விஜயகாந்த் எந்த வகையில் மாற்று அரசியல் செய்கிறார்? ஊழலிலா, வாரிசு அரசியலிலா, சமூகநீதி சார்ந்த மாற்றுப் பார்வையிலா?

கார்ல் மாக்ஸ்

கார்ல் மாக்ஸ்
கார்ல் மாக்ஸ்

தொண்ணூறுகளில் வடமாவட்ட கிராமங்களில் பயணம் செய்ய வாய்ப்பிருந்தவர்கள் கவனித்திருக்கலாம். திமுக, அதிமுக கொடிக்கம்பங்களுக்குப் பிறகு விஜயகாந்தின் ரசிகர்மன்ற போர்டுகள் எல்லா ஊர்களிலும் இருக்கும். ஊடகங்கள் எல்லாம், ரஜினியின் புகழை ஊதிப்பெருக்கிக் கொண்டிருந்த அதே தொண்ணூறுகளில், யதார்த்தத்தில் கிராமங்களில் புகுந்திருந்தது விஜயகாந்த் தான். தென்மாவட்டங்களில் அவர் ஒரு மதுரைக்காரர் என்ற பிம்பம் சாதாரணமாகவே அவர்மீதான ஈர்ப்பை உருவாக்கி வைத்திருந்தது.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களில் கவனிக்கத்தக்கவை என்றால் ஒன்று, பாமக திராவிடக் கட்சிகளுடன் பேரம் பேசும் அளவுக்கு வளர்ந்து, தமது வன்னிய ஓட்டு வங்கியை வடமாவட்டங்களில் வளர்த்தெடுத்து நிலைக்க வைத்தது. இரண்டாவது, விடுதலைச் சிறுத்தைகளின் உருவாக்கமும் வளர்ச்சியும். மூன்றாவது, ஆரம்ப கட்ட சலசலப்புகளை மீறி பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் தங்களது நல்லுறவைப் பேணிக்கொண்டன.

திமுக, அதிமுக கட்சிகளின் மீதான அதிருப்தி என்பது ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்று மற்றொன்றிற்கு உதவுவதாகவே இருந்தது. பாமக தான் இந்தக் கணக்கில் முதலில் குறுக்கீடு செய்த கட்சி. பாமகவுடன் கூட்டணி என்றாலே அது வெற்றிக்கூட்டணிதான் என்று இரண்டு திராவிடக் கட்சிகளுமே நினைத்தன. அது நடக்கவும் செய்தது. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், அந்தக் கூட்டணிக்கு தனது மக்களை வாக்களிக்கச் வைக்கும் நம்பிக்கையை அந்த மக்களிடம் ராமதாஸ் ஏற்படுத்தி வைத்திருந்தது இந்த பேர அரசியலில் ஒரு முக்கியமான அம்சம். இதைத் திருமாவளவனால் இப்போதுவரை வெற்றிகரமாகச் செய்ய இயலவில்லை. அதற்கு பல காரணிகள் உண்டு. திருமா மட்டும் அதற்கு பொறுப்பில்லை.

இந்தப் பின்னணியில்தான் நாம் விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தையும் அவருக்குக் கிடைத்த ஊடக வரவேற்பையும் மதிப்பிட வேண்டும். விஜயகாந்தின் வரவு என்பது வெளிப்படையாக பாமகவின் பேரம் பேசும் சக்தியில் சேதத்தை உண்டு பண்ணியிருக்கிறது. அது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு வகையில் மகிழ்ச்சியளிக்கக் கூடியதுதான். ஊடகங்களுக்கு ரஜினி இல்லாத வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஒரு பிம்பம் தேவைப்பட்டது. அதே சமயம் விஜயகாந்துக்கு அளிக்கப்பட்ட ஊடக வரவேற்புக்குப் பின்னால் அரசியல் இல்லாமலும் இல்லை. ஊடகங்கள் விஜயகாந்தின் கோமாளித்தனத்தை முன்வைத்து தங்களது அரசியலை மறைத்துக்கொண்டன. இப்போது அவர் காறித்துப்பினாலும் ஊடகங்கள் அவரைக் கைவிடாது என்பதிலிருந்து நீங்கள் அதைப் புரிந்துகொள்ளலாம்.

பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் சமூகப் பங்களிப்பு, போராட்ட வழிமுறை, அவை பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் திரள் என்று காணும்போது விஜயகாந்த் மேற்கொள்ளும் அரசியல் என்ன?? அவரது சமூகப் பங்களிப்பு என்ன? அவர் பிரதிநிதுத்துவப்படுத்தும் மக்கள் திரள் யார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இந்த இடத்தில் பாமகவையும், சிறுத்தைகளையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்க்கிறேன், சாதீய மோதல்களைக் கணக்கில் கொண்டு பார்க்கிறபோது அவையிரண்டும் எதிரெதிர் இல்லையா என்று நினைக்கலாம். ஆமாம். அவை முரண்களுடையவைதான். ஆனால், விஜயகாந்த் முன்னிறுத்தப்படுவதன் மூலம் கணிசமான அளவில் விடுதலைச் சிறுத்தைகளும் பெருமபான்மை ஊடகப்பார்வையில் இருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் கவனிக்கத்தான் வேண்டும். இந்த நுண்ணரசியலை நாம் எளிதில் கடந்துவிட முடியாது.

இரண்டு திராவிடக் கட்சிகளுக்குமே சீரழிந்தவைதான் என்றும், அவற்றிற்கு மாற்றைத்தேடுவது முக்கியம் என்றும் வளர்த்தெடுக்கப்படுகிற விவாதம் தேவையான ஒன்றுதான். ஆனால் அதே நேரத்தில், விஜயகாந்தின் அரசியல் பார்வைகள் என்ன என்றும் தீவிரமாக விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரே நேரத்தில் மக்கள் மீது அக்கறை கொண்ட அரசியல்வாதியாகவும், நகைப்பூட்டும் கோமாளியாகவும் அவர் இருக்க முடியாது. சரியே தவறோ, அவர் மீடியாவின் வெளிச்சத்தில் எல்லா காலத்திலும் இருந்துகொண்டே இருப்பதற்குப் பின்னால் யாருடைய நலன்கள் ஒளிந்திருக்கின்றன என்பது அந்த விவாதத்தில் மையப்படுத்தப்பட வேண்டும்.

கடுமையான விமர்சனங்களை முன் வைக்கவேண்டிய விஜயகாந்தின் ஆளுமைக் குறைபாட்டைக் கூட நாம் கேலியாகக் கடந்து சென்றுவிட முடியுமா என்ன? மாற்று அரசியல் என்பது, இங்கு இருக்கும் பெரிய கட்சிகள் மீதான அதிருப்தியில் இருந்து மாத்திரம் உருவாகிவிட முடியாது. அது மக்களின் தேவைகளிலிருந்து மேலெழுந்து நிலைபெறுவது. குறைந்தபட்சம் அதற்கு ஒரு போராட்டப் பின்னணி இருக்க வேண்டும்.

மிக எளிமையாக, இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் விஜயகாந்த் எந்த வகையில் மாற்று என்றாவது தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஊழலிலா, வாரிசு அரசியலிலா, சமூகநீதி சார்ந்த மாற்றுப் பார்வையிலா, மத நல்லிணக்கத்திலா, மாற்றுப் பொருளியலிலா எதில் அவர் மாற்று அரசியலை முன்வைக்கிறார்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.