முப்போகம் விளையும் இடத்தில் சாட்டிலைட் சிட்டி: அரசியல்வாதிகளின் அபத்த முடிவுகள் எப்படி சென்னையை வெள்ளக்காடாக்கியது?

“எந்த ஒரு நல்லரசும் நீர்வள ஆதாரத்தின் மேல் நகரம் கட்டமாட்டாங்க. எந்த நாட்டுலயாவது லேக் வ்யூ அபார்ட்மெண்ட்னு கேள்விப்பட்டுருக்கீங்களா? நீங்க ஆதாரம் கூட தேடவேணாம். இப்படியே எழுதுங்க. அப்படி கட்டுனா அது சுற்றுலாவிற்கான ஏரின்னு வகைபடுத்திருப்பாங்க. குடிநீர் ஆதாரத்துல கட்டமாட்டாங்க. சரி இந்த திருமழிசைய சுத்தி இருக்கற தொழிற்சாலைக் கழிவுகள்லாம் இந்த மழை வெள்ளத்தில் எங்க போய் சேர்ந்திருக்கும்? மெர்குரி, ஆயில், ஹெவி மெட்டல்ஸ்னு(கன உலோகங்கள்) அத்தனையும் நச்சுப்பொருட்கள். எல்லாம் இன்னைக்கு செம்பரம்பாக்கம் ஏரிலதான் கலந்திருக்கும். சரி துணைக்கோள் நகரம் கட்டுறாங்களே… அதனோட குப்பைகள் கழிவுகள் எல்லாம் எங்கப்போய் சேரும்? செம்பரம்பாக்கம் ஏரிலதான கொண்டு போடுவீங்க..?

இன்னிக்கு அமிர்தசரஸ் கோவில் போறீங்களே.. ஒருநாளைக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் போறாங்க. அங்கருக்கற தண்ணிய அள்ளிக்குடிக்கிறாங்க. லண்டன் தேம்ஸ் நதியை அந்நாடு எப்படி சுத்தப்படுத்துனாங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அந்த தண்ணிய குடிநீருக்கு பயன்படுத்துறாங்க. இன்னிக்கு நீங்க என்னைக்காச்சும் திருமழிசை ஏரிகள்ல இருக்கற தண்ணிய அள்ளி குடிச்சிருக்கீங்களா…? குடிக்கமுடியுமா..?

நாங்க ஏழெட்டு வருஷத்துக்கு ஒரு முறை பாக்குறோங்க இந்த மாதிரி வெள்ளத்தை… அது ஒரு சுழற்சி. சொன்னா நம்பமாட்டீங்க. அத்தனை போராடுனோம். இது வெள்ளம் போற பகுதி, எங்க நிலங்கள் போறது ஒருபுறம் இருந்தாலும், அறிவியல்ரீதியா பார்த்தா இந்த இடத்துல துணைக்கோள் நகரம் அமைக்கக்கூடாதுன்னு அத்தனை முறை சொன்னோம். இப்போ இயற்கையே அதற்கு சாட்சி சொல்லிட்டு போயிடுச்சி. இப்பவாவது நம்புவீங்களா….?” ஆத்திரம் பொங்க பேசுகிறார் குத்தம்பாக்கம் இளங்கோ.

சென்னையின் அடுத்த அண்ணாநகர் என்று ரியல் எஸ்டேட்காரர்களால் அன்புடன் அழைக்கப்படும் பகுதி திருமழிசை. திருமழிசையைப் போன்றதொரு சிறப்பான நீர் பிடிப்பு பகுதியை இந்தியாவில் வேறெங்கும் பார்க்கமுடியாது என்கிறார் திருமழிசை குத்தம்பாக்கத்தை சேர்ந்த இளங்கோ.

இன்றளவும் முப்போகம் விவசாயம் நடக்குமிடம். தமிழ்நாட்டில் 70களில் ஏற்பட்ட கடும்பஞ்சத்தில் அரிசித் தட்டுப்பாடு வரும்போது லெவி ஒதுக்கீட்டின் படி 50ஆயிரம் நெல் மூட்டைகள் இங்கிருந்துதான் பெறப்பட்டன என்கிறார்கள் இவ்வூர் விவசாயிகள். வருடத்தின் எல்லா ஆண்டுகளிலும் அங்கிருக்கும் குளம், குட்டைகளில் நீரிருப்பதைக் காணலாம். இத்தகைய சிறப்புத் தகுதிகள் கொண்ட ஊர், அதுவும் சென்னைக்கு மிக அருகில் என்றால் ரியல் எஸ்டேட் கண்கள் சும்மா இருக்குமா என்ன…? ரியல் எஸ்டேட்காரர்களின் விளம்பரம் ஒரு புறம் எனில், குத்தம்பாக்கத்தின் ஒரு பகுதி குப்பைக்கிடங்காக அரசினால் அறிவிக்கப்பட்டது. அம்முயற்சியை மக்கள் போராட்டங்களால் முறியடித்ததில் இளங்கோவின் பங்கு முக்கியமானது.

அத்துடன் நிற்கவில்லை அரசின் அசட்டுத்தனம்.

ஸ்ரீபெரும்புதூர், திருமழிசை பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டபோது அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் விழா நடக்கும் மேடையிலேயே “கலைஞர் மனது வைத்தால் இவ்விடத்தில் துணைநகரம் அமைக்கலாம்” எனச் சொல்கிறார் ஒரு அதிகாரி.

முதலமைச்சரும் பச்சை பசேலேன அங்கு தெரியும் இவ்விடத்தில் “துணை நகரம் அமைக்க நாளையே அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்” என்கிறார். இதனைத்தையும் திருமழிசை பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் கேட்ட அதே வேளையில், சொல்லி சொல்லி சிரிக்கவும் செய்கின்றனர்.

ஏனெனில் அரசு அறிவித்த இடம் குத்தம்பாக்கத்தின் மேல்புறமிருக்கும் நேமம் ஏரியிலிருந்து மழை வெள்ளம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடப்படும் வழியில் இருக்கிறது. “இந்த வெள்ளம் போற பகுதில எப்படிப்பா துணைநகரம் கட்டுவாங்க என்று சிரித்த பின்னரே, தங்களின் நிலமும் போகும்” என்று கவலைப்பட்டிருக்கின்றனர் அவ்வூர் மக்கள்.

ஏனெனில் அந்தளவிற்கு நேமம் ஏரியிலிருந்து வெள்ளநீர் அசுரவேகத்துடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து சேருமிடமாம். அதுவும் செம்பரம்பாக்கம் ஏரியின் மிக முக்கிய நீராதாரம் நேமம் ஏரிதான். நேமம் ஏரியிலிருந்து தண்ணீர் அதிகளவு சென்றால்தான் செம்பா ஏரியே நிரம்புமாம். நேமம் ஏரி கிட்டத்தட்ட 1500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பேரம்பாக்கம், கூடைப்பாக்கம், கொண்டஞ்சேரி, வெள்ளேரிதாங்கல், பாப்பரம்பாக்கம், புதலூர், பாக்குப்பேட்டை, போலிவாக்கம் (?), சத்திரை, மப்பேடு போன்ற திருவள்ளுர் மாவட்டத்தின் மேடான ஊர்களிலுள்ள ஏரி, குளம், குட்டைகளிலிருந்து நீர் வடியும் இடம்தான் நேமம் ஏரி.

அதன் பின்னர் துணைநகரம் அமைக்கக்கூடாது என்ற மக்களின் தொடர் போராட்டம், அப்போது திமுக அரசில் அங்கம் வகித்த பாமக சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் தனிகவனம் எடுத்து போராடியது நினைவிருக்கலாம்…அப்படி ராமதாஸ் துணைநகரம் திருமழிசை பகுதியில் அமைக்கக்கூடாது என செய்த போராட்டம் எல்லாவற்றையும் அறிந்து அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி திருமழிசை துணைநகரம் கைவிடப்படுவதாக அறிவித்தார்.

http://andhimazhai.com/news/view/m-k-08-04-2013-a.html

அதன்பின் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு துணைநகரத்திட்டத்தை துணைக்கோள் நகரமாக அறிவித்து அசட்டுத்தனத்தை மீண்டும் அரங்கேற்றியது.

கடந்த மாதம் பெய்த பெருமழைக்கு முன்பாக அதாவது நவம்பர் 17-ஆம் தேதி வரையும் அவ்விடத்தில் வீட்டுவசதி வாரியத்தின் கீழ் மணல் நிரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் திருமழிசை மக்கள்.

