சமீபத்தில் விஜயகாந்த் பத்திரிகையாளர்களைப் பார்த்து ‘த்தூ’ என்று சொன்னது பெரும் சர்ச்சையானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், ‘த்தூ’ என்று துப்பியதால் இனி விஜயகாந்‘த்தூ’ என அழைக்கப்படுவார் என பகடி செய்திருந்தார். விஜயகாந்தின் நடத்தையும் கண்டித்திருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் நடந்த பாமக மாநாட்டில் பேசிய ‘சர்ச்சை’ புகழ் காடுவெட்டி குரு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். ஒரு கட்டத்தில், “திமுக பலமுறை ஆட்சியில் இருந்திருந்திருக்கிறது. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் விவசாயம் நன்றாக நடக்கிறதா? படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததா? என்பதைக் கேட்டறிந்தார்களா? அப்போ திமுக செவ்வாய் கிரகத்திலேயா ஆட்சியில் இருந்தது. இதைக் கேட்டு உண்மையான தமிழன், கட்சி சார்ந்தவர்களை விட்டு விடுங்கள்…உண்மையான தமிழன் ஒருவன், செருப்பால் அடித்து, இதற்கெல்லாம் நீயும்தானே காரணம் எனக் கேட்க வேண்டாமா?” என்று பேசினார்.
விஜயகாந்தின் பேச்சை அநாகரிகம் என்று பேசிய அன்புமணி, அதேமேடையில் அமர்ந்து இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். நாகரிகம்/அநாகரிகம் குறித்து பாடம் நடத்துவதெல்லாம் அடுத்தவர்களுக்குத் தானா? தனது கட்சியினருக்கு இல்லையா என சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது.