- ‘இலவச அடிப்படை இணையம் (Free Basics)’ என்ற சங்கதிக்கு ஆதரவு தருமாறு கேட்டு பேஸ்புக் பரப்புரை செய்கிறது. இது உங்களின் கருத்து சுதந்திரத்தையும், இலவச தகவல் அறியும் உரிமையையும் பாதிக்கும் செயல் மட்டுமல்ல. உங்களிடமிருந்து பெரிய அளவில் கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கும் திட்டமுமாகும்.
- மேம்போக்காக பார்த்தால் அனைவருக்கும் இலவச இணையம் கிடைப்பது போன்ற பரப்புரையாக சமூக அக்கறை உடையதாக தெரியலாம். ஆனால் இதில் அவர்கள் சேர்த்திருக்கும் வார்த்தை மிக மிக உண்ணிப்பாக ஆராயப்பட வேண்டியது.
- “Basics” அதாவது ‘அடிப்படை.’ அதென்ன அடிப்படை இணையம் (Basic Internet) என்று நீங்கள் கேள்வி கேட்கும் பொழுது தான் கார்ப்பரேட்களின் சதி வெளிப்படும். அதாவது இணையத்தில் கிடைக்கும் ஒரு சில வசதிகளை மட்டுமே இலவசமாக பெறலாம் என்றும் முக்கியமான தகவல்களோ, இணைய அடிப்படையிலான தேவைகளையோ பயன்படுத்திக் கொள்ள வெவ்வேறு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று அர்த்தம்.
- இதனை முழுமையாக புரிந்து கொள்ள ஒரு உதாரணம்… நம் அனைவரின் வீட்டிலும் தொலைக்காட்சி இணைப்பு இருக்கும். இப்பொழுது எல்லோருக்கும் விருப்பமான ஒரு சேனலை நீங்கள் பெற வேண்டும் என்றால், அதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருக்கிறது அல்லவா? அது போல (TRAI ஒப்புதல் அளித்துவிட்டால்) இணையத்தின் மிக முக்கியமான அதிகமாக உபயோகிக்கக் கூடிய சேவைகளுக்கு பிற்காலத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். தற்பொழுது உள்ள whatsapp, Calls, video calls போன்றவை மட்டுமல்லாமல், இணைய வங்கி சேவை, இணையத்தில் முக்கிமான தகவல் களஞ்சியங்களைத் தேடவும், உங்களது சிந்தனைகளைப் பதிவிடவும் கூட பிரத்தியேக கட்டணங்கள் வசூலிக்கப்படலாம்.
- wikipedia போன்று இலவசத் தகவல்கள் அளிக்க வேண்டும் என்ற குறிக்கோள்கள் உடைய இணைய தளமாக இருந்தாலும் அந்த இணையத்தை பார்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஒரு பக்கம் இது இணைய பயனீட்டாளர்களிடம் ஏற்படுத்தப்படும் சிக்கல் என்றால்; மறுபக்கம் இதே wikipedia நிறுவனம் தனது குறிக்கோளில் விடாபிடியாக, இலவசமாக அளிக்க விரும்பினால், அந்த நிறுவனம் இணைய சேவையை கட்டுபடுத்துபவர்களுக்கு பெறும் தொகை அளிக்க வேண்டி இருக்கும். இது அந்நிறுவனத்தை சீர்குலைக்கச் செய்யும்.
- இது மட்டுமல்லாமல் புதிதாக ஒரு இணையதளம் தொடங்குபவர்களும், அதன் மூலம் தொழில் வாய்ப்பு பெற நினைப்பவர்களும் தங்களது சேவைகளை அனைவருக்கும் சென்று சேருமாறு உருவாக்க முடியாத நிலை ஏற்படும். இது பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் சதி செயலாகும். குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவனம், ஃபேஸ்புக் போன்ற இன்னொரு நிறுவனம் உருவாவதை தடுக்கும் செயலாகும்.