அப்படி அசட்டுத்தனமாகவா துணைநகரத்தை தேர்ந்தெடுத்திருப்பார்கள் என அவ்விடத்திற்கு சென்று பார்த்தோம். உண்மையாகவே இதேபோன்று சுற்றுபுறச்சூழல் பற்றிய குறைந்தபட்ச அக்கறையில்லாத அதிகாரிகளின் கீழ், ஆட்சியாளர்களின் கீழ் நம் காலம் ஓடுகிறது என்பதை நினைக்கையில் அயர்ச்சியாக இருந்தது.

nemam lake
நேமம் ஏரி மதகு

நேமம் ஏரியிலிருந்து நேர்கிழக்காக ஓடும் வெள்ளநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்வதற்கு முன்பாக ஒரு இடத்தில் வளைகிறது. அவ்விடம்தான் துணைக்கோள் நகரம் அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம். அவ்விடத்தில் வளைந்து பெங்களுர் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு பாலம் வழியாக நுழைந்து மறுபுறம் இருக்கும் செம்பா ஏரிக்குச் செல்கிறது.

இம்முறை பெய்த மழை ஏரி கொள்ளாது, கால்வாய் கொள்ளாது பாலம் வழியாக பாதி, பின் திரும்பி கிழக்காக ஓடி கூவம் ஆற்றிலும் கலந்திருக்கிறது. அதனால்தான் கூவம் ஆற்றிலும் அத்தகைய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளமென்றால் கற்பனை செய்யமுடியாத வெள்ளம், வேகமும் அவ்வாறே. அதை அங்கிருக்கும் செல்ஃபோனில் படமெடுத்து வைத்துள்ளனர். துணைநகரமாவது, துணைக்கோள் நகரமாவது… அனைத்தும் வெள்ளம்தான். ஒருவேளை இங்கு துணைக்கோள் நகரம் அமைக்கப்பட்டால் வழிமறிக்கப்படும் வெள்ளம் எங்கு திரும்பும் எனத் தெரியாது. அப்புறம் எல்லாம் போச்சே…. என கூவியழ வேண்டியது மக்கள் நாமாகத்தான் இருப்போம்.

எத்தனையோ முறை குத்தம்பாக்கம் சென்றிருக்கிறோம். ஆனால் அதற்கு பக்கத்தில் இத்தனை பெரிய நேமம் ஏரி உள்ளதென தெரியாது. சொல்லக்கேட்டிருக்கிறோம். இப்போது அதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்களுடன் திருமழிசை பகுதி விவசாயிகள், குத்தம்பாக்கம் இளங்கோ அனைவரும் உடன் வந்தனர்.

ஏரிக்கரை ஏறிக்கொண்டிருக்கையில் பின்தங்கிய முதியவர் ஒருவர் ” அய்யோ யம்மா வந்து எத்தனை வருஷம் ஆச்சி” என சொல்லிக்கொண்டே மேலேறினார்.

கரை மேல் சென்றதும்தான் தாமதம் “அய்யோ யம்மா… ஏ யம்மா.. என்னா தண்ணி… எவ்வளவு பெருசு. ஏ தாண்டவா இதுக்கு முன்னாடி ஏரி இவ்வளவு பெருசா இருந்துச்சாடா.. இம்புட்டு தண்ணி இருந்துச்சாடா” என ஆர்வம் தாங்காமல் கேட்டுக்கொண்டே வந்தார்.

