#MustRead புடவைதான் பர்தாவுக்கு அடுத்து உலகின் மிகக் கொடூரமான ஆடை!

வில்லவன் இராமதாஸ்

புத்தாண்டு யாருக்கு நன்றாக விடிகிறதோ இல்லையோ தமிழ்நாட்டு கடவுள்களுக்கும் அவர்தம் ஆகம விதிப்படியான முகவர்களுக்கும் கொழுத்த தட்சணையோடுதான் விடிகிறது. இந்த முறை தமிழக அரசு பகவானுக்கு ஒரு கூடுதல் புத்தாண்டு போனஸை அறிவித்திருக்கிறது. வெற்று மார்போடு பூசை செய்யும் அர்ச்சகர்களை சகித்துக்கொள்ளும் கடவுளுக்கு, துப்பட்டா இல்லாமல் வரும் பெண்களையும் ஜீன்ஸ் அணிவோரையும் சகித்துக்கொள்ளும் சக்தியில்லை என ஆகவிதிகளின் காவலனான நீதிமன்றம் கண்டறிந்து, அவற்றை கோயிலுக்குள் அணிய தடை செய்திருக்கிறது. எதிர்காலத்துக்கான பயிற்சியாக குழந்தைகளும் உடலை முழுமையாக மறைக்கும் ஆடையை அணிய உத்தரவாகியிருக்கிறது.

கோயில்கள் மற்ற எல்லா அம்சங்களிலும் நவீனமாகியிருக்கின்றன. நேரத்துக்கு மணியடிக்கும் கருவி தொடங்கி தேருக்கு ஹைட்ராலிக் பிரேக் சக்கரம் பொருத்துவதுவரை சகல நவீன வசதிகளையும் கோயில்கள் அனுபவிக்கின்றன. ஆனால் அவற்றுக்கு சாதாரண மக்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்க ஏதேனும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் உள்ளே வராதே என்றவர்கள் அது முடியாது என்றவுடன் குளிச்சிட்டு வா என எகத்தாளம் பேசினார்கள். இப்போது சுப்ரீம் கோர்ட்டே அவர்களுக்கு சாதகமாக இருப்பதால் நியாயப்படி சூத்திரனை உள்ளே விடாதே என்றுகூட உத்தரவு வாங்கிவிட இயலும். அப்படி வாங்கிவிட்டால் வெறுந்தட்டும் விபூதியியுமே விதியென்றாகிவிடும். அர்ச்சகன் கும்பி காய்ந்தால் ஆண்டவன் அநாதையாவானாகையால் அத்தகைய உத்தரவுகளை அவர்கள் வலியுறுத்துவதில்லை. ஆனாலும் இந்த மக்கள் கூட்டத்தை கொஞ்சம் தட்டி வைக்க அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு தோதாக மாட்டியிருப்பதுதான் ஆடைக் கட்டுப்பாடு.

//சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரிடமும் 7 நீல நிற ஜீன்ஸ் இருக்கிறது.//

முதலில் மக்களிடம் ஒரு ஆடை எப்படி சென்றடைகிறது என்பதை விவாதிக்கலாம். எல்லா புதிய ஆடை வடிவத்திற்கும் ஒரு அறிமுகம் தேவைப்படுகிறது. அவை சினிமா போன்ற ஊடகங்களால் சாத்தியமாகிறது. ஆனாலும் அதுமட்டுமே போதுமானதல்ல. எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களும் பல நடிகைகளும் பல விதமான ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். அப்படி அறிமுகம் ஆனதாலேயே அவை மக்களால் ஏற்கப்படவில்லை. அவர்கள் ஏற்க வேறுபல காரணிகள் தேவைப்படுகின்றன. அது அணிவதில் உள்ள சவுகர்யம், இன்னொன்று சாத்தியப்படும் விலை. ஷெர்வானி தமிழகத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான உடை. ஆனாலும் அவை சில திருமண மாப்பிள்ளைகளை தாண்டி யாராலும் பயன்படுத்தப்படுவதில்லை. காரணம் அணிவதில் உள்ள சவுகர்யா குறைபாடும் அதன் அதிகப்படியான விலையும்.

