‘பேச்சுத்திறன்கொண்டோர் எல்லாம் தலைவர்களா?’

எழிலரசன்

தமிழகத்தின் பொதுப்புத்தியில் ‘பேச்சாளர்கள்’ எல்லாம் ஏதோ பெரிய தலைவர்கள் என்பதுபோல் பதிந்திருக்கிறது. அதனால்தான், பேச்சாளர்களுக்கு போகும் இடமெல்லாம் அதீத மரியாதை தரப்படுகிறது. ஆனால், பேச்சுத்திறன் கொண்டுள்ளோர் எல்லாம் தலைமைத்திறனையும் கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறியே! தமிழகத்தில் பலத் தலைவர்கள் சிறந்த பேச்சாளர்களாக விளங்கியிருக்கிறார்கள். பெரியார், அண்ணா ஆகியோர் சிறந்த உதாரணம். பேச்சாற்றல் பெருமளவு இல்லாதிருந்தும் தலைமைப்பண்புக் காரணமாக தலைவர்களாக இருந்தவர்களும் உண்டு. உதாரணம் காமராஜர்.

ஆனால், பேச்சுத்திறனை தலைமைத்திறனோடு போட்டு குழப்பிக்கொண்டு, காலப்போக்கில் ஒலிபெருக்கி முன்னால் நின்று தேன்த்தமிழில், அடுக்குமொழியில், சங்க இலக்கியப் பாடல்களை நடுவில் சேர்த்து, உலக வரலாற்றுச் சம்பவங்களை ஞாபகமாகச் சொல்லி, உணர்ச்சிப்பிழம்பாக, சக்கரைப்பாகுச் சொற்களால் நாவினை சுழற்றத் தெரிந்த எல்லோரும் ஏதோ பெரிய தலைவர்கள் என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடங்களில் எல்லாம் பேச்சாளர்களை மக்கள் கூட்டம்கூட்டமாய்ச் சந்தித்து பேச ஆர்வம்காட்டினர். அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கிப் பெருமைப்பட்டனர். அவர்களோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். பேச்சாளர்களின் பெயர்கள் கூட்ட நோட்டீஸில் பெரிய அளவில் அச்சிடப்படுவதும், பேசத்தொடங்கும்போது கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் வரிசையாகச் சென்று பொன்னாடைப் போர்த்துவதும் ஒருவித மயக்கத்தை இயல்பாக அவர்களுக்குத் தரும். ஊர்ஊராகச் சென்று பொதுக்கூட்டத்தில் பேசுவாதால் ஊருக்கு நாலுபேர் இவர்களுக்கு பழக்கமாவார்கள்.

இவைக் காரணமாக, தாங்களே பெரிய தலைவர்களைப் போல நினைத்துக் கொண்டு பலப் பேச்சாளர்கள் பிலிம் காட்டத் தொடங்குவார்கள். பொதுபுத்திக் காரணமாக மக்களும் அவர்களை பெரிய தலைவர்கள் போலவும் பெரிய அறிவாளிப் போலவும் எண்ணத் தொடங்குவார்கள்.

ஆனால், உண்மையில் தலைவர், தலைமைப்பண்பு என்பவை வேறு. தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையை வென்றெடுக்க மக்களை அணியமாக்கி இலக்கை நோக்கி அழைத்துச் செல்பவன்தான் தலைவன். இந்தப் பயணத்தில் ஏற்படும் பலவகை இன்னல்களை, தொண்டர்களின் பிரச்னைகளை, கட்சிக்கு ஏற்படும் சோதனைகளை எதிர்கொண்டு, வியூகங்களை அமைத்து இலக்கை நோக்கி விரைந்து செல்ல கலங்கரை விளக்கமாக இருப்பவன்தான் தலைவன். எந்நேரமும் விழிப்பாக இருந்து பலச் சவால்களை எதிர்கொள்வது சாதாரணமல்ல. அதேபோல, எந்த முடிவை எப்போது எடுக்க வேண்டும் எந்த அறிவிப்பை எப்போது சொல்ல வேண்டும் என்பதெல்லாம் தலைமைப்பண்புக்கே உரிய அம்சங்கள். ஆனால், பேச்சாளர்களுக்கு இந்த பண்புகள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