எனக்கோ சிரிப்பான சிரிப்பு…

“ஏ குழந்தே… சென்னை முழுக்க வெள்ளம் வெள்ளன்னீங்களே. எல்லாம் இங்கருந்து போனதுதான் (ம்க்கும் இதுல பெருமை வேற என்று நினைத்துக்கொண்டேன்.) நேமம் ஏரிலருந்துதான் செம்பரம்பாக்கம் ஏரீக்கு நிறைய தண்ணி போகும். இந்த முறை புதுசா மதகு கட்டுனாங்க. அத திறக்கக்கூட இல்ல. ஏரி நிரம்புற பாத்துட்டு பயந்து போன அதிகாரிங்க அத்த ஒரே அடியா தூக்கிவிட்டாங்க. எல்லாம் போயிடுச்சி… பானையில தண்ணி நிரம்புனா அது அஞ்சு பக்கமும் தானா வழிஞ்சி போயிடும் இல்ல. அத மாதிரி ஏரிய சுத்தி இருக்கற கலங்கல் பகுதிலயே எல்லா வெள்ளமும் வடியும். அந்த கலங்கல பராமரிச்சாலே போதும். ஆனா பாரு அந்த புது மதகு ஒரேயடியா தூக்குனா என்னாகும். தண்ணியெல்லாம் போயிடுச்சி… இப்ப பாரு அரை ஏரிதான் தண்ணி நிக்குது. எல்லாம் வீணா போச்சி. இத விட்டுட்டு செம்பரம்பாக்கம் ஏரிய குத்தம் சொல்லாதீங்க…”

“அதுவும் மேடம் இவங்க கட்டுனாங்களே மதகு… திறக்கக்கூட இல்ல. இந்த வெள்ளத்தோடதான் திறந்தாங்க. அதுல ஒரு ஷட்டர் வேலை செய்யல. இரண்டு பக்கமும் மதகு உக்காந்துடுச்சி. மணல் மூட்டைய போட்டு வச்சிருக்காங்க. அதோட பாருங்க மதகு எங்க கட்டுவாங்க. பள்ளக்கால் பகுதிலதான் கட்டுவாங்க. ஆனா இங்க பாருங்க… எங்க கட்டிருக்காங்கன்னு..? குத்தம்பாக்கம் கிராமத்தோட தலைக்கு நேரா… ஒருவேளை இந்த வெள்ளம் கால்வாயை உடைச்சிட்டு போயிருந்துச்சின்னா இந்த ஊரே அழிஞ்சிருக்கும். நல்ல வேளையா அப்படி எதுவும் நடக்கல” என்கிறார் இன்னொரு விவசாயி.

அந்த மதகின் மேலிருந்து பார்த்தால் நேர் கிழக்கே தெரிகிறது அரசு அறிவித்த துணைக்கோள் நகரத்திற்கான இடம்.

நம் கண்ணை நாமே குத்திக்கொண்டு எல்லாம் போச்சே என்பது போலிருக்கிறது நம்முடைய வலி. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரக்கூடிய நீராதாரங்களில் முக்கியமானது. ஏரிக்கு மேல்பக்கம் இருக்கும் பிள்ளைப்பாக்கம் ஏரியின் அறிவிப்பு பலகை இதை ” அடையாறு உபவடிநிலை” ஏரி என்கிறது. பிள்ளைப்பாக்கம் ஏரிக்கும் போகும் வழியில் சோமங்கலம் ஏரி, நந்தம்பாக்கம் ஏரி, நெல்லூர் ஏரி, அமரம்பேடு ஏரி, வெங்காடு ஏரி என ஐந்து ஏரிகளை கடந்துதான் செல்லவேண்டும். இத்தனை ஏரிகளையும் மழை நிறைத்து வைத்திருக்கிறது. அனைத்து ஏரிகளும் குன்றத்தூரிலிருந்து போகையில் சாலையின் இடதுபுறமுள்ளன. வலது புறம் புசுபுசுவென மூங்கில் மரங்கள் வளர்ந்து நாம் போகும் பாதையை பசுமையான உணர்வாக்குகின்றன. அதோடு ஏரியைச் சுற்றி சூழ அமைந்திருக்கின்றன ஸ்ரீபெரும்புதூரின் தொழிற்சாலைகள்.

இந்த ஏரிகளனைத்திற்கும் சௌத்ரி கால்வாய் எனப்படும் கால்வாயுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. பிள்ளைப்பாக்கம் ஏரியை சுற்றிலும் பூந்தூர், மாம்பாக்கம், கடுஞ்சேரி, பெரிய சத்திரம், காரணை போன்ற ஊர்கள் உள்ளன. காஞ்சிபுரத்திலிருக்கும் ஏரிகளுக்கும், இதற்கும் தொடர்பிருக்கிறது. பாலாற்றுக் கால்வாய் ஒன்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வருகிறதென சொல்கிறார்கள் அவ்வூரின் பெரியவர்கள்.