//ஒரு சுடிதார் தைப்பதற்கான தையற்கூலியில் சாதாரண ரகத்தில் ஒரு ஜீன்ஸ் அல்லது இரண்டு டி.சர்ட் வாங்கிவிட முடியும்//

இந்த தகுதிகள் இருப்பதால்தான் சுடிதார், ஜீன்ஸ், லெக்கிங்ஸ் ஆகியவை மிகக் குறுகிய காலத்தில் பரவலாகியிருக்கின்றன. எனது 13 ஆண்டுகால ஆடைத்துறை அனுபவத்தில் இருந்து சொல்வதானால் இந்த கலாச்சாரக் காவலர்கள் சொல்லும் புடவைதான் பர்தாவுக்கு அடுத்து உலகின் மிகக் கொடூரமான ஆடை. உத்தேசமாக வருடத்தில் பத்து மாதங்கள் வெயில் காயும் நம் மாநிலத்தில் புடவை மாதிரியான் அதிகப்படியான துணியும் பிளவுஸ் மாதிரியான இறுக்கமான ஆடையும் ஒரு வகையில் தண்டனை. அதிலும் பருத்தியினாலான புடவைகளை வாங்குவதும் பராமரிப்பதும் நடுத்தர குடும்பத்துக்கே பெரிய செலவு. துணிக்கடைகளில் பெருமளவு இருப்பில் இருப்பதும் விற்பனையாவதும் ஷிஃபான் சேலைகள்தான். இரண்டு ஆண்டுகள் ஷிஃபான் ஆடைகளை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வேலையில் இருந்திருக்கிறேன். அதில் ஒரு ஆடைகூட இறுக்கமான அளவுகளோடு இருந்ததில்லை. காரணம் அது உடலோடு ஒட்டியிருக்க தகுதியற்ற ஒரு துணி. இதைத்தான் கலாச்சாரம் எனும் பெயரில் இன்னும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நல்லகாலம் வெள்ளைக்காரன் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துவிட்டான். இல்லாவிட்டால் அதையும் கலாச்சாரத்தின் பெயரால் நாம் சட்டபூர்வமாக்கியிருப்போம்.

//ஒரு ஷிஃபான் புடவை உற்பதியாவைதைக் காட்டிலும் அதிக அளவிலான ஆட்கள் ஜீன்ஸ் பேண்ட் உற்பத்தியாவதால் வேலை பெறுவார்கள்.//

ஒரு புதிய வடிவிலான ஆடை கிண்டலடிக்கப்படலாம், அல்லது பொருத்தமற்றதாக இருப்பதாக விமர்சிக்கப்படலாம். ஆனால் அவை ஏன் மக்கள் சிலரை (பலரை) கோபப்படுத்த வேண்டும்?

