செவ்வணக்கம் தோழர் பரதன்: சீத்தாராம் யெச்சூரி

தோழர் பரதன், ஒரு ஓய்வறியா கம்யூனிஸ்ட் போராளி. இந்திய மக்களின் நலனுக்கான போராட்டத்தில் மாறாத உறுதியையும், தீர்மானகரமான பற்றினையும் ஒருபோதும் கைவிடக் கூடாது என்றமதிப்புமிக்க பாடங்களை நமக்கு கற்றுத் தந்தவர். இந்திய அரசியலில், அரசியல் நெறி என்பது மிகவேகமாக சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், அரசியலின் மாண்பு என்ன என்பது பற்றியும், அரசியல் என்பதை பணம் சம்பாதிக்கிற தொழில் என்ற அளவிற்கு இழிவானதாக கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது பற்றியும், ஆனால் உண்மையில் அரசியல் என்பது சமூகத்திற்கு நாம் ஆற்றும் மிகஉயரிய சேவை என்றும் நமக்கு கற்றுத் தந்தவர்.அரசியல் என்பது இந்த நாட்டு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கருவி என்பதை கற்றுத்தந்தவர். தோழர் பரதனுடன் 1980களிலிருந்தே பழகும் வாய்ப்பினை நான் பெற்றேன்.

அப்போது அவர், தொழிற்சங்க தலைவராக இருந்தார். நான் மாணவர் சங்கத்தில் செயல்பட்டு வந்தேன். உண்மையில் 1940களில் இந்தியாவில் மாணவர் சங்கம் உருவான காலத்தில் அதன்தலைவர்களில் ஒருவராக இருந்தவர் தோழர்பரதன். அவருக்கும் எனக்கும் வயது வேறுபாடு இருந்த போதிலும் கூட என்னுடன் ஒரு அற்புதமான தோழமை உறவை ஏற்படுத்தி என்னை பிணைத்துக் கொண்டவர். எல்லா தோழர்களுடனும் அத்தகைய உறவை அவர் பேணி வந்தார்.அவர் எப்போதும் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் வாழ்ந்து வந்தார், பணியாற்றினார். அனைத்துத் தரப்பு மக்களிடமும் அவ்விதமே நடந்து கொண்டார். அவரது முழுமையான வெளிப்படைத் தன்மையைப்பார்த்து நான் எப்போதும் பிரமித்திருக்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான அஜய் பவனிலேயே அவர் தனதுவாழ்நாளின் பெரும் பகுதி காலம் வசித்து வந்தார். அடிக்கடி நான் அங்கே செல்வதுண்டு. அவரோடு தேநீர் அருந்துவது உண்டு.நான் எந்தவொரு புதிய புத்தகத்தை எடுத்துவந்தாலும், அதை அவர் எனது கைகளில்இருந்து எடுத்துக் கொள்வார். எப்போதுமே புதிய புதிய கருத்துக்களையும், விவாதங்களையும் என்னுடன் பேசிக் கொண்டே இருப்பார். ஒருமுறை நாங்கள் இருவரும் ஒன்றாகப் பயணித்தபோது, நான் கொண்டு சென்றிருந்த ஜோ சாக்கோவின் ‘பாலஸ்தீனம்’ என்ற புத்தகத்தைப் பார்த்து, அதை வாங்கி படித்துக் கொண்டே வந்தார்.

சாக்கோவின் எழுத்து நடை அவரை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. அந்தப் பயணம் முழுவதும் பாலஸ்தீனம் பற்றியும், சாக்கோவின் எழுத்தைப் பற்றியுமே பேசினோம். அப்போது அவர் குறிப்பிட்டார், இந்தியாவில் இருக்கும் நாம் எல்லோரும், குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட்டுகள் நமது செய்தியை இன்னும் ஜனரஞ்சகமான முறையில், புதுமையான முறையில், சாக்கோவை போல சொல்ல வேண்டும்; எழுத வேண்டும்; சாக்கோவின் எழுத்துக்களில் வடிக்கப்பட்டுள்ள ஓவியங்களைப் போல நாம் நமது கருத்துக்களை இந்திய மக்களின் கண்முன்னே நிறுத்த வேண்டும் என்று.

தோழர் பரதனை பற்றி நினைக்கும்போது, எனது மனதில் ஏராளமான நினைவுகள் வந்துபோகின்றன. அவர் இப்போது நம்முடன் இல்லை என்பதை எண்ணும்போது மனம்கனக்கிறது. கடந்த நவம்பர் மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 90ஆம் ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் தான் நான் அவரை கடைசியாகச் சந்தித்துப் பேசினேன். அதற்குப்பிறகு துரதிருஷ்டவசமாக அவருடன் பேச முடியாமல் போய்விட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சென்று பார்த்தேன். நினைத்துப் பார்க்கிறேன், மார்க்சியத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும்போதெல்லாம் அதற்கு எதிராக உறுதியாக குரல் கொடுத்தவர் அவர்; அத்தகைய தாக்குதல்கள் குறித்து தோழர்களுக்கு எச்சரித்துக் கொண்டே இருந்தவர் அவர். மார்க்சியம் இடைவிடாமல் தன்னை வளர்த்துக் கொண்டே இருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.

செவ்வணக்கம் தோழர் பரதன்!

சீத்தாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

நன்றி:தீக்கதிர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.