பத்திரிகையாளர்கள் கொலை: ஊடகங்களின் கார்ப்பரேட் மயமாக்கலுக்கு தரும் கூலியா?

கார்ல் மார்க்ஸ்

கார்ல் மாக்ஸ்
கார்ல் மாக்ஸ்

இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 110 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி.

ஒருபுறம், ஊடகங்கள் சோரம் போய்க்கொண்டே இருக்கின்றன. வெகுமக்களின் உளவியல், விஜயகாந்தின் சீற்றத்தைக் கொண்டாடுவதிலிருந்து, இதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. மறுபுறம், பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இது ஏன் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று ஊடகங்கள், அரசுசார்பு ஊடகங்கள் அல்லது அரசுடன் சமரசம் செய்துகொள்ளும் ஊடகங்கள் என்ற இரண்டு வகைப்பாட்டிற்குள் வந்துவிடுகின்றன. ஒரு ஊடகம் ஆளும் அரசொன்றால் நசுக்கப்படுகிறபோது, அதற்குக் கைகொடுக்க அல்லது காப்பாற்ற அப்போது ஆட்சியில் இல்லாத மற்றொரு கட்சியின் ஆதரவு அந்த ஊடகத்துக்குத் தேவைப்படுகிறது. அதுவொரு சமரசம்தான். எதார்த்தத்தில் இந்த சமரசத்திற்கு உடன்படாத ஊடகம் நலிந்து மறைந்துவிடும். இந்த உதவிக்கு ஈடாக உதவி செய்த கட்சி சில சலுகைகளை எதிர்பார்க்கும் தான். அதற்கு எந்த அளவுக்கு ஒரு ஊடகம் வளைந்து கொடுக்கிறது என்பதுதான் முக்கியம். நம்பகைதன்மையை இழக்காமல், அதே நேரம் தனது சமரசங்களையும் அது கைகொண்டாக வேண்டும். இதன் ஊடாக ஒரு ஊடகம் தனக்குள்ளே சீரழிவதும் இருக்கிறது.

உண்மையாகவே ஒரு ஊடகம், தனித்தியங்கும் சாத்தியங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. அரசிடம் இருந்து வரும் அழுத்தமாவது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுத் தனியக்கூடியது. ஆட்சி மாறுகிறபோது ஆசுவாசமடைய வாய்ப்புண்டு. ஆனால் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை மற்றும் அது குறித்த செய்திகள் என்று வருகிறபோது ஊடகங்கள் நிலைத்த நீடித்த அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. குறிப்பாக கனிமவளக்கொள்ளையில் ஈடுபடும் சிறிய மற்றும் பெரும் நிறுவனங்களின் அச்சுறுத்தல்.
இதுவரைக் கொல்லப்பட்டிருக்கிற ஊடகவியலாளர்களைக் கவனித்தால், அவர்கள் பெரும்பான்மை, இவர்களால்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கட்சி பாரபட்சம் இல்லாமல், அவர்களது ஆதிக்கம் எல்லா இடங்களிலும் உண்டு என்கிறபோது, அவர்களால் எளிதில் ஊடகங்களை மிரட்ட முடிகிறது. சில தைரியமான இதழாளர்கள் அவர்களது சுரண்டலை மக்களிடம் கொண்டுவருகிறபோது, அதை வெளிப்படுத்தியே ஆகவேண்டிய நிர்பந்தம், ஊடகங்களுக்கும் அரசுக்கும் ஏற்படுகிறது. அதுவொரு தவிர்க்க முடியாத அழுத்தம். அதனால் தான் அந்தச் செய்தியை எப்படியாவது மறைக்க முயல்கிறார்கள். அது கொலை வரைப்போகிறது. இது மிகவும் சீரழிந்து, எங்கெல்லாம் கனிமக்கொள்ளை இருக்கிறதோ, அங்கெல்லாம் இதழாளர்கள் கொல்லப்படுவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

மணற்கொள்ளையைத் தடுக்கப்போகும் தாசில்தார் மீதே வண்டி ஏற்றிக் கொல்லும்  நிலையில், எளிதான பத்திரிகையாளர்களின் சூழல், மிகவும் ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இதன் வளர்ச்சியாக அல்லது உச்சமாக கார்ப்பரேட்டுகள், ஊடகப்பங்குகளை வாங்கி அவற்றை வளைக்கிறார்கள். மட்டுமல்லாது ஊடகங்களும் கார்பரேட்டுகளாக மாறி வருகின்றன. ஒரு வணிக நிறுவனத்தைப்போல் ஊடகம் இயங்கத்தொடங்குகிறபோது, அதில் நேர்மையான இதழாளர்களின் எல்லைகள் சுருங்கிப்போகின்றன. ஆபத்தின் எல்லைகள் விரிகின்றன.

இந்த உலகப் பொருளாதாரமய சூழலில் யார் யாரைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற சூட்சுமம் நமக்குப் பிடிபடுவதே இல்லை. இன்றைய நவீன உலகத்தில் செய்திகள் என்பவை அதிகாரத்தின் கருவியாக மாறியிருக்கிறது. ஒரு செய்தியை மறைப்பதன் வழியாக அல்லது திரிப்பதன் வழியாக வெகுமக்கள் உளவியலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். இந்த இடத்தில்தான் ஒரு சிவில் சமூகமாக நமது பொறுப்புகள் கூடுகின்றன. கூட்டத்தோடு சேர்ந்து துப்புவதன் மூலம் நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதே எதார்த்தம். இனி, ஒரு செய்தியை அப்படியே நம்பும் சொகுசு நமக்கு இல்லை. அதனூடாக உண்மையைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச உழைப்பை, நாம் செலுத்தியாக வேண்டும். அதுதான் இறந்துவிட்ட இதழாளர்களுக்கு, நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும்.

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.