இது சற்றே நீண்ட தொடர் காரணிகளை கொண்டது. இந்திய பாரம்பர்யம் பெண்களை அடுக்களைக்குள் திணித்தே ஆயிரம் ஆண்டுகளை கடந்திருக்கிறது. ஒரு பெண் ஒரு ஆணுக்கு சொந்தமான சொத்து எனும் நம்பிக்கைதான் அதன் அடிப்படை. அவள் வெளியில் செல்வது என்பது அந்த சொத்து காணாமல் போகவோ அல்லது திருடப்படவோ வழிவகுக்கும். ஆகவே இந்த சொத்தை பாதுகாக்க பல உத்திகள் கையாளப்பட்டன, அவற்றில் ஒன்றுதான் பெண்களுக்கான பிரத்யோக ஒழுக்க விதிகள். ராஜபுத்திரர்கள் போருக்கு செல்கையில் தோல்வியடைந்தால் அவர்கள் மனைவிகள் கூட்டுத் தற்கொலை செய்துகொள்வார்கள். விதவைகள் இன்னொருவனை மணக்காது தடுக்க அவர்கள் கணவன் பிணத்தோடு சேர்த்து எரிக்கப்பட்டார்கள், அவர்கள் எதிர்ப்பை சமாளிக்க அபின் தரப்பட்டது, தப்பிவர முடியாத அளவுக்கு சிதைக்குழிகள் ஆழமாக வெட்டப்பட்டன. அதையும் மீறி தப்பினால் அடித்து நெருப்பில் தள்ளிய ”வீரர்கள்” வடக்கே இருந்ததை வரலாறு சொல்கிறது. இங்கேயும் பார்ப்பன பெண்கள் கணவனை இழந்தால் மொட்டையடித்து முக்காடிட்டு மூலையில் அமரவேண்டும். அப்போதுதான் அவள் இன்னொருவனை மணக்காமல் தடுக்க முடியும். இதன் இன்னொருவடிவம் கவுண்டர்கள் மத்தியில் உள்ள (இருந்த) வெள்லைச்சேலை கலாச்சாரம்.

//பதினெட்டாம் நூற்றாண்டுவரை குழந்தைகளுக்கு என்று பிரத்தியோக ஆடை கிடையாது. பெரியவர்களின் ஆடை சிறிய அளவில் செய்யப்பட்டு அவை சிறார்களின் ஆடைகளாக பயன்படுத்தப்பட்டன.//

இந்த நெடிய கொடிய வரலாறு நம்மில் பெரும்பாலான ஆண்கள் மத்தியில் வெளியே செல்லும் பெண்கள் பற்றிய அச்சத்தை விதைக்கிறது. அவர்கள் தன்னையும் அறியாமல் பெண்களது ஒழுக்கம் பற்றிய ஆய்வுகளை செய்துகொண்டே இருக்கிறார்கள். பெண்கள் தம் ஒழுக்கத்தை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும் எனும் எழுதப்படாத விதியின் மூலமாக ஆண் தன் அதிகாரத்தை காப்பாற்றுகிறான். ஒரு பெண் நடந்து செல்லும் முறையை வைத்துக்கூட அவளது நடத்தையை குறைசொல்லும் ஆண்கள் இங்குண்டு. பெண்கள் நைட்டி அணிந்துகொண்டு சாலையில் நடப்பதை கிண்டலடிக்கிற, அருவெறுப்பாக பார்க்கிற உரையாடல்களை நீங்கள் சினிமாவிலும் சமூக ஊடகங்களிலும் காணலாம். பெண்கள் வெளியே செல்வது ஆண்களுக்கு தவிர்க்க இயலாதபோது அவர்களை கட்டுப்பாட்டில் வைக்க இன்னொரு கருவி தேவைப்படுகிறது, அதுதான் அவர்கள் மீதான திணிக்கப்படும் ஆடை சார்ந்த ஒழுக்கம்.

//ஆடை அணியும் பழக்கம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது//

இரண்டாண்டுகளுக்கு முன்னால் நான் பணியாற்றிய நிறுவனத்தில் நடந்த சம்பவம் இது. அங்கே பணியாற்றிய பெண் ஒருவர் மாலை வீடு திரும்புகையில் அலுவலக வளாகத்துக்கு உள்ளே இருக்கும் ஒருவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு போகிறார் (ரகசியமாக அல்ல, அப்போது உள்ளேயும் வெளியேயும் பல ஊழியர்கள் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்) முதல் தளத்தில் அலுவலக நிர்வாக ஊழியர்கள் நின்றுகொண்டு இதனை பார்க்கிறோம். அப்போது அப்பெண்ணின் செய்கை பற்றிய எங்கள் குழுவின் கருத்துக்கள் கீழ்கண்டவாறு அமைந்தன,

.  இது இப்படித்தான் இருக்கும்னு அப்பவே எனக்கு தெரியும்.

