கூட்டணி என்று வரும்போது காங்கிரசை ஒதுக்கவில்லை என்று காங்கிரசுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் மு.கருணாநிதி. இனி எப்பொழுதும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று ஸ்டாலின் 2013 ஆம் ஆண்டு சொன்னதாக நினைவு.
திமுக காங்கிரசுடன் தாரளமாக இணையலாம். ஆனால் 2 G விவகாரத்தில் நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்கள், ராஜா பலிகடா ஆக்கப்பட்டார், தலித் என்பதால் ராஜா பழிவாங்கப்படுகிறார், மன்மோகனுக்குத் தெரியாமல் இது நடக்குமா என்று பல வகைகளில் காங்கிரசை குற்றம் சாட்டிய பின்னர்தான் கூட்டணியில் இருந்து திமுக விலகியது.
இன்று ஜெயாவை வீழ்த்துவது ஒன்று தான் நோக்கம் என்ற கண்ணோட்டத்தில் கூட்டணிக்குத் தயார் என்று மு.க அறிவித்திருப்பாரே ஆயின், கடந்த ஆட்சி வீழ்ந்ததற்கு முக்கிய காரணமே 2 G குற்றச்சாட்டு தான் என்பதை அவருக்கு யாராவது நினைவூட்டினால் நலம். இன்றளவிற்கும் முட்டு சந்தில் திமுகவை சுள்ளான்கள் எல்லாம் அவதூறு செய்கிறார்கள் என்றால் அதற்கு 2 G விவகாரத்தைப் பற்றி இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசமால் மவுனம் காத்ததே காரணம்.
திமுக தலைமை மற்றும் அடிமட்ட தொண்டர்கள் தவிர இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் இந்த விஷயத்தில் திமுக தரப்பு நியாயங்களை சொல்லாமலேயே இருந்தார்கள். ஆதரித்து பேசி ஒவ்வொருமுறையும் திமுகவை காப்பாற்றியது கடைநிலை தொண்டர்கள் தாம். நாளை திமுக- காங்கிரஸ் கூட்டணி என்ற அறிவிப்பு வருமாயின் அவர்கள் நிச்சயம் தேர்தல் வேலை செய்வார்கள். ஆனால் அது ரசிக விசிலடிச்சான் குஞ்சின் மனோநிலையில் இருக்குமேயொழிய அறிவுரீதியிலான ஆதரவாக இருக்காது. எல்லா தவறுமே காங்கிரஸ் செய்தது , அதனால் வெளியே வருவது தான் நல்லது என்று தொண்டர்கள் மனதில் பதியவைத்துவிட்டு, காங்கிரசை விட்டு விலகியதும் தொண்டர்கள் எல்லாம் பட்டாசு வைத்து கொண்டாட வைத்துவிட்டு இன்று மீண்டும் சரியான விளக்கம் எதுவுமே நல்காமல் கூட்டணி சேருவார்கள் என்றால் திமுக, திமுகவினரிடமே அபிமானம் இழக்கும்.
“அப்பானா ரொம்பப் புடிக்குமா ?”
“அதெல்லாம் இல்ல…ஆனா அவரு எங்க அப்பா”
என்று தொண்டர்களின் பழைய பாசத்தால் ஓட்டும் வாங்கலாம். ஆனால் இது வெகு காலத்திற்கு நீடிக்காது. எம்.ஜி.ஆர்/கலைஞர் என்றால் எனக்கு உயிர் என்று உணர்சிக்கொந்தளிப்பில் ரசிகர்கள்/ தொண்டர்கள் இருந்த தலைமுறை சீக்கிரம் முடிவடைந்துவிடும், இனிவரும் காலத்தில் ஒரு கட்சியை/ தலைவரை மக்கள் ஆதரிப்பார்கள் என்றால் அது நிச்சயம் கட்சியின் கொள்கைகள், பேச்சுக்கள், செயல்பாடுகள் என்ற ஒட்டுமொத்த சீர்தூக்களின் வாயிலாக இருக்குமேயன்றி தனிமனித துதியால் இருக்காது. எல்லா பழியையும் காங்கிரஸ்மேல் சூட்டிவிட்டு இன்று மீண்டும் காங்கிரசுடன் கைகோர்க்கும் என்றால் , இனி 2 G விவகாரத்தில் திமுகவின் பேச்சு எடுபடாது.
