்கிற பெயரிலே நாமும் எல்லாமும் வைதீகத்துடையது தான் போலும்,நாம் ஏதுமற்றவர்களே என்று எண்ணிகொண்டு இருந்துகொள்கிறோம்.சாதி பேதம் களைந்து நம்முடைய பண்பாட்டு அடையாளங்களை பேசவேண்டியிருக்கிறது.இவற்றை ஜல்லிகட்டுக்காக மட்டும் சொல்ல வில்லை.பண்பாட்டு நோக்கில் நிதானமும் எச்சரிக்கையும் தேவைப்படுவதாக உணருவதால் கூறுகிறேன்.

ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.