- சுருக்கமாக கூறுவதென்றால் – பிறரின் புகைப்படத்தை பார்ப்பதற்கு இலவசம் என்றும், உங்களது புகைப்படத்தை பதிவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
- இப்போது நாம் பயன்படுத்தும் இணைய தொடர்பானது எந்த வலைதளத்திற்கும் பக்க சார்பில்லாதது. நாம் http://www.facebook.com என்ற பேஸ்புக்கின் வலைதளத்தை உபயோகித்தாலும் http://www.tn.gov.in என்ற தமிழக அரசின் வலைதளத்தை உபயோகித்தாலும் அல்லது plus.google.com/ என்ற பேஸ்புக்கின் போட்டியாளர்களான கூகிளின் வலைத் தளத்தை உபயோகித்தாலும் எல்லா இணைய தளங்களும் ஒரே வேகத்தில் இயங்கும். நமது இணைய இணைப்பை பொறுத்து தான் வேகம் கூடவும் குறையுமே தவிர இணைய தளங்களை பொறுத்து அல்ல.
- இப்படி உலகெங்கிலும் இணையதளத்தில் உள்ள சமநிலையைத் தான் Net Neutrality என்று சொல்கிறோம். இந்த சமநிலை குலைக்கும் திட்டத்தின் ஒரு அங்கம் தான் ஃபேஸ்புக் உலகெங்கும் முன்னெடுக்கும் Internet.org. இதன் மூலம் Internet.org யில் இணையும் வலை தளங்களுக்கு “இலவச” சேவையை இணைய சேவை நிறுவனங்கள் வழங்கும். இப்படியான இலவச சேவை என்பது குறிப்பிட்ட சில வலைத் தளங்களுக்கு மட்டும் தான். உதாரணத்திற்கு பேஸ்புக்கை இலவசமாக கட்டணமின்றி உபயோகிக்கலாம். நாட்கள் செல்ல செல்ல மற்ற சமூக வலைத் தளங்களை மக்கள் உபயோகத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடுவார்கள்.
- இப்போது ஃபேஸ்புக் போன்ற வலை தள நிறுவனங்களும் ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற இணைய சேவை நிறுவனங்களும் (Internet Service Providers) கூட்டுவைத்துக்கொண்டு, குறிப்பிட்ட சில இணைய தளங்களுக்கு இணைய வேகத்தில் (Internet Speed) முன்னுரிமை அளிக்க முயல்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு போட்டியாக உள்ள இணைய தளங்களின் வேகத்தை குறைத்து அந்த இணைய தளங்களை முற்றிலுமாக முடக்கலாம். உதாரணத்திற்கு ஒரு இணைய தளத்தில் கார்ப்ரேட்டுகள் பற்றிய எதிர்மறைத் தகவல்கள் அதிகமாக வருகிறது என்றால் அந்த இணைய தளத்தின் வேகத்தை இணைய சேவை நிறுவனங்கள் குறைக்கும். இதனால் மக்கள் வேகம் குறைவாக உள்ள இணையதளத்தை பார்க்க யோசிப்பார்கள்.
- சில நாட்களுக்கு முன் Internet.org என்ற பெயரில் வந்த விளம்பரங்களுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. TRAIயில் முறையீடு செய்யப்பட்டது. அந்த எதிர்ப்பால் இப்போது Free Basics என்ற புதுப்பெயரில் ஃபேஸ்புக் வந்திருக்கிறது. Free Basics என்பது ஃபேஸ்புக் போன்ற குறிப்பிட்ட சில இணைய தளங்களை மட்டும் கட்டணமின்றி மக்களை உபயோகிக்க ஊக்கப்படுத்திவிட்டு அவர்கள் அந்த இணைய தளங்களை தொடர்ந்து உபயோக்கிக்கும் நிலைக்கு தள்ளுவது.
- 2006 காலக்கட்டத்தில் இருந்த Orkut.com இப்போது இல்லை. இப்போது இருக்கும் பேஸ்புக் கூட புதிய வேறொரு சமூக வலைதளம் வந்தால் காணாமல் போய்விடும் அதனை தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் மக்களை ஏமாற்றும் செயல் தான் Free Basics முழக்கம்.
இலவசங்கள் எப்போதும் ஆபத்தானது. ஃபேஸ்புக்கின் பிரச்சாரத்திற்கு எதிரான கடிதங்களை TRAIக்கு அனுப்ப கீழே உள்ள லிங்கை உபயோகிக்கவும்.
http://www.savetheinternet.in/
- செல் முருகன், Kanniyari Saravanan
savetheinternet
LikeLike