.  ஒரு லேபருக்கு எதற்கு இவ்வளவு மேக்கப்பும், காஸ்ட்லி ஆடைகளும் அதிலேயே இவ லட்சணம் தெரியுதே.

.  அந்த பெண்ணு நடக்கும்போது பார்த்திருக்கிங்களா… பிஞ்சுல பழுத்ததுன்னு நல்லா தெரியும்.

.  இப்படி அலைய விடுற அப்பனை சொல்லனும் சார். ஆரம்பத்துலயே கண்டிச்சி வச்சிருக்கனும்.

மேற்சொன்ன எல்லாம் அந்த உரையாடலின் வகைமாதிரிகள். இது எதிலும் பேச்சை ஆரம்பித்து வைத்த பறக்கும் முத்தம் விமர்சனத்துக்கு ஆளாகவில்லை. அவர் ஆடை அலங்காரம்தான் அவர் மீதான வசவுகளுக்கு அடிப்படை. மகள் இன்னொரு ஆணுக்கு பறக்கும் முத்தம் கொடுப்பது எந்த தகப்பனுக்கும் தெரியாது. அப்படியானால் அப்பன் கண்டித்திருக்க வேண்டும் எனும் விமர்சனம் சுட்டுவது எதை? சந்தேகமில்லாமல் அவர் தன் மகளின் ஆடை அலங்காரத்தை கண்டித்திருக்க வேண்டும் என்பதைத்தான்.

முண்டா பனியனோடு நடுரோட்டில் நின்று கக்கத்தை சொறிபவன் மீது வராத விமர்சனம், தொப்பை டி.ஷர்ட்டை கிழித்துவிடும் அளவுக்கு இறுக்கமாக அணியும் ஆண்களின் மீது வராத விமர்சனம், பின்பக்கத்தில் பாதி தெரியும் அளவுக்கு இறக்கமாக பேண்ட் அணியும் ஆண்கள் மீது வராத ஆத்திரம், ஒன்றேகால் அடி உயர டவுசரோடு எதிர்காற்றில் வண்டி ஓட்டிச்செல்லும் இளைஞர்கள் மீது வராத ஆத்திரம் ஏன் லெக்கிங்ஸ் மீதும் ஜீன்ஸ் பேண்ட் மீதும் வருகிறது? சந்தேகமே வேண்டாம், நவீன ஆடை அணிகிற பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் அல்லது நவீன ஆடைகளே ஒழுக்கமற்றவை எனும் பொது சிந்தனையில் இருந்து வருகிறது. இதற்கு பலியாவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். பெருமளவு நவீன ஆடைகளையே அணியும் என் பெங்களூர் தோழி ஒருவரோடு பேசுகையில் “ உங்களுக்கு சமைக்கத் தெரியுமா” என்று எதேச்சையாக கேட்டேன், அவரது உடனடி பதில் “ என் ஆடையை பார்த்து எதையும் முடிவு செய்யாதே, எனக்கு சமையல் தெரியும். நான் நல்ல பொண்ணுதான்”.

இந்த பதில் வெளிப்படுத்துவது இதைத்தான், ”மார்டன் உடை அணிபவர்கள் (பெண்கள்) நல்லவர்கள் அல்ல, நான் ஒரு விதிவிலக்கு”. இந்த பொது மனோபாவத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் ஆண்களின் அரைகுறை அல்லது வித்தியாசமான ஆடை பற்றிய விமர்சனங்களை கவனியுங்கள். அவை அணிபவனுக்கு பொருத்தமாக இல்லை என்றோ அசிங்கமாக இருக்கிறது என்றோ இருக்கும் மீறிப்போனால் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்பார்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு இந்த அளவுகோல் வைக்கப்படுவதே இல்லை, உடைத்து சொல்வதானால் பெரும்பான்மை சமூகம் நவநாகரீக ஆடைஅணியும் பெண்கள் மீது ஒழுக்கக்குறைவு குற்றச்சாட்டை சுமத்தும் ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறது. பெரும்பான்மை (நவீன ஆடைஅலங்காரத்தை விரும்பும்) பெண்கள் இந்த அளவுகோல் தவறு என வாதிடுவதில்லை, மாறாக நான் அப்படிப்பட்டவள் அல்ல என்றே வாதிடுகிறார்கள்.

//அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 45 கோடி ஜீன்ஸ் பேண்ட்கள் விற்பனையாகின்றன. உலகின் மொத்த ஜீன்ஸ் உற்பத்தியில் 50 விழுக்காடு இந்தியா, வங்க தேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து தயாராகிறது.//

அரசியல் மற்றும் வரலாற்று காரணிகளை தவிர்த்துவிட்டு பயன்பாட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இந்த விலக்கப்பட்ட ஆடைகள் அல்லது இறைவனுக்கு ஆகாத ஆடைகள் பாரம்பர்ய சேலை தாவணியைக் காட்டிலும் சிறந்தவைதான். முதலில் அவற்றின் விலை, பராமரிப்பு செலவு ஆகியவை குறைவு. சட்டையையும் கால் சட்டையையும் இணைமாற்றி அணியும் சாத்தியம் உண்டு. ஆடை விலகியிருக்கிறதா என ஓயாமல் சோதனை செய்யவேண்டிய அவசியமில்லை. முழங்கால் அளவுக்கு உயரமான பேருந்து படிக்கட்டில் ஏறுவது சைடு ஸ்டாண்டில் சிக்காமல் வண்டியை எடுப்பது ஆகியவை ஜீன்ஸ் மற்றும் லெக்கிங்ஸ் அணிகையில் சுலபம். இவை பெருமளவு பருத்தியினால் ஆனவை (நெகிழ்வுத்தன்மைக்காக லைக்ரா சேர்க்கப்படும் 5%) ஆகவே நம்நாட்டு வெப்பநிலைக்கு இவை உகந்தவை. ஆடையுலகில் எலாஸ்டிக் ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு. பெரும்பாலான சிறார் ஆடைகள் எலாஸ்டிக் கொண்டிருப்பதன் காரணம் அதனை நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய அவசியமில்லை. பொதுவெளியில் தன் ஆடையை சரிசெய்ய வாய்ப்பற்ற பெண்களுக்கு எலாஸ்டிக் உள்ள லெக்கிங்ஸ் ஒரு மிகவசதியான ஆடை.

இறுக்கமான ஆடை என்பது இளமையை வெளிப்படுத்தும் வழி என்பது இருபாலருக்குமான பொது நம்பிக்கை. நீங்கள் இணையதள கடைகளில் தேடிப்பாருங்கள், ஆண்கள் ஜீன்ஸ்சில்கூட பெரும்பாலானவை ஸ்லிம் ஃபிட் ஆகத்தான் இருக்கும். உங்கள் ஆடையை அரை அங்குலம் பெரிதாக தைத்துக்கொடுத்தால் உங்கள் தோற்றம் குறித்த கூச்சத்தை அது உருவாக்கும். ஒரு ஆடைத்தெரிவு என்பது முற்றுமுழுதாக பழக்கம் மற்றும் விருப்பம் சார்ந்தது. உடலைக் காட்டுவதற்காகவே ஆடை அணிகிறார்கள் என்பது பெண்களை இழிவுபடுத்தும் வசவு.