பிள்ளைப்பாக்கம் ஏரி மூன்று கலங்கல்களை தாண்டி நிரம்பி வழிந்து வெள்ளமாய் பாய்ந்த இடங்களில் முட்செடிகள் இன்னும் தலை குனிந்து கிடக்கின்றன. பிள்ளைப்பாக்கம் ஏரியின் வெள்ளம் ஸ்ரீபெரும்புதூர் சாலையைத் தாண்டி, கீழ்புறமிருக்கும் அனைத்து சிறிய ஏரிகளுக்கான ஆக்கிரமிப்பு வழிகளை உடைத்தபடி அவைகளை நிரப்பி பெரிய ஏரியை வந்தடைந்திருக்கின்றன. இதே போன்று செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிலும் நிறைய ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் அவற்றிற்கான வரத்துக் கால்வாய்களும், போக்குக் கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டு அடைபட்டு கிடப்பதுதான் போரூர், பூந்தமல்லி பகுதிகள் வெள்ளக்காடானது.

“செம்பரம்பாக்கம் ஏரிக்குன்னு 9 மதகுகள் இருக்கு. மூன்று பெரிய கலங்கல்கள் இருக்கு. ஒவ்வொரு மதகுலயும் ஒவ்வொரு கால்வாய் அதுல ஒரு பெரிய மதகுலருந்து மட்டும் மூன்று கால்வாய் ஓடுது. கோவூர் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய்… இந்த மணப்பாக்கம் கால்வாய் அடையாறு மாதிரி ரொம்ப பெருசா இருக்கும். எம்ஜிஆர் வீட்டுப்பக்கம் ஓடுறது இதுதான். இன்னிக்கு பத்துமீட்டர் அகலம் கூட இல்ல. எல்லாம் ஆக்கிரமிச்சீட்டீங்க.. அப்புறம் குன்றத்தூரான் கால்வாய், குளத்தூர் கால்வாய், ஆனைபுத்தூர கால்வாய், மாங்காடு -ரெட்டை ஏரீ கால்வாய், மலையம்பாக்கம் கால்வாய், போரூர் கால்வாய், விருகம்பாக்கம் ஓடைன்னு எல்லாம் செம்பரம்பாக்கத்தோட போக்கு கால்வாய்கள். எல்லாத்தையும ஆக்கிரமிச்சி வீடு கட்டிட்டு இன்னிக்கு செம்பரம்பாக்கம் வெள்ளம்தான் சென்னைய மூழ்கடிச்சதுன்னு ஏன் சொல்றீங்க?”  நம்மை பார்த்து கேள்வி கேட்கிறார் செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

படங்கள்: 1. செம்பரம்பாக்கம் ஏரி 2,3 வெங்காடு ஏரி 4. பிள்ளைப்பாக்கம் ஏரி, 5,6,7. பிள்ளைப்பாக்கம் ஏரி கலங்கல், 8.நேமம் ஏரி 9.நேமம் ஏரி மதகு 10. சௌத்ரி கால்வாய்

செம்பரம்பாக்கம் ஏரி – பெருமழைக் காலத்தில் நம் அனைவராலும் பயத்துடன் உற்றுநோக்கப்பட்ட ஏரி. அவ்வளவு ஏன் செம்பரம்பாக்கம் ஏரியை நாம் அனைவரும் ஒரு வில்லனாகத்தான் பார்த்தோம். காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை மூன்று மாவட்டங்களில் இருக்கும் ஏரிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நுண்ணிய தொடர்பை கொண்டிருக்கின்றன என்பதை ஒரு நடை போய் பார்த்தால் தெரியும். ரௌத்ரம் பழகு நிகழ்ச்சிக்காக அப்படி இரண்டு இடங்களை பார்க்க முடிந்தது.

பிள்ளைப்பாக்கம் ஏரி – திருப்பெரும்புதூர்
நேமம் ஏரி – திருவள்ளுர்

புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகும் ரௌத்ரம் பழகு நிகழ்ச்சியின் பேசுபொருள் இது.

சனிக்கிழமை மாலை 5.30 – 6.00 மணி முதல்
ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 – 9.00 மணி வரை இந்த நிகழ்ச்சியைக் காணலாம்.

இளமதி சாய்ராம், பத்திரிகையாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.