செய்தித்தாள்களையும், நான்கைந்து புத்தகங்களையும் படித்து தேவையான ‘பாயின்ட்’களை தேற்றிக் கொண்டு கூட்டத்தில் கைத்தட்டல் வாங்கினாலே போதுமானது. ஆனால், பேச்சைக் கேட்க வரும் கூட்டமும் கைத்தட்டல் தரும் மயக்கமும் பலப் பேச்சாளர்களைத் தங்களைத் தலைவர்களாக நினைத்துக் கொள்ளச் செய்கிறது.
இந்த வகையில், தமிழ்நாட்டில் பலப் பேச்சாளர்கள் கட்சித் தொடங்கி ‘தலைவர்களாகி’ இப்போது வலம்வருவதை பார்க்க முடிகிறது. ஆனால், காலப்போக்கில் அவர்கள் தலைமைத்துவ ஆற்றல் அற்றவர்கள் என்பது கொஞ்சம்கொஞ்சமாக வெளிப்பட்டுவிடுகிறது.

அதேசமயம், தாம் வெறும் பேச்சாளன் மட்டும்தான் அதைதாண்டி நாம் ஆசைப்பட்டு செல்லக்கூடாது என்ற உண்மையை உணர்ந்து காலம்முழுக்கவே பேச்சாளர்களாக தலைவர்களுக்குக் கட்டுப்பட்டு இருந்தவர்கள் திராவிடர் இயக்கத்தில் ஏராளம் பேர் உண்டு.

எப்படி ஒரு நடிகரை பார்த்து அவரிடம் உள்ள நட்சத்திர அந்தஸ்தைப் பார்த்து அவரை ‘தலைவர்’ என்று மக்கள் தவறாக நினைத்துவிடுகிறார்களோ அதுபோலத்தான் ‘வெறும்’ பேச்சாளர்களைத் தலைவர்களாக எண்ணுவது!
ஒரு கட்சிப் பேச்சாளன் என்பவன் ஊர்ஊராகச் சென்று தலைவனின் கருத்துகளை, வியூகங்களை மக்களுக்கு விளங்கும்படி அழகுமொழியில் எடுத்துச் சொல்பவன்.

இதுதவிர, பாட்டுமன்றத்தில், பட்டிமன்றத்தில், இன்னும்பிற இடங்களில் பேசுபவர்கள் சிலர் சொற்பொழிவை மக்களை ஆனந்தப்படுத்தும் ஒரு நல்ல கலையாகவோ மேலும் சிலரோ பணம் பண்ணும் வழியாகவோ பார்ப்பர். இதனால் ஒரு பிரயோஜனமும் மக்களுக்கு இல்லை. மேலும் சிலர் இலக்கியச் சொற்பொழிவாளர்களாக உள்ளனர். அவர்கள் எந்த இலக்கியத்தை யாருக்கான இலக்கியத்தை பற்றி பேசுகிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களை மதிப்பிட முடியும்.

இது சற்றுக்குழப்பமான விஷயம்தான் புரிந்துகொள்வதற்கு! பேச்சாளர்கள் எல்லோரும் தலைமைப்பண்பு கொண்டவர்கள் அல்ல. ஆனால், தலைவர்களில் பேச்சாற்றல் கொண்டோர் இருக்கிறார்கள்!

யார் பேச்சாளன்? யார் தலைவன்? என்பதை சரியாகப் பகுத்துப்பார்த்து மக்கள் புரிந்துகொள்ளாவிட்டால், தமிழகத்தில் இன்னும் புதியக் கட்சிகள் தோன்றக்கூடும்!

குறிப்பு: இது ‘வெறும் எழுத்தாளர்களுக்கும்’ பொருந்தும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.