//எலும்பாலான எளிய தையல் ஊசிகள் 30000 ஆண்டுகளுக்கு முன்னால் பயன்பாட்டுக்கு வந்திருக்கலாம் என கண்டறியப்பட்டிருக்கிறது.//

வரலாற்று ரீதியாக பார்த்தால்கூட ஆடை என்பது உடல் கவர்ச்சியை மறைக்க உருவானதல்ல. பிறப்பு உறுப்பு வேட்டையின்போது காயப்படாமல் இருக்கவே ஆடை அணியும் பழக்கம் மனிதர்களிடையே உருவானது. இப்போதும் பல பழங்குடியின பெண்கள் மேலாடை அணியாமல்தான் வாழ்கிறார்கள். அங்குள்ள ஆண்கள் யாரும் அப்பெண்கள்மீது பாய்ந்துவிடவில்லை. நாகரீகத்தில் மேம்பட்ட ஐரோப்பிய ஆண் சிப்பாய்கள்தான் ஆப்பிரிக்காவின் மீது படையெடுக்கையில் அங்கிருந்த பெண் சிம்பன்சிகளைக்கூட (மனித இனம் என கருதி) வன்புணர்ச்சி செய்தார்கள்.

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு ஆடை நிறுவனத்தில் சேம்பிள் மெர்சண்டைசராக இருந்தேன். அப்போது இறக்குமதி நிறுவன ஊழியரிடம் ஃபிட் அப்ரூவல் வாங்கப் போவோம் (ஆடையின் அளவுகள் சரியாக இருக்கிறதா என பார்த்து ஒப்புதல் கொடுப்பார்கள், அதன் பிறகே உற்பத்தி துவங்க முடியும்). அங்கு பொறுப்பில் உள்ள பெண் (பிலிப்பைன்ஸ்காரர்) எங்கள் முன்னாலேயே பனியன் மாதிரிகளை மாற்றி மாற்றி அணிந்து பார்ப்பார். அங்கு ஒப்புதல் பெற வருபவர்கள் முதலில் கலாச்சார அதிர்ச்சிக்கு ஆளானார்கள் பிறகு சில சந்திப்புகளுக்கு பின் அதனை பொருட்படுத்துவதே இல்லை. அவரை யாரும் கையை பிடித்து இழுத்த சம்பவமும் நடக்கவில்லை. ஆகவே ஆடை குறித்த அதிர்ச்சிக்கு கலாச்சார ஒப்பனை கொடுத்து நாம்தான் பிரச்சினையை தீவிரமாக்குகிறோம்.

பெண்களின் ஆடைதான் பாலியல் வன்கொடுமைகளை தூண்டுகிறது எனும் வாதம் என்பது கற்பழிப்பாளனின் தரப்பு வாதம். பெண் விளையாட்டு வீரர்கள் எல்லோரும் அரைக்கால் சட்டையும் கையில்லாத பனியனுமே அணிகிறார்கள், விளையாட்டைப் பார்க்கும் ரசிகர்கள் யாரும் தான் தூண்டப்படுவதாக புகார் சொல்வதில்லை. இந்தியாவின் பெரும்பாலான பாலியல் வன்புணர்ச்சி குற்றங்கள் மிகவும் நெருக்கமானவர்களால் நடக்கின்றன. சிறார்களை பார்க்கையில் பாலியல் ரீதியாக தூண்டப்படும் ஆண்கள் 2 முதல் 5 சதவிகிதமாக இருக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. தூண்டலுக்கான காரணி என்பதால் குழந்தைகளை குற்றவாளிகள் என சொல்வீர்களா? பிறகு எப்படி நம்மால் பெண்கள் மீது மட்டும் குற்றம் சொல்ல முடிகிறது?

கண்ணியமான ஆடை எனும் சொல்லே அபத்தமானது. கண்ணியமும் ஒழுக்கமும் இருபாலருக்கும் பொதுவானது, அதனை ஆடைகள் வழியே முடிவு செய்வது அநாகரீகமானது, அராஜகமானது. அது உங்கள் விருப்பத்தின் ஒரு பகுதி அவ்வளவே, பண்பின் அடையாளமல்ல. இதயத்துடிப்பு குறைந்து சுயமாக மூச்சுவிடாமல் பிறந்த என் மகனை பிரசவ அறையில் இருந்து தூக்கிக்கொண்டு NICUவுக்கு ஓடிய மருத்துவர் லெக்கிங்ஸ் அணிபவர்தான். கல்வி உரிமைக்காக போராடி போலீசிடம் அடிவாங்கிய பெண்களில் ஜீன்ஸ் அணிந்தவர்களும் உண்டு. ”சேலை” அணிந்த பெண் ஒருவர் பிரசவத்தில் சாவதைக் கண்டு பொறுக்காமல் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையை தோற்றுவித்தவர் ஸ்கர்ட் அணியும் பழக்கம் கொண்ட ஒரு வெள்ளைக்கார பெண்தான். இவர்கள் ஆடையை எப்படி நான் கண்ணியக்குறைவானவை என்று சொல்ல முடியும்? வெறும் உடலை மட்டுமே பெண்ணாக கருதினால் புத்தி ஆடையில்தான் கண்ணியத்தைத் தேடும். பெண்களது ஆடை பற்றிய தவறான நம்பிக்கைகளை சரிசெய்ய எளிய வழி ஆண்கள் சரியான ஆணாக வாழ கற்றுக்கொள்வதுதான். அதாவது பயலாஜிக்கல் ஆணாக மட்டும் இல்லாமல் பிறரது உரிமை, விருப்பம் ஆகியவற்றையும் மதிக்கும் முழுமையான ஆணாக வாழக் கற்பது.

லெக்கிங்ஸ், ஜீன்ஸ் ஆகியவற்றை சகித்துக்கொள்ளும் அளவுக்கு பகவான் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் அவர் அதனை வலியுறுத்த தகுதியுடையவர் அல்ல. என் இடத்துக்கு திருடனோ, குடிகாரனோ அல்லது கொலைகாரனோ வரக்கூடாது என்று சொல்லும் துணிச்சல் கடவுள் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து அவர்தம் முகவர்களுக்கு இல்லை. முதலில் அவருக்கு அந்த துணிச்சல் வரட்டும். அதன் பிறகும் அவர் உயிரோடு வைக்கப்பட்டால் பிற்பாடு ஜீன்ஸ், லெக்கிங்ஸ், துப்பட்டா இல்லாத சுடிதார் ஆகியவை பற்றிய விவாதத்தை வைத்துக்கொள்ளலாம். அதுவரை பெண்களே, உங்கள் ஆடையை கண்ணியக்குறைவானது என சொல்லும் கடவுளை புறக்கணியுங்கள்.

ஒருவேளை அந்த ஆடைகள் அசிங்கமாக இருக்கிறது என பேசுபவர் நீங்கள் என்றால், நாம் விவாதிக்கவும் ஒரு செய்தி இருக்கிறது. ஒருவரது ஆடை அல்லது அலங்காரம் பார்ப்பவருக்கும் அணிபவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இன்னொன்று நமக்கு எது அசிங்கமானது என்பதை நம் விருப்பங்களும் சூழலும் தீர்மானிக்கின்றன. அது இன்னொருவருக்கு வேறாக இருக்கும். ஒருவரது ஆடை நமக்கு பிடிக்காவிட்டாலும் சகித்துக்கொள்வதுதான் நாகரீகம். ஆடை என்பது முதலில் அணிபவரின் வசதியையும் விருப்பத்தையும் சார்ந்தது. அதனை தீர்மானிக்கும் உரிமை அவ்வாடையை பார்க்கும் நமக்கு கிடையாது. ஆகவே அசிங்கமாக இருக்கிறது என கருதி இந்த மத அடிப்படைவாதிகள் செயலுக்கு துணைபோகாதீர்கள். அது உங்கள் தோழிகளுக்கும், சகோதரிகளுக்கும், மகளுக்கும் மனைவிக்கும் இழைக்கும் அநீதி

கட்டுரையாளர் வில்லவன் ராமதாஸின் வலைத்தளம் இங்கே…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.