எப்படி ஆற்காடு வீராசாமி மீது இருந்த வெறுப்பு ஜெயாவுக்கு ஆதரவாகத் திரும்பியதோ, அதேபோல் மதகுகளை நள்ளிரவில் திறந்துவிட்டு மக்களை மூழ்கடித்த ஜெயா மீதுள்ள கோபத்தால் திமுக ஜெயா எதிர்ப்பு வாக்குகளை வாங்கும். ஆனால் ஒரு கட்சியின் core strength எதிர்கட்சியின் எதிர்ப்பு வாக்கு அல்லவே? கட்சியின் கொள்கைகளுக்காக ஆதரிக்கும் கூட்டமன்றி வேறு பலமேது? கொள்கைகளை எல்லாம் சுமந்து கட்சியை காபந்து செய்த ஆட்கள் கொள்கைக்காக கட்சியை நேசித்தவர்கள் தான். எம்.ஜிஆர் விலகலில், வைகோ விலக்களில், எமர்ஜன்சியில், ராஜீவ் கொலையுண்ட காலத்தில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தையொட்டிய குற்றச்சாட்டுகளில் எல்லாம் கட்சியுடன் நின்றவர்கள் Anti- ADMK ஆட்கள் அல்ல. திமுகவை அதன் கொள்கைகளுக்காகவும் , சமூக நீதிக்காக குரல் கொடுத்த ரசித்த கூட்டமும் தான்.
இப்படி ஜெயாவை வீழ்த்துவதற்காக எவருடனும் கூட்டணி என்று இறங்கினால், வெற்றி இன்று மட்டுமே கிட்டும். மத்தியில் இருக்கும் சிலரின் மதவெறி பேச்சு, சிறப்பில்லாத செயல்பாடு காரணமாக திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு விழும். ஆனால் நாளை பத்தோடு பதினொன்றாக பழம்பெருமை மட்டுமே பேசும் கட்சியாக திமுக நிற்கும் . புதிய வாக்காளர்களை ஒருபோதும் கவராமல் போகும்.
இன்று ஜெயாவை மக்கள் நிராகரிப்பது ஒரே இரவில் நிகழவில்லை. மக்களின் தொடர்ச்சியான ஆனால் அமைதியான நிராகரிப்பினால் நிகழ்தது. இன்று ஜெயாவின் படத்தை தாங்கிய ஆக்கிரமிப்பு பேனர்களை எல்லாம் அறப்போர் குழுவினர் அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். இது ஜெயாவுக்கு மட்டுமன்றி அழகிரி போன்றோருக்கும் விடப்பட்ட எச்சரிக்கை.
இன்று ஜெயாவுக்கு எதிரான எதிர்ப்பாகத் தெரிவது ஜெயா என்ற தனிநபர் மீதான எதிர்ப்பு மட்டுமல்ல. முன்னுக்குப்பின் முரணாக பேசி, எவ்வகையிலும் செயல்படாத அரசின் மீது ஒட்டுமொத்த எதிர்ப்பு.நாளை இது திமுக மீதும் திரும்பும். நேரடியான, தெளிவான விளக்கம் கொடுக்காத எந்த கட்சியையும் மக்கள் மெல்லமெல்ல நிராகரிப்பார்கள். இப்போதைக்கு திமுகவை ஆதரிப்போம் என்று மக்கள் வாக்களிக்கலாம். ஆனால் திமுக தான் எப்பொழுதுமே என்று சொல்லும் ஆட்களை மெல்ல திமுக இழக்கும்
ரசிகக் கண்மணிகளின் ஓட்டு மட்டும் போதுமா அல்லது கொள்கைக்காக கட்சியை பல்வேறு மட்டங்களில் ஆதரித்து, எவ்வித பதவியும் எவ்வித உதவியும் எதிபார்க்காத விசுவாசிகள், think tanks சும் வேண்டுமா என்று திமுக சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த பத்து வருடங்களில் ஈவிகேஸ் நிலைமையில் ஸ்டாலின் இருப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
2016 வெற்றி மட்டுமே திமுகவிற்கு போதுமென்றால் காங்கிரசுடன் சேர்ந்து கொள்